For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிற்க முடியாததால் சட்டசபைக்கு வரவில்லை-கருணாநிதி

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: எழுந்து நிற்க பயிற்சி தேவைப்படுவதால் சட்டசபைக்கு வர முடியாமல் போனதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து நாளை சட்டசபைக் கூட்டத்திற்கு வரக் கூடும் என நிதியமைச்சர் அன்பழகன் கூறியிருந்தார். ஆனால் சட்டசபைக் கூட்டம் இன்றே முடித்துக் கொள்ளப்பட்டு விட்டது. இதனால் கருணாநிதி சட்டசபைக்கு வருவது என்ற திட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் தான் சட்டசபைக்கு வர இயலாமல் போனது குறித்து முதல்வர் கருணாநிதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இன்று என் வாழ்வில் ஒரு முக்கியமான நாள். ஆம், அருந்ததியர் சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா சட்டமன்றத்திலே நிறைவேறுகின்ற நாள் இன்றுதான். இந்த நாளில் நான் பேரவையிலே இருந்து- இந்த மசோதாவை நானே பேரவையில் முன்மொழிந்து நிறைவேற்றித் தர வேண்டுமென்று உறுப்பினர்களையெல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டுமென்று எண்ணியிருந்தேன்.

இருந்தாலும், டெல்லியிலிருந்து வந்த டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் மற்றும் இங்குள்ள டாக்டர் மார்த்தாண்டம் தலைமையிலான மருத்துவக் குழுவினரும் நேற்றிரவு என் அறுவை சிகிச்சைக்கான தையல்களைப் பிரித்த பின்னர் என்னை உட்கார வைக்கவும், நிற்க வைக்கவும் முயற்சித்தனர்.

கடந்த ஜனவரி 26-ஆம் தேதியிலிருந்து அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் படுத்த படுக்கையிலேயே ஒரு மாதமாக இருந்த காரணத்தால் கால்களை ஊன்றி நிற்க சில நாட்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திய நிலையில் பேராசிரியர் அவையிலே ஆவலோடு நான் அவைக்கு நாளை வருவேன் என்று தெரிவித்ததைப் போல நேரடியாக வந்து அருந்ததியருக்கான மசோதாவை நானே முன்மொழிய இயலவில்லை.

எனினும் இன்று காலையில் நானே அருந்ததியர் மசோதாவினை அவையிலே முன்மொழிவதற்கான உரையை என் கைப்பட எழுதி அவையிலே அதனைப் படிக்குமாறு உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்து, எனக்குப் பதிலாக இந்த மசோதாவினை அவரை முன் மொழியுமாறு கேட்டுக்கொண்டேன்.

அருந்ததியருக்கான இந்த இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென்ற எனது உள்ளத்தின் அடித்தளத்தில் நீண்ட பல ஆண்டுகளாக இருந்து அதனை சட்டமாக நிறைவேற்றுகின்ற நேரம் இப்போதுதான் வந்துள்ளது.

இந்தச் சட்டத்தின் காரணமாக சமுதாயத்தின் அடித்தளத்திலே இருக்கின்ற அந்த அருந்ததிய மக்கள் நாளை, நாளை மறுநாள் அவர்களும் முன்னேறி வாழ்க்கையிலே வளம் பெறுவார்களேயானால், அன்றுதான் என்னுடைய உள்ள வேட்கை முழுவதுமாக நிறைவேறிய திருப்தி எனக்கு ஏற்படும். ஆனால் இதனை சட்டமாக கொண்டுவருவதற்குள் நான் பட்ட பாட்டினை நான்தான் அறிவேன்.

இதற்காக நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் தலைமையிலே ஒரு குழுவினை அமைத்து, அவர்களும் அல்லும் பகலும் பாடுபட்டு, இது சம்பந்தமான பல சட்டப் பிரிவுகளையும் படித்தாய்ந்து இதற்கான அறிக்கையினை அரசுக்கு அளித்தார்கள். அதன் பிறகு இதனை சட்டமாகக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, அரசு உயர் அதிகாரிகள் சிலரிடம் இது குறித்து நான் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்கள் இந்தச் சட்டத்தினைக் கொண்டு வருவதற்கு மேலும் சில கால நீடிப்பு தேவை என்று கூறினார்கள். அப்போது நான் அவர்களிடம் கூறினேன். இது என்னுடைய சொந்தப் பிரச்சினை. இது எவ்வளவுக்கெவ்வளவு விரைவில் நிறைவேறுகிறதோ, அந்த அளவிற்கு நான் மகிழ்ச்சியடைவேன். எனவே இந்த மசோதா இந்தக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். அவ்வாறே இது நிறைவேறுகிறது.

நீதியரசர் ஜனார்த்தனம் இது குறித்த பரிந்துரைகளை அரசிடம் தாக்கல் செய்து, அந்தச் செய்தி ஏடுகளில் வெளிவந்த நேரத்தில்- இந்த அருந்ததியச் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 50 பேர் என்னைத் தலைமைச் செயலகத்தில் வந்து சந்தித்தார்கள்.

அப்போது அவர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது, எங்கள் சமுதாயத்திற்காக இவ்வளவு உறுதியாக இதுவரை யாரும் செயல்பட்டதில்லை. ஆனால் நீங்கள் இந்த அளவிற்கு எங்களுக்காக எடுத்துக் கொள்ளும் முயற்சிகளுக்காக நாங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறோமோ? எது எப்படியிருந்தாலும் இந்தப் பரிந்துரைகளையேற்று இட ஒதுக்கீடு செய்து அது சட்டமாக வர நாங்கள் உங்களோடு துணை இருப்போம் என்று தெரிவித்தார்கள்.

அவர்களின் எண்ணப்படி இன்றையதினம் அருந்ததிய சமுதாயத்தினருக்காக 3 சதவிகித உள் ஒதுக்கீடு நிறைவேறுகிறது. இந்த நாள் அவர்கள் வாழ்நாளில் எந்த அளவிற்கு முக்கியமான நாளாக விளங்குமோ, அதுபோலவே என்னுடைய வாழ்வில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு காரணமானவன் நான் என்ற முறையில் எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.

என் முதுகுதண்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, காயம் பரிபூரணமாக குணம் ஆனதில் எந்த அளவிற்கு நான் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றேனோ, அதை விட அதிக அளவிற்கு அருந்ததிய சமுதாயத்திற்காக நடைபெற்றுள்ள சமூக நீதி அறுவை சிகிச்சையில் இன்று முதல் அந்தச் சமுதாயமே பெரிதும் நலம் அடையப் போகின்றது என்ற எண்ணத்தோடு மகிழ்ச்சி அடைகின்றேன்.

அருந்ததியர்களுக்கான நல்வாழ்வை அளித்திடக்கூடிய இந்த மசோதாவை சட்டமாக ஆக்கிட உதவி செய்த அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், இந்த சட்டம் வெளிவர பெரிதும் எனக்கு துணையாக நின்ற நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மார்ச் 1ல் கருணாநிதி டிஸ்சார்ஜ்:

இதற்கிடையே முதல்வர் கருணாநிதிக்கு அனைத்து தையல்களும் பிரிக்கப்பட்டு விட்டன. மார்ச் 1ம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X