For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முடிந்தது 14வது லோக்சபா!-சோம்நாத் உருக்கம்!!

By Sridhar L
Google Oneindia Tamil News

Parliament
டெல்லி: 14வது லோக்சபாவும், அதன் கடைசிக் கூட்டத் தொடரும் இன்றுடன் முடிவுக்கு வந்தது. இதையொட்டி பிரதமர் வெளியிட்ட சிறப்பு செய்தியை வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக்சபாவில் வாசித்தார்.

அதில், தனக்கும், தனது அரசுக்கும் உறுதுணையாக இருந்த நாட்டு மக்களுக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், எதிர்க்கட்சித் தலைவர் அத்வானிக்கும் பிரதமர் நன்றி கூறிக் கொண்டார்.

இதையடுத்து அத்வானி பேசினார். அவரைத் தொடர்ந்து லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி பேசினார்.

அவர் பேசுகையில், பிரதமர் மன்மோகன் சிங்கும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் தற்போது அவையில் இல்லாதது தனக்கு மிகவும் துயரமாக உள்ளதாக தெரிவித்தார்.

இருவரும் விரைவில் பூரண நலமடைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து லோக்சபாவின் முக்கிய நிகழ்வுகளை அவர் வரிசைப்படுத்தி பேசினார்.

தனது பேச்சின் இறுதியில் தான் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அரசியலிருந்து விலகப் போவதாகவும் தெரிவித்தார் சோம்நாத் சாட்டர்ஜி.

14வது லோக்சபாவின் முக்கிய நிகழ்வுகள்

- சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சபாநாயகர் ஒருவர் அவரது கட்சியிலிருந்து நீக்கப்பட்டது இந்திய வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும்.

- பிரதமர் மன்மோகன் சிங் கொண்டு வந்த நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது பாஜக உறுப்பினர்கள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொண்டு வந்து கொட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இதுவும் நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாகும்.

- தொகுதி மக்களின் பிரச்சினை குறித்து லோக்சபாவில் கேள்வி கேட்பதற்காக லஞ்சம் வாங்கிய 10 லோக்சபா உறுப்பினர்களும், 1 ராஜ்யசபா உறுப்பினரும் இந்த நாடாளுமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

2005ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி இந்த நிகழ்ச்சி இடம் பெற்றது. 10 லோக்சபா உறுப்பினர்களில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் 6 பேர், பகுஜன் சமாஜ் கட்சியினர் இருவர், காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளத்தைச் சேர்ந்த தலா ஒருவர்.

- 14வது லோக்சபா காலத்தில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் உள்பட 17 உறுப்பினர்கள் மரணமடைந்தனர்.

- மொத்தம் 41 எம்.பிக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

- எந்தவித விவாதமும் இல்லாமல் 41 சதவீத மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

- மொத்தம் 7 கூட்டத் தொடர்கள் இந்த லோக்சபாவில் நடந்துள்ளது. இதுவரை இருந்த லோக்சபாக்களிலேயே இதுதான் மிகவம் குறைந்த அளவிலான கூட்டங்கள் நடந்த லோக்சபா என்பது குறிப்பிடத்தக்கது.

'சும்மா' எம்.பிக்கள்: சோம்நாத் எரிச்சல்!

இதற்கிடையே அவையில் கேள்வியே கேட்காத எம்.பிக்கள் குறித்து லோக்சபாவில் நேற்று சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி வேதனை தெரிவித்தார்.

லோக்சபாவை தங்களது கேள்விகளாலும், விவாதங்களாலும் கலக்குபவர்கள் பலர் உண்டு. அவர்கள் பேச எழுந்தாலே அமைச்சர்கள் திணறிப் போவதும் உண்டு.

ஆனால் இந்த கேட்டகிரி எதிலுமே சேராத தனி குரூப் ஒன்றும் நாடாளுமன்றத்தில் உண்டு. அது எந்தக் கேள்வியையும் கேட்காமல், எந்த விவாதத்திலும் பங்கேற்காமல், லோக்சபாவின் மோட்டு வளையையும், பேசுவோரின் வாயையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் குரூப் இது.

இப்படிப்பட்ட எம்.பிக்களை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கடுமையாக சாடினார்.

இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் சோம்நாத் கூறுகையில், வாக்காளர்கள், தங்களது பிரதிநிதிகள், லோக்சபாவில் போய் நமது பிரச்சினைகளைக் கூறுவார்கள். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார்கள் என்றுதான் எதிர்பார்க்கிறார்கள்.

வெறுமனே போய் வேடிக்கை பார்த்து வருவதற்காக யாரையும் தேர்வு செய்ய மாட்டார்கள். அவர்கள் ஒரு கேள்வியும் கேட்காமல் அமைதியாக இருக்க வேண்டும் என வாக்காளர்கள் விரும்ப மாட்டார்கள் என்றார் கோபமாக.

தொடர்ந்து அவர் கூறுகையில், இருப்பினும், கேள்வி கேளுங்கள் என்று எந்த எம்.பியையும் கட்டாயப்படுத்த முடியாது. ஏதாவது பேசுங்கள் என்று எப்படி ஒருவரை கட்டாயப்படுத்த முடியும் என்றார் சோம்நாத்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X