For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோர்ட் கலவரம்-பின்னணியில் அதிமுகவோ?-துரைமுருகன்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி வந்த பிறகுதான் உயர் நீதிமன்றத்தில் மோதல் ஏற்பட்டதாகவும், அவருக்கு பின்னணியில் சில அரசியல் கட்சிகள் இருந்து கொண்டு தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேட முயல்வதாகவும் சட்ட அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் புகார் கூறினார்.

மேலும் சுப்பிரமணிய சாமிக்கு அதிமுக வக்காலத்து வாங்குவதை பார்த்தால் அதிமுகவோ, அதன் தலைமையோ இதன் பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது என்றும் துரைமுருகன் கூறினார்.

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம், மதிமுக உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் எழுந்து, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் இன்று நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை தடை விதித்தது குறித்து பிரச்சனை கிளப்பினர்.

அவர்கள் கூறுகையில், ஜனநாயக ரீதியில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பும் அரசியல் கட்சியினருக்கு காவல்துறை தடை விதிப்பது நியாயமா? என்றனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி, இலங்கை தமிழர் பிரச்சனைகளுக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்தே வந்துள்ளது. ஆனால் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்தையடுத்துத் தான் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது என்றார்.

சுப்பிரமணிய சாமி வந்ததால் பிரச்சனை...

அப்போது சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:

வழக்கறிஞர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார்கள். கோர்ட் புறக்கணிப்பு, உள்ளிருப்புப் போராட்டம் என்று நடத்தினார்கள். அப்போதெல்லாம் பிரச்சனை எதுவும் இல்லை.

ஆனால் சுப்பிரமணிய சாமி எந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லாமல் கோர்ட்டுக்கு போன பின்னர் தான் பிரச்சனை உருவானது. அவர் மீது அழுகிய முட்டை வீசப்பட்டுள்ளது. எந்த வழக்கறிஞரும் அழுகிய முட்டைகளை பையில் எடுத்து கொண்டு உயர் நீதிமன்றத்துக்கு போயிருக்க மாட்டார்.

திட்டமிட்டு கலவரம்....

ஏற்கனவே திட்டமிட்டு கலவரம் விளைவிக்க வேண்டும். ஜாதி பிரச்சனையை உருவாக்கி இதை அரசியலாக்க வேண்டும் என்று கருதிதான் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது.

சிலர் இன்னும் 10, 15 நாட்களில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை உருவாகும். இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும். நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்றெல்லாம் பேசுகின்றனர்.

சாமியை ஏவிவிட்டு அரசியல்....

இதனால் சுப்பிரமணிய சாமியை ஏவிவிட்டு இந்த ஆட்சிக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள். எனவேதான் உயர்நீதிமன்ற பிரச்சனை திசைமாற்றப்பட்டு அது அரசியலாக்கப்பட்டுவிட்டது.

இதைத் தொடர்ந்து தான் பஸ் எரிப்பு, வழக்கறிஞர்கள், போலீசாரிடையே மோதல் என்றெல்லாம் பிரச்சனை உருவாகிவருகிறது.

(அப்போது அதிமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக கூச்சலிட்டனர்)

உங்களுக்கு ஏன் ரோஷம் வருது....

தொடர்ந்து பேசிய துரைமுருகன், நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. உங்களுக்கு ஏன் ரோஷம் வருகிறது?. குற்றம் உள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும்?.

சுப்பிரமணிய சாமியை பின்னணியாக வைத்து சிலர் செய்த ஏற்பாட்டினால்தான் இந்த பிரச்சனை. இது அரசியலாக்கப்பட்டுவிட்டது. இதை திமுக நிச்சயம் சந்திக்கும்.

(மீண்டும் அதிமுகவினர் எழுந்து நின்று கூச்சலிடவே திமுக எம்பிக்கள் பதிலுக்கு குரல் எழுப்பினர். இதனால் அவையில் குழப்பம் நிலவியது)

ஆனாலும் தொடர்ந்து பேசிய துரைமுருகன், இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழக முதல்வர் மிகக் கடுமையான முதுகு தண்டுவட ஆபரேஷன் செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையிலும், ஆம்புலன்ஸ் வண்டியில் வந்து உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியை சந்திக்கிறேன் என்று கடிதம் எழுதியிருந்தார்.

வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்காக தாமே உண்ணாவிரதம் இருக்கத் தயார் என்றும் அறிவித்துள்ளார். இப்படி அமைதி வழியில், அறவழியில் நடைபெறும் இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்காக கூட்டுச்சதி செய்து, திட்டமிட்டு இந்த பிரச்சனையை அரசியலாக்குகிறார்கள் என்றார் துரைமுருகன்.

இதையடுத்துப் பேசிய அதிமுக எம்எல்ஏ பன்னீர் செல்வம்,
பொதுப்பணித்துறை அமைச்சர் சம்பந்தம் இல்லாமல் சில கருத்துக்களை இங்கே தெரிவிக்கிறார். உயர்நீதிமன்ற பிரச்சனை விசாரணையில் உள்ளது. இந்த நேரத்தில் சட்ட அமைச்சர் இப்படிப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பது எந்தவகையில் நியாயம்?

அதிமுக தான் பின்னணியில் இருக்குமோ?....

