For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா ஜெனரல் டயருக்கு சமம்: கருணாநிதி

By Sridhar L
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: உயர்நீதிமன்ற மோதலை ஜாலியன்வாலாபாக்குடன் ஒப்பிட்டுள்ளார் ஜெயலலிதா. ஆனால் கும்பகோணத்தில் மகாமக குளத்தில் ஜெயலலிதா நீராடியபோது நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்களே, அந்த சம்பவத்தைத்தான் ஜாலியன் வாலாபாக்குடன் ஒப்புமைப்படுத்த முடியும். ஜெனரல் டயருக்கு சமமானவர் ஜெயலலிதாதான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அறிக்கை ராணி, ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்- "நீதிமன்றம் கொடுத்த நெற்றியடி'' என்ற தலைப்பில் நான் எழுதியதற்கு பதில் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு எதையெதையோ எழுதியிருக்கிறார். அந்த அறிக்கையில் "சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறையினரால் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்திற்கு நிகரான சம்பவம் சுதந்திர இந்தியாவில் இதுவரை நடைபெற்றதில்லை என்பதுதான் தமிழக மக்களின் ஏகோபித்த கருத்து'' என்று எழுதியிருக்கிறார்.

இதையே தான் மனுவாக தயாரித்து தன் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் மூலமாக உச்சநீதிமன்றத்திலே வழக்கு தொடுத்து, அதற்காக தமிழக அரசை 356-வது விதியைப் பயன்படுத்தி கலைக்கச் செய்வதற்கு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து தீர்ப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

அந்த வழக்கிலே தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே, ஆட்சியை கலைக்க வேண்டுமென்றால், கவர்னர் மாளிகைக்கு போக வேண்டும், ஜெயலலிதா தரப்பினர் தொடுத்துள்ள வழக்கு அரசியல் ரீதியானது என்று கருத்து தெரிவித்திருந்தார். அதைத்தான் நான் நீதிமன்றம் கொடுத்த நெற்றியடி என்ற தலைப்பிலே எழுதியிருந்தேன். மேலும் அப்போது ஜெயலலிதா ஆட்சியிலே நடைபெற்ற வன்முறை சம்பவங்களை எல்லாம் பட்டியலிட்டும் காட்டியிருந்தேன்.

அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத ஜெயலலிதா அவைகளையெல்லாம் உண்மைக்கு மாறானவை என்று தற்போது அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். நான் பட்டியல் இட்ட சம்பவங்கள் உண்மையா அல்லவா என்பதை தமிழ்நாட்டு மக்களும், தமிழ் நாட்டுப் பத்திரிகைகளும் நன்றாக அறிவார்கள்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அளித்த தீர்ப்புக்கு மாறாக- அவருடைய தீர்ப்பையே சரியானதல்ல என்று அர்த்தம் தெரிவிக்கத்தக்க வகையில் ஆட்சியைக் கலைக்க எங்கே செல்ல வேண்டும், யாரிடம் முறையிட வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு நன்றாக தெரியும் என்று பதில் அளித்திருப்பதைப் பற்றி உச்சநீதிமன்றம் தான் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவரது அறிக்கையில் ஆட்சியைக் கலைக்க முறைப்படி முறையிடுவது என்பது திருடன் கையில் சாவியைக் கொடுப்பதற்கு சமம்' என்றும் எழுதியிருப்பது; எந்த உயர்ந்த அமைப்புகளைப் பற்றி ஜெயலலிதா விமர்சனம் செய்திருக்கிறார் என்பதை இந்திய நாட்டு அரசியல்வாதிகள் கருத்தில் கொள்வது நல்லது.

இவ்வாறு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக- யாரிடம் முறையிட வேண்டுமென்பது தனக்கு தெரியும் என்றும்- அவ்வாறு முறையிட்டால் திருடன் கையில் சாவியைக் கொடுப்பது' என்றும் எழுதியிருப்பதற்கு என்ன பொருள் என்பதை அறிவார்ந்த மக்கள் தான் புரிந்து அறிவிக்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் செல்ல காவல் துறையினருக்கு அறிவுறுத்தியது யார் என்று உச்சநீதிமன்றம் எழுப்பியய கேள்விக்கு முறையாக அரசின் சார்பில் பதில் தரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு என்ன பதில் என்று ஜெயலலிதா என்னைக் கேட்டிருக்கிறார்.

உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு பதிலளிக்கச் சொல்லவில்லை. உச்சநீதிமன்றத்திற்கு காவல் துறை பதிலளிக்க வேண்டுமென்று சொன்னது, காவல்துறை அதற்கான பதிலையும் அளித்துவிட்டது. அதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், என்னிடம் ஜெயலலிதா பதில் கேட்பது அவரது அறியாமையைத் தான் வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு, அவருக்காக வாதாடும் வழக்கறிஞர்களே சிரிக்கக் கூடிய அளவிற்கு செய்துள்ளது.

காவல்துறையினரை நீதிமன்றத்திற்குள் செல்ல நான் தான் அறிவுறுத்தியிருக்க வேண்டுமென்று மக்கள் நினைக்கிறார்கள் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். எந்த மக்கள் அப்படி நினைக்கிறார்கள்? ஜெயலலிதாவின் தோட்டத்திலே உள்ள அவரது மக்கள் அப்படி நினைக்கிறார்கள் போலும்.

19.2.2009 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சம்பவத்தை நினைத்தால் மக்களுக்கு ஆங்கிலேயர் காலத்தில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் தான் நினைவுக்கு வருமாம். ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி அவருக்கு தெரியுமா? 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஒரு பொது கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து கொண்டிருந்தது.

ஜெனரல் டயர் என்ற வெள்ளைக்காரத் தளபதி 100 வெள்ளைக்காரச் சிப்பாய்களும், 50 இந்திய ராணுவத்தினரும் பின்தொடர மைதானத்துக்குள் வந்தான். கூடவே பீரங்கி வண்டிகள் அணிவகுத்து வந்தன. கூடியிருந்தவர்களைக் கலைந்து செல்லும்படி எச்சரிக்கை எதுவும் கொடுக்காமல், அவர்களை நோக்கி பீரங்கியால் சுடும்படி ஜெனரல் டயர் உத்தரவிட்டான். ராணுவத்தினர் பீரங்கியால் சரமாரியாகச் சுட்டனர். சுமார் பத்து நிமிட நேரம் 1,650 ரவுண்டுகள் சுட்ட பிறகே பீரங்கிகள் ஓய்ந்தன.

"சுட்டேன், சுட்டேன், குண்டுகள் தீரும் வரை சுட்டேன்'' என்று கொக்கரித்தான் ரத்த வெறி பிடித்த ஜெனரல் டயர். ஜாலியன் வாலாபாக் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 379 பேர். ஜெயலலிதா அந்த சம்பவத்துடன் 19-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பவத்தை ஒப்பிட்டுச் சொல்வது போல் சொல்ல முடியாது.

வைரம் படம் போல...

ஜெயலலிதா எழுதியிருப்பதுபோல் ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு ஒப்பிட்டு ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டுமென்றால், ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது, தன் உடன் பிறவா சகோதரியை அழைத்துக் கொண்டு கும்பகோணம் சென்று சங்கராச்சாரியார் சொன்னது போல- இவர் அவருக்கு அபிஷேகம் செய்ய, அவர் இவருக்கு அபிஷேகம் செய்ய- "வைரம்'' படம் போன்ற அந்த கண்கொள்ளா காட்சியைக் காண நெருக்கியடித்தவாறு பக்தர்கள் திரண்டு அதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் மடிந்தார்களே; மகாமக மோட்சம் பெற்றார்களே, அதைத்தான் ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு சமமாக மக்கள் நினைத்துக் கொள்வார்களே தவிர, 19-ந் தேதி நடைபெற்ற சம்பவத்தை அல்ல. எனவே ஜெனரல் டயருடன் ஒப்பிடத்தக்க அளவிற்கு அனைத்து பொருத்தங்களும் நிறைந்தவர் ஜெகம் புகழும் ஜெயலலிதா தான்.

அவர் தனது அறிக்கையை முடிக்கும்போது ஜனநாயகத்தை நான் ஏதோ குழிதோண்டி புதைத்து விட்டதாகப் புலம்பியிருக்கிறார். கட்சி ஆரம்பித்த 1949-ம் ஆண்டு முதல் இன்று வரை கட்சிக் கிளைக் கழக செயலாளர் முதல், தலைமைக் கழகம் வரை தேர்தல் நடத்தி வருகின்ற நாங்கள் எங்கே? கட்சி ஆரம்பித்த நாள் முதல் ஜனநாயக முறையிலே தேர்தல் நடத்தாமல் ஒவ்வொரு பொதுக்குழுவிற்கும் அழைப்பிதழ் யாருக்குக் கிடைக்கிறதோ அவர்கள் எல்லாம் பொதுக்குழு உறுப்பினர்கள் என்ற நிலையில் கட்சியை காட்சியாக நடத்திக் கொண்டிருக்கும் ஜெயலலிதா எங்கே? ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தவர் அவரா? நானா? எந்தவொரு மாவட்ட கழக செயலாளராவது அங்கே தேர்தல் நடைபெற்று வெற்றி பெற்றது உண்டா? ஜனநாயகத்தைப் பற்றி ஜெயலலிதாவா பேசுவது?

