For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை மாநகராட்சி-ரூ18 கோடி பற்றாக்குறை பட்ஜெட்

By Sridhar L
Google Oneindia Tamil News

கோவை: கோவை மாநகராட்சியில் ரூ. 18 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் 2009-10ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் இன்று நடந்தது. மேயர் வெங்கடாசலம் தலைமை வகிக்க நிதிக்குழு தலைவர் நந்தகுமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

2009-10ம் நிதியாண்டில் சொத்து வரி வசூல் ரூ. 84 கோடியாக உயரும். இதில் 95 சதவீதத்தை வசூல் செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்படடுள்ளது. குறித்த காலத்தில் வரி செலுத்துவோருக்கு 1 முதல் 2 சதவீதம் தள்ளுபடி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

காலை, மாலை நேரங்களிலும் அரசு விடுமுறை நாட்களிலும் வீடுகளுக்கே நேரடியாக சென்று வரி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டப் பணிகளுக்காக ரூ. 101.23 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

புதிதாக முறைப்படுத்தப்பட்ட மனைப் பிரிவுகளில் இதுவரை ரூ. 2783.81 லட்சம் செலவில் சாலைகள், தெரு விளக்குகள், மழை நீர் வடிகால், குடிநீர் வினியோகப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் மேலும் ரூ. 915 லட்சம் மதிப்பில் அடிப்படை வசதிகள் செய்யப்படும்.

15 இடங்களில் ரூ. 50 லட்சம் செலவில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படும். 100 அடி ரோடு முதல் டெக்ஸ்டூல் பாலம் வரை மத்திய தடுப்புடன் கூடிய தெரு விளக்குகள் ரூ. 1 கோடி செலவில் அமைக்கப்படும்.

சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவனையின் தரத்தை உயர்த்த ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தப் பணி வரும் அக்டோபர் மாதத்துக்குள் முடிக்கப்படும்.

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் ரூ. 7 கோடி செலவில் நவீன வசதிளுடன் பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் வரும் டிசம்பருக்கும் முடிக்கப்படும்.

அனைத்து வார்டுகளுக்கும் கொசு ஒழிப்பு எந்திரம் வாங்க ரூ. 36 லட்சம் வழங்கப்படும். ரூ. 5 கோடி செலவில் பாதசாரிகளுக்கான நடைபாதைகள் அமைக்கப்படும்.

பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கவும், சொத்து வரி, குடிநீர் கட்டணம் குறித்த விளக்கங்கள் கேட்கவும் மாநகராட்சி அலுவலகத்தில் அழைப்பு மையம் (கால் சென்டர்) அமைக்கப்படும்.

ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 2 கழிவு நீர் அகற்றும் லாரிகள் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பள்ளிகளில் 6, 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்புகளில் படிக்கும் 2500 மாணவ-மாணவிகளுக்கு மாலை நேரங்களில் ஆங்கிலம் பேசுதல் பயிற்சி ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் அமளி-போலீசார் நுழைந்தது:

முன்னதாக இன்று காலை கூட்டம் தொடங்கியதும் மேயர் வெங்கடாசலம் பேசினார். அப்போது அவர், கடந்த கூட்டத்தில் அவை மரபை மீறியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கல்யாணசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கவுன்சிலர் வேல்முருகன் ஆகியோர் அவையை விட்டு வெளியேறுமாறு கூறினார்.

இதற்கு இடதுசாரிகள், அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளின் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அவர்களது கூச்சலக்கு இடையில் பட்ஜெட் கூட்டத்தை தொடர்ந்து நடத்துமாறு மேயர் வெங்கடாசலம் கூறினார். இதையடுத்து எதிர்க் கட்சி கவுன்சிலர்கள் மேயரின் இருக்கை முன் கூடி நின்று கோஷங்கள் எழுப்பினர்.

திமுக கவுன்சிலர்கள் சிலர் போட்டி கோஷம் எழுப்பினர். இதனால் அரங்கில் பரபரப்பான சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து மேயர் மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கவுன்சிலர்கள் வெளியேறுமாறு கூறினார். ஆனால் அவர்கள் வெளியேற மறுத்ததால் போலீஸாரை அழைத்து அவர்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து அரங்குக்குள் உதவி கமிஷனர் குமாரசாமி தலைமையில் போலீசார் நுழைந்தனர். ஆனாலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கவுன்சிலர்களை சுற்றி அனைத்த எதிர்க் கட்சியினரும் நின்று கொண்டதால் அவர்களை போலீசாரால் வெளியேற்ற முடியவில்லை.

இந் நிலையில் எதிர்க் கட்சியினரின் கோஷங்களுக்கு மத்தியில் பட்ஜெட்டை நிதிக்குழு தலைவர் நந்தகுமார் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கலானதும் எதிர்க் கட்சியினர் மேயர் வெங்கடாசலம் முன் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் அவர்களுக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந் நிலையில் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் பட்ஜெட் மீதான விவாதம் சிறிது நேரம் கழித்து தொடங்கும் என கூறிவிட்டு அவையை விட்டு வெளியேறினார் மேயர்.

அதன்பிறகு எதிர்க் கட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X