For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேச விரோத கட்சிகள்-தடை செய்ய கோரும் காங்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு என்ற நிலை மாறி இங்குள்ள சில கட்சிகள் இப்போது தனித் தமிழ்நாடு என பேசும் நிலை உருவாகியுள்ளது. இதை அனுமதித்தால் இந்தியாவின் இறையாண்மை என்னவாகும்?. எனவே இந்தக் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் காங்கிரஸ் கோரிககை வைத்தது.

கடலூரில் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக தீக்குளித்து இறந்த தமிழ்வேந்தனின் இறுதி ஊர்வலத்தின் போது நடந்த வன்முறை தொடர்பான தமிழக சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் சுதர்சனம்,

கடலூரில் இந்த இறுதி ஊர்வலம் நடைபெற்றபோது ஒரு சிலர் கடைகளை அடித்து உடைத்திருக்கிறார்கள். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் பேனர்களை கிழித்து எறிந்திருக்கிறார்கள். அமைதி ஊர்வலம் என்பது மெளனமாக சென்றிருக்க வேண்டிய நிலை மாறி அங்கு வன்முறை நடைபெற்றிருக்கிறது.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு என்ற நிலை மாறி இங்குள்ள சிலர் இப்போது தனித் தமிழ்நாடு என பேசும் நிலை உருவாகியுள்ளது. இதை அனுமதித்தால் இந்தியாவின் இறையாண்மை என்னவாகும் என்பதை இந்த சட்டப் பேரவை சிந்திக்க வேண்டும்.

இப்படி பேசுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி பிரிவினை பேசுகின்ற கட்சிகளை தடை செய்ய மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்.

வேல்முருகன் (பாமக): கடலூரில் அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெற்றது. ஆனால் அதில் சில சமூக விரோதிகள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை கண்டறிந்து அப்புறப்படுத்துவதை விட்டுவிட்டு காவல்துறையினர் 20,000 பேர் பங்கேற்ற கூட்டத்திற்குள் புகுந்து தடியடி நடத்தியுள்ளனர்.

டாக்டர் ராமதாஸ், வைகோ, பழ.நெடுமாறன், திருமாவளவன் மற்றும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் முன்னிலையிலேயே இப்படிப்பட்ட அராஜக செயலை போலீஸார் செய்தனர். அந்தத் தலைவர்களுக்கும், முக்கிய நிர்வாகிளுக்கும் எந்தவித பாதுகாப்பும் அளிக்கவில்லை.

கலவரத்தில் ஈடுபட்டவர்களை விட்டுவிட்டு அப்பாவிகள் பலரை சிறையில் அடைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை கூட வழங்கவில்லை. அவர்களை உடனடியாக விடுதலை செய்து உரிய சிகிச்சை வழங்க வேண்டும். இந்த கலவரத்திற்கு துணை போன காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வை.சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார்? பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது யார்? என்பதை காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியும். அப்படியிருந்தும் இந்த சம்பவத்திற்கு தொடர்பற்று பஸ் நிலையங்களிலேயே இருந்தவர்களை கூட அழைத்து வந்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். பலர் கடுமையாக தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். உடனடியாக இந்த அப்பாவிகள் மீதுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

ரவிகுமார் (விடுதலைச் சிறுத்தைகள்): இந்த ஊர்வலத்தை போலீசார் வீடியோ பதிவு செய்திருக்கிறார்கள். எனவே கலவரத்தில் ஈடுபட்டவர்களை அவர்களால் கண்டுபிடிக்க முடியும். ஆனால் போலீசார் அப்பாவிகளை அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். கொலை முயற்சி, கொள்ளை வழக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள். இது நியாயமற்றது. அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
இந்த விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியதாவது:

கடலூர் மாவட்டம் குழந்தை காலனியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவாளர் ஜோதி (எ) தமிழ்வேந்தன் (30) என்பவர் 18ம் தேதியன்று மாலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்து அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

தமிழ்வேந்தன் சிகிச்சையில் இருந்தபோது இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தீக்குளித்ததாக கூறியுள்ளார். தமிழ்வேந்தன் சிகிச்சை பலனளிக்காமல் 19ம் தேதி இறந்து போனதால் அவரது உடல் கடலூர் புதுநகர் காவல் நிலைய சரகம், வில்வநகரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. அந்த இடத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

20ம் தேதி தமிழ்வேந்தனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள பழ.நெடுமாறன், டாக்டர் ராமதாஸ், வைகோ, தொல்.திருமாவளவன், வெள்ளையன் ஆகியோர் தலைமையில் சுமார் 4,500 பேர் குழுமியிருந்தனர்.

இறுதி ஊர்வலத்தையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், கடலூர் நகர் மற்றும் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஊர்வலம் சிதம்பரம் சாலை வழியாக சென்று மணவெளியில் அடக்கம் செய்வதாக முன்னதாகவே முடிவு செய்யப்பட்டு ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வல தலைவர்கள் முன்னணி வகிக்க, வில்வநகரத்திலிருந்து புறப்பட்டு தக்க பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்தது.
ஊர்வலத்தின் பின் பகுதியில் வந்த சிலர், திருப்பாப்பூலியூர் சீமாட்டி சிக்னல் அருகே ஊர்வலம் சென்றபோது, தமிழ்வேந்தனின் சொந்த ஊரான குழந்தை காலனியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் சிலருடன் சேர்ந்து சிதம்பரம் சாலை வழியாக ஊர்வலத்தை செல்லவிடாமல் லாரன்ஸ் சாலை வழியாக ஊர்வலம் செல்ல வெண்டுமென்று காவல் துறையிரை நிர்ப்பந்தித்தனர்.

காவல் துறையினரின் அறிவுரையை அவர்கள் ஏற்க மறுத்து, அரசியல் கட்சிகளின் பதாகைகளை சேதப்படுத்தி, காவல் துறையினரின் மீது கற்களை வீசினர். காவல் துறையினர் எச்சரித்தும், கேளாமல் தொடர்ந்து கற்களை வீசி ஊர்வலத்தில் குழப்பம் ஏற்படுத்த முயற்சித்ததால் அவர்களை காவல் துறையினர் கலைத்தனர்.

ஊர்வலத்திலிருந்து கலைந்து சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பேருந்து நிலையத்தில் நுழைந்து அங்கிருந்த 21 அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். மேலும் எஸ்பிஐ ஏடிஎம் மையம் மற்றும் பிஎஸ்என்எல் அலுவலக கண்ணாடிகளை உடைத்ததோடு, திமுக டிஜிட்டல் பேனர்களையும் சேதப்படுத்தினர்.

இச்சம்பவத்தில் காவல் துறையினர் மூன்று பேரும், பொதுமக்கள் இரண்டு பேரும், தினகரன் பத்திரிகையின் புகைப்பட நிபுணர் ஒருவரும் காயமடைந்தனர். கடலூர் நகரில் காவல் துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி மேற்கொண்டு அசம்பாவிதம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர்.

இது சம்பந்தமாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்வலத்தில் சென்ற சிலர் ஏற்கனவே ஒப்புக் கொண்டதற்கு மாறாக ஊர்வலத்தின் பாதையை மாற்றக்கோரி காவல் துறையினரை நிர்ப்பந்தித்து காவல் துறையினரை தாக்கி, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, ஊர்வலத்தில் குழப்பம் செய்ய முயற்சித்ததால், அவர்களை காவல் துறையினர் கலைத்து ஊர்வலம் அமைதியாக செல்ல வழிவகை செய்தனர். வழக்குகள் புலன் விசாரணையில் உள்ளன என்றார் ஆற்காடு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X