நீதிமன்றம் கொடுத்த நெற்றியடி பற்றியெல்லாம் ஜெயலலிதா பேசலாமா? ஒரு வழக்கு போதாதா? அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை ஜெயலலிதா தன் பெயரிலே குறைந்த விலைக்கு அவர் ஆட்சியிலே இருந்த காலத்தில் வாங்கியது பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி சொன்னது என்ன? இதோ, அந்த பொன்னான வார்த்தைகளில் சில...

"அரசின் நடத்தை விதிகளுக்கு சட்ட அங்கீகாரம் இல்லாத போதிலும், முதல்-அமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்போர், அந்த விதிகளை மதித்து நடக்க வேண்டியது அவசியம். சாதாரண அரசு ஊழியர் ஒருவர் எப்படி அரசு சொத்துகளை வாங்க முடியாதோ, அதேபோல, முதல்-அமைச்சர் பதவியில் இருக்கும் ஒருவரும் அரசு நிறுவனத்தின் சொத்துகளை வாங்க முயற்சிப்பது தவறு. சட்டம் என்பது சாதாரண அரசு ஊழியருக்கும், உயர் பதவியில் இருப்பவருக்கும் ஒன்றுதான். எனவே நடத்தை விதிகள் தன்னைக் கட்டுப்படுத்தாது என்றும், நடத்தை விதிகளின்படி அமைச்சர்கள் அரசு சொத்துகளை வாங்கக் கூடாது என்றும் உள்ளபோதிலும், தான் வாங்கியது தவறு இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது.

எனவே தனது தவறுக்கு வருந்தி, வாங்கிய நிலத்தை டான்சி நிறுவனத்துக்கே திரும்ப ஒப்படைக்க வேண்டும். முதல் குற்றவாளியான ஜெயலலிதா, தான் இந்த வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக டான்சி நிலப் பத்திரத்திலே உள்ள அவருடைய ஆடிட்டரும், அரசு அதிகாரிகளும் ஏற்றுக்கொண்ட அவருடைய கையெழுத்தையே இல்லை என்று மறுக்கக் கூடிய அளவிற்கு சென்றிருக்கிறார்.

நிபந்தனையில்லாமல் சொத்துகளைத் திரும்ப ஒப்படைப்பதோடு, நாங்கள் என்ன கூறியிருக்கிறோம் என்பதன் அடிப்படையில் அவர் தன்னுடைய மனச்சாட்சிக்கே பதிலளிக்க முன்வர வேண்டும்.

ஜெயலலிதாவே, நீதிமன்றம் 2003-ம் ஆண்டு உங்களுக்கு கொடுத்த நெற்றியடி போதுமா? இது போல பல பல நெற்றியடிகள் இருக்கின்றன, அவைகளையெல்லாம் பட்டியல் இட்டுக் காட்டட்டுமா?

இரக்கமில்லாமல் கேலி செய்கிறார் ...

எனக்கு முதுகு தண்டுவடத்தில் நடந்த அபாயகரமான அறுவை சிகிச்சைக்குப்பின்பும், அதில் நான் புத்துயிர் பெற்றுள்ளது பற்றியும் துளி இரக்கமும் இல்லாமல் ஜெயலலிதா கேலி செய்துள்ளதால்- பரவாயில்லை, எம்.ஜி.ஆர். நோயினால் வாடியபோதே, அவரை நீக்கிவிட்டு என்னை முதல்வராக்குக' என்று ராஜீவ்காந்திக்கு ஆங்கிலத்தில் கைப்பட கடிதம் எழுதி, உலகப் புகழ் பெற்ற உத்தமியல்லவா ஜெயலலிதா; எனவே என் உடல் நிலை பற்றிப் பேசுவதில் வியப்பு என்ன இருக்கிறது.

தனக்கு வரும் புகழ் கண்டு எம்.ஜி.ஆர். பொறாமைப்படுகிறார் என்று ஜெயலலிதா அந்நாள் பிரதமர் ராஜீவுக்கு கடிதம் எழுதிய கதையெல்லாம் ஒன்றா? இரண்டா?

"உம்'' என்று சொன்னால் ஓர் நொடியில் அவை ஒவ்வொன்றும் வெளிவராதா? என்று கேட்டுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X