அமைச்சர் துரைமுருகன்: நான் வழக்கு தொடர்பாக எதையும் பேசவில்லை. சுப்பிரமணிய சாமி உயர்நீதிமன்றத்துக்கு வந்தபிறகுதான் பிரச்சனை திசைமாறி சென்றுள்ளது. சில அரசியல் கட்சிகள் அவரை ஏவிவிட்டது என்று சொன்னேன். ஆனால் அவருக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதை பார்த்தால் அதிமுகவோ, அதன் தலைமையோ இதன் பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது.

பன்னீர்செல்வம்: அழுகிய முட்டையை வக்கீல்கள் யாரும் எடுத்து செல்ல மாட்டார்கள் என்றெல்லாம் சட்ட அமைச்சர் கருத்து சொல்வது எந்தவகையில் நியாயம்?

துரைமுருகன்: ஒரு வக்கீல் என்ற முறையில் அவர்களின் மனோபாவம் எனக்கு தெரியும். அதனால்தான் நான் அவ்வாறு தெரிவித்தேன். வக்கீல்கள் போர்வையில் சமூக விரோதிகள்தான் இந்த முட்டை வீச்சில் ஈடுபட்டிருப்பார்கள் என்று என்னுடைய கருத்தை தெரிவித்தேன்.

பன்னீர்செல்வம்: குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பது போலீசின் கடமை. உங்களுடைய பேச்சு உள்நோக்கம் கற்பிப்பது போல உள்ளது. இவ்வாறு பேசுவது அவையின் மரபுக்கு ஏற்றதல்ல. மேலும் அதிமுக தலைமையையும், இந்த பிரச்சனையையும் முடிச்சி போட்டு பேசுவதும் முறையல்ல. இதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.

சாமிக்கு 'அலங்கோலம்' காட்டிய அதிமுக...

துரைமுருகன்: சுப்பிரமணிய சுவாமிக்காக இப்போது அதிமுக வக்காலத்து வாங்குகிறது. ஆனால் அவர்கள் ஆட்சிக் காலத்தில் இதே கோர்ட் வளாகத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு ஒரு 'அலங்கோல காட்சியை' காட்டினார்கள். (அதிமுக மகளிர் அணியினர் புடவையைத் தூக்கிக் காட்டியதை சொல்கிறார்). அப்படிப்பட்டவர்கள் இப்போது பேசுவது என்ன நியாயம்?.

இவ்வாறாக வாக்குவாதம் தொடரவே இடைமறித்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி, நிதிநிலை அறிக்கை மீது பொது விவாதம் நடத்த வேண்டும் என்பதால் மற்ற பிரச்சனைகள் பற்றி நாளை பேசலாம் என்றார்.

இதை ஏற்று கொண்ட சபாநாயகர் ஆவுடையப்பன் பொது விவாதத்தின் மீது அதிமுகவைச் சேர்ந்த அருண்மொழித்தேவனை பேச அழைத்தார்.

அப்போது மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எழுந்து ஏதோ பேச முயன்றனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதியை சபாநாயகர் பேச அழைத்தார்.

பாலபாரதி பேசுகையில், உயர்நீதிமன்ற சம்பவம் தொடர்பாக விதி எண் 110ன் கீழ் அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். இன்று அதன் மீது ஒரு புதிய விளக்கம் தருவது எந்த வகையில் நியாயம்? மேலும் இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதால் இவ்வாறு அமைச்சர் கருத்து தெரிவிப்பதும் சரியல்ல என்றார்.

பி்ன்னணியில் அரசியல் உள்ளது....

இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், நான் வழக்கு தொடர்பாக எதுவும் பேசவில்லை. வழக்கறிஞர்கள் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக போராடுகின்ற வரையில் எதுவுமே நடைபெறவில்லை. ஆனால் சுப்பிரமணிய சுவாமி வந்ததற்கு பிறகு இது பிரச்சனையாக்கப்பட்டிருக்கிறது. எனவே இதில் அரசியல் உள்ளது என்றுதான் நான் சொன்னேன்.

நிதியமைச்சர் அன்பழகன்: தாங்கள் நினைக்கிற கருத்தையெல்லாம் தெரிவிக்கும் வகையில் இந்த அவையை நடத்த முயற்சிப்பது சரியானதல்ல. அமைச்சர் ஏற்கனவே விதி 110ன் கீழ் கருத்து தெரிவித்த பிறகு அதன் மீது விவாதிக்கக்கூடாது என்பது விதி. ஆனால் மறுபடியும் இது தொடர்பான பிரச்சனைகள் பேசப்பட்டால் அதற்கு அமைச்சர் பதிலளிக்க, சூழ்நிலையை விளக்க உரிமை உள்ளது.

எனவே இது தொடர்பாக தொடர்ந்து விவாதம் நடத்துவதற்கு விதியில் இடமில்லை. இதை சபாநாயகரும் அனுமதிக்கக்கூடாது என்றார். இத்துடன் இந்த விவாதம் முடிவுபெற்றது.

மதிமுக வெளிநடப்பு:

இதையடுத்து மீண்டும் நீதிமன்ற மோதல், இலங்கை பிரச்சினை குறித்து மதிமுகவினர் விவாதிக்க வேண்டும் என்று கோரினர். இதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்காததால் மதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X