For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்.கை அழைக்கவில்லை என்று மறுக்க ஏன் இத்தனை தாமதம்: கருணாநிதி

By Sridhar L
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: காங்கிரஸை நான் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்று இப்போது கூறும் ஜெயலலிதா, இதுகுறித்து அத்தனை நாளிதழ்களும் செய்திகள் வெளியிட்டு 13 நாட்கள் கழித்து இந்த மறுப்பை வெளியிடுவது ஏன் என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

5.3.2009 தேதியிட்டு ஜெயலலிதா பெயரில் வெளி வந்த இரண்டு அறிக்கைகளில் ஒன்றில் "அ.தி.மு.க. கூட்டணிக்கு காங்கிரசை அழைக்கவில்லை'' என்று ஜெயலலிதா தெரிவித்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அந்த செய்தியிலும் என்னை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்து, "கருணாநிதி, தனது அறிக்கையில், அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு நான் காங்கிரசுக்கு அழைப்பு விடுத்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

அ.தி.மு.க.விற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள நீண்ட கால நட்பை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சி புதை மண்ணில் மாட்டிக் கொண்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளிவர வேண்டும் என்று ஆலோசனை கூறினேனே தவிர, எங்கள் கூட்டணியில் வந்து சேர வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கவில்லை என்பதை முதலில் கருணாநிதிக்கு தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.

ஜெ. சொல்வது உண்மைதானா?

அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு காங்கிரசுக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்தார் என்று நான் எனது அறிக்கையிலே கூறியதாக ஜெயலலிதா தன் அறிக்கையிலே கூறியிருப்பது உண்மைதானா?

19.2.2009 அன்று சென்னையில் நடைபெற்ற திருமண விழாவிலே ஜெயலலிதா பேசிய பேச்சுக்கு "தினத்தந்தி'' கொடுத்த தலைப்பு- "காங்கிரஸ் கட்சிக்கு ஜெயலலிதா அழைப்பு'' என்பதாகும்.

"தினமணி'' கொடுத்த தலைப்பு- "காங்கிரசுக்கு ஜெயலலிதா அழைப்பு, தி.மு.க. வேண்டாம், அ.தி.மு.க. அணிக்கு வாருங்கள்'' என்பதாகும். அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ ஏடான "நமது எம்.ஜி.ஆர்.'' "தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலக வேண்டும்'' என்று தலைப்பு கொடுத்து அந்த செய்தியை வெளியிட்டிருந்தது.

"தி.மு.க.வுடனான கூட்டணியை முறிக்க காங்கிரசுக்கு அழைப்பு'' என்று "இந்து'' நாளிதழ் தலைப்பிட்டிருந்தது. "தினமலர்'' நாளேடு "அழைப்பு- அ.தி.மு.க. கூட்டணியில் சேர காங்கிரசுக்கு ஜெயலலிதா தூது'' என்று தலைப்பிட்டு அந்த செய்தியை வெளியிட்டிருந்தது. "டெக்கான் கிரானிகல்'' நாளிதழ் "காங்கிரஸ் கூட்டணிக்கு ஜெயா அழைப்பு'' என்று தலைப்பிட்டிருந்தது.

இந்த செய்திகளையெல்லாம் படித்த பிறகு தான், 21.2.2009 அன்று நான் எழுதிய "உடன்பிறப்பு மடலில்'' இலங்கை பிரச்சினை, என் உடல் நிலை, வழக்கறிஞர்கள் பிரச்சினை ஆகியவற்றைப் பற்றியெல்லாம் எழுதி விட்டு, கடைசியில் ஒரு பத்தியில், திருமண விழா ஒன்றில் ஜெயலலிதா பேசிய பேச்சு ஏடுகளில் வெளி வந்ததையொட்டி, "நேற்று வரையில் காங்கிரசோடு தொடர்பு இல்லை, உறவு இல்லை என்று கூறிக் கொண்டிருந்து விட்டு- கம்யூனிஸ்டு கட்சிகளையும் ஏமாற்றி விட்டு- நேற்றைய திருமண விழாவில் "நானும், காங்கிரசும் கூட்டுச் சேரப் போகிறோம்'' என்று நாட்டை ஏமாற்றுகின்ற அரசியல் நாட்டியம் எனக்கு தெரியாது.

