For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேர்மையான தேர்தல்-கமிஷனுக்கு ஜெயலலிதா கடிதம்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 30 ஆண்டுகளில் அதிமுகபல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மனமுவந்து ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் தற்போது ஆளுங்கட்சியினர், உருவாக்கியுள்ள அச்சமூட்டும் நடவடிக்கைகள் தமிழக அரசியல் வரலாறு இதுவரை கண்டிராத ஒன்று.

ஆளும் கட்சியினரின் இந்த பயமுறுத்தும் நடவடிக்கைகள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் தேர்தல் நடைமுறையையே அவமதிக்கும் செயல்.

கடந்த மாதம் 9ம் தேதி நடைபெற்ற திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மாலை 4 மணி வரை 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிந்து இறுதி அறிவிப்பு வெளியான போது 88.89 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

ஒரு மணி நேரத்திற்குள் 30 சதவீதம், அதாவது 45,000வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தது எப்படி? என்பது மர்மமாக இருக்கிறது.

அந்தத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தேர்தல் பொறுப்பேற்று நடத்தும் வாக்குப்பதிவு அதிகாரியின் குறிப்பேடுகளின் பிரதிகள் பெறப்பட்டு, திருமங்கலம் தேர்தல் நடத்தப்பட்டது குறித்து துல்லியமாக ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

திருமங்கலம் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு அதிகாரிகளின் குறிப்பேடுகளில் ஏராளமான முறைகேடுகளும், தவறான தகவல்களும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலுக்கு நேர்மாறாகவும், முரண்பட்ட வகையிலும் குறிப்பிடத்தக்க வகையில் விடுபடுதலும் இடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

பெரும்பாலான வாக்குப்பதிவு அதிகாரிகளின் குறிப்பேடுகளை ஆய்வு செய்த போது அன்றைய தினம் 3 மணி முதல் 5 மணி வரையிலான கடைசி 2 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்ச வாக்குகளை பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. தேர்தல் முடியும் நேரத்தில் அதிகளவில் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்ற சந்தேகம் இதன் மூலம் உறுதிப்படுகிறது.

சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அதிகாரிகளிடம் இருந்து உரிய விளக்கங்கள் கேட்கப்படுவதுடன் விசாரணையும் நடத்தப்பட வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அவர்கள் எதிர்காலத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடாத வண்ணம் தடை செய்ய வேண்டும். தேர்தல் பணியை பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்ட பார்வையாளர்களும் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வண்ணம் முழுமையாக பணியாற்றவில்லை.

எதிர்காலத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைமுறை நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டுமானால் திருமங்கலம் தேர்தலில் நடைபெற்றுள்ள இத்தவறுகள் சரி செய்யப்பட வேண்டும்.

அரசியல் கட்சி அல்லது தனி நபர்களுக்கு வெற்றியும், தோல்வியும் சகஜமான ஒன்றுதான். ஆனால் இது போன்று தேர்தல் நடைமுறைகளை முறைகேடாக பயன்படுத்தி ஜனநாயக தேர்தல் நடைமுறையை வீழ்த்துவது என்பது அனுமதிக்க முடியாத ஒன்று.

நாடாளுமன்ற ஜனநாயக பிரதிநிதித்துவத்தில் நேர்மையான நியாயமான தேர்தல் என்பது அடிப்படையான ஒன்று.

இந்தியாவில் தேர்தல் நடத்துவதற்கு அரசியல் அமைப்பு சட்டப்படி, தலைமை பொறுப்பை வகிக்கும் தேர்தல் ஆணையர் தேர்தல் நடைமுறையில் ஊடுருவியுள்ள இது போன்ற முறைகேடுகளை களைவதுடன் சுயநல சக்திகள் தேர்தல் நடைமுறையை தவறாக பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். நடைபெற உள்ள தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

துக்ளக் இதழின் பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய அதன் ஆசிரியர் சோவும் திருமங்கலம் தொகுதி தேர்தல் குறித்து இதே கருத்தைத் தான் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X