"வெளி நாட்டுக்காரி, இந்தியாவிற்கு அரசியா?'' என்று கேட்டவர்கள் யார் என்று எனக்கும் தெரியும். நாட்டிற்கும் தெரியும். சோனியா காந்தி என்ற அந்த சொக்கத்தங்கத்தை "பதி பக்தி இல்லாதவர்'' என்று சொன்னவர் யார் என்று எனக்கும் தெரியும். நாட்டிற்கும் தெரியும்.

பதி பக்தியைப் பற்றி அவ்வாறு பேசியவர்- எம்.ஜி.ஆரைப் பற்றி ராஜீவ் காந்திக்கு கைப்பட என்ன கடிதம் எழுதினார் என்பதும் எனக்கு தெரியும். அது பத்திரிகைகளிலேயே வந்திருக்கிறது. இப்படிப்பட்டவரை காங்கிரஸ் கட்சி; கூட்டணி சேர்த்துக்கொள்ள வேண்டுமாம்!

இவர் பிறந்த கர்நாடக மாநிலத்தில் பிறந்தவராம்- கடமை தவறாத நண்பர்- வீரப்ப மொய்லி- இன்று இவருக்கு அளித்த மறுப்பு- தமிழ் நாட்டு காங்கிரஸ் நண்பர்களே, எண்ணிப் பார்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு!'' என்று எழுதியிருந்தேன்.

13 நாள் தாமதம் ஏன்?

ஜெயலலிதா காங்கிரசுக்கு அழைப்பு விடுத்ததாக பத்திரிகைகள் எல்லாம் 20.2.2009 அன்று வெளியிட்ட செய்திக்கு 13 நாட்கள் கழித்து காங்கிரசை அ.தி.மு.க. கூட்டணிக்கு அழைக்கவில்லை என்று ஜெயலலிதா மறுப்பு தெரிவித்திருக்கிறார் என்றால், தமிழ்நாட்டு மக்கள் தான் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிலே உள்ள அத்தனை பத்திரிகைகளுமா ஜெயலலிதாவின் பேச்சை தவறாக வெளியிட்டு விட்டன?.

தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பத்திரிகைகளும் காங்கிரசுக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்ததாக செய்தி வெளியிட்டு, அந்த செய்தி தவறாக இருந்தால் அந்த செய்திகள் வெளி வந்த மறுநாளே அல்லது அதற்கு அடுத்த நாளே ஜெயலலிதா ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை? எது எதற்கோ மறுப்பு தெரிவிக்கும் ஜெயலலிதா காங்கிரசுக்கு தான் அழைப்பு விடுக்கவில்லை என்று இத்தனை நாட்களும் மறுக்காமல் இருந்ததற்கு என்ன காரணம்?

எதிர்பார்த்துக் காத்திருந்தாரா?

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பது குறித்து எந்தவொரு திட்டமும் இல்லை என்று காங்கிரஸ் மேலிடத்தின் சார்பில் அருமை நண்பர் வீரப்ப மொய்லி மறுத்த பிறகாவது ஜெயலலிதா தான் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்திருக்கலாமே?

அப்படியென்றால் நேற்று வரை காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வருமென்று எதிர்பார்த்து காத்திருந்தாரா? தற்போது அவர்கள் வரவில்லை என்பது உறுதியானவுடன், தான் காங்கிரசை அழைக்கவில்லை என்று மறுக்கிறாரா?

இப்போது கூட காங்கிரசை கூட்டணிக்கு அழைக்கவில்லை என்று ஜெயலலிதா அறிக்கை விட்டிருப்பது தன்னுடன் கூட்டு சேருவதற்காக முதலிலே வந்து பேசிய இடதுசாரி கட்சிகளை ஏமாற்றுவதற்காக தானா?

காங்கிரசுக்கு எதிராக அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர ஜெயலலிதாவுடன் இடதுசாரி கட்சிகள் பேசிய பின்னரும்- அந்த இடதுசாரிகளுக்கு எதிரான காங்கிரஸ் கட்சிக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்தது சரி தானா?

நம்பத்தகுந்ததுதானா?

தனது பழைய நண்பன் என்பதற்காக காங்கிரசுக்கு ஆலோசனை தான் கூறினேனே தவிர, அவர்களை கூட்டணி சேர்வதற்கு அழைக்கவில்லை என்று இப்போது ஜெயலலிதா கூறியிருப்பதாவது நம்பத்தகுந்தது தானா? ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்டது என்று ஒரு பழமொழி சொல்வார்களே, அதைப் போல தங்கள் அணியிலே இல்லாத காங்கிரஸ் கட்சியின் நலனைக் கருதி ஆலோசனை சொன்னேன் என்று கூறுவது ஏதாவது பொருத்தமாக இருக்கிறதா?

எதிர் அணியிலே இருப்பவர் வெற்றி பெற நான் ஆலோசனை கூறினேன் என்றால், அது தற்போது கூட்டணியிலே உள்ள நண்பர்களுக்கு துரோகம் விளைவிப்பது ஆகாதா?

அ.தி.மு.க. கூட்டணியில் சேர காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கவில்லையாம், ஆனால் தி.மு.க. அணியிலிருந்து வெளியே வர வேண்டும் என்று ஆலோசனை கூறினாராம் ஜெயலலிதா. தி.மு.க. அணியிலிருந்தும் வெளியே வர வேண்டும், தங்கள் அணிக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்றால், காங்கிரசின் கதி என்ன? அவர்கள் தனியாக நிற்க வேண்டுமென்பது ஜெயலலிதாவின் எண்ணமா? அது பழைய நண்பர்கள் என்பதற்காக உண்மையிலேயே அக்கறையோடு சொல்லப்பட்ட ஆலோசனையா?

ஜெயலலிதாவின் 19-ந் தேதிய பேச்சுக்கும்- இன்றைய அறிக்கைக்கும் உள்ள உண்மையான பொருளைப் புரிந்து கொண்டு- "ஒரு'' நாளேடு இன்று ஜெயலலிதாவின் அறிக்கைக்கு வெளியிட்டுள்ள தலைப்பே, "காங்கிரசை அழைக்கவில்லை, ஜெயலலிதா திடீர் பல்டி'' என்பதாகும். அந்த நாளேடு என்ன தி.மு.க. நாளேடா? எங்களையும் விமர்சிக்கும் நாளேடு தான். அந்த நாளேடே ஜெயலலிதாவின் பல்டி என்று தெரிவித்திருக்கிறது என்றால்- காங்கிரசுக்கு எதிராக அ.தி.மு.க., இருப்பதால் தான், தி.மு.க. அணியில் இருந்து விலகி அ.தி.மு.க. பக்கம் நாங்கள் செல்கிறோம் என்று வாதம் செய்யும் எனதருமை கம்யூனிஸ்டு கட்சிகளின் தோழர்கள் தான் இந்த உண்மைகளையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கம்யூ. நண்பர்கள் சிந்திக்க வேண்டாமா?

ஜெயலலிதாவின் வார்த்தைகளை நம்பி காங்கிரஸ் கட்சியின் சார்பில் அ.தி.மு.க. அணிக்கு வரத் தயார் என்று ஒப்புக் கொண்டிருந்தால்- ஒப்புக்கொள்ளவில்லை, ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள்- ஒரு பேச்சுக்காக சொல்கிறேன், அப்படி அவர்கள் ஒப்புக் கொண்டிருந்தால், ஜெயலலிதா கம்யூனிஸ்டு கட்சிகளை என்ன செய்திருப்பார் என்று சிந்தனை செய்யக் கூடிய அந்த கட்சியின் நண்பர்கள் சிந்திக்க வேண்டாமா? கருவேப்பிலை மாதிரி ஆக்கி விடமாட்டாரா?

ஜெயலலிதா தனது அறிக்கையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தி.மு.க. செயல்பட்ட சில நிகழ்ச்சிகளையெல்லாம் எடுத்துக் கூறி- எங்கள் அணியிலே "சிண்டு'' முடிய முயற்சி செய்திருக்கிறார். பாவம், இந்திரா காந்தி அம்மையார் கடற்கரை கூட்டத்திலே பேசும்போது, "கருணாநிதி எங்கள் அணிக்கு எதிராக இருந்தாலும், ஆதரவாக இருந்தாலும் இரண்டு நிலையிலும் உறுதியாக இருப்பார்'' என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எனவே தி.மு.க. தோழமை அணியிலே இருந்தால் உள்ளன்போடு செயல்படுவதைப் போலவே, எதிர் அணியிலே இருந்த காலத்திலும் உறுதியாக இருந்துள்ளதே தவிர, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி இரண்டு தரப்பினரையும் ஏமாற்றும் செயலிலே என்றைக்கும் ஈடுபட்டது கிடையாது. "அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் கட்சி மேலிடம் பரிசீலிக்க வேண்டும் என காங்கிரஸ் மாவட்ட தலைவர்களும், மாநில நிர்வாகிகளும் குலாம்நபி ஆசாத்திடம் வற்புறுத்தினர் என்ற உண்மை செய்தியை அனைத்து நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன'' என்று ஜெயலலிதா அறிக்கையிலே எழுதியிருக்கிறார்.

அனைத்து நாளிதழ்களும் என்று அவர் எழுதியிருப்பதே முழுப்பொய். "தினமணி'' நாளிதழ் ஒன்று மட்டும் தான், அதுவும் கூட "கூறப்படுகிறது'' என்ற வகையிலே தான் அந்த செய்தியை வெளியிட்டிருந்தது.

ஏன் திடீர் அக்கறை?

மேலும் ஜெயலலிதா தனது இரண்டாவது அறிக்கையில் "நாட்டைச் சுரண்டி எடுப்பதில் தி.மு.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கிடையே ஒத்த கருத்து இருக்கிறது'' என்று தி.மு.க.வையும், காங்கிரசையும் சாடியிருக்கிறார் என்றால், அந்த காங்கிரஸ் கட்சியின் மீது ஏன் திருமண விழாவில் திடீர் அக்கறை காட்டினார்?

காங்கிரஸ் கட்சியிடம் தனக்குள்ள நீண்டகால நட்பைக் கருதி ஆலோசனை கூறினேன் என்று ஜெயலலிதா இப்போது கூறுகிறார். காங்கிரஸ் கட்சிக்கும், ஜெயலலிதாவிற்கும் உள்ள நீண்ட கால நட்பைப் பற்றி நமக்கு தெரியாதா?

1999-ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடந்த போது அ.தி.மு.க.வும், காங்கிரசும் தோழமை கொண்டு போட்டியிட்ட போதே- விழுப்புரம் பொது கூட்டத்தில் ஜெயலலிதாவும், சோனியா காந்தியும் இணைந்து 4 மணி அளவில் பேசுவார்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அந்த 4 மணி கூட்டத்திற்கு சென்னையிலிருந்து ஜெயலலிதா மாலை 3.20 மணிக்கு கிளம்பினார். சோனியா இரண்டு மணி நேரம் மேடையிலே காத்திருந்தார்.

சோனியாவை காக்க வைத்தது நட்பினால்தானா?

ஜெயலலிதாவிற்காக போடப்பட்டிருந்த நாற்காலியும் இரண்டு மணி நேரம் காலியாக கிடந்தது. அந்த அளவிற்கு அவமானப்படுத்தியது கூட காங்கிரஸ் கட்சியிடம் உள்ள நீண்ட கால நட்பின் அடிப்படையில் தானா என்பதை ஜெயலலிதா தான் கூற வேண்டும்.

"ராஜீவ் காந்தி மரணத்தால் ஏற்பட்ட அனுதாபத்தில் நாங்கள் வெற்றி பெறவில்லை, அவர் மரணமடையாதிருந்தாலும் நாங்கள் வெற்றியை பெற்றிருக்க முடியும். சோனியாவின் உறவினர்கள் இத்தாலி நாட்டுக்காரர்கள், பேராசை பிடித்தவர்கள்.

சோனியா காந்தி பிரதமரின் மனைவியாக இருந்து இந்த நாட்டை வேட்டையாடியிருக்கிறார். சூறையாடியிருக்கிறார். எவ்வளவோ கொள்ளை லாபம் அடித்திருக்கிறார், சோனியா காந்தி என்ற அரசியல் வியாபாரியின் கைகளில் இந்தியா என்ற மாபெரும் நாடு சிக்கி விடக் கூடாது.

புண்மொழிகள்தான் பொன்மொழிகளா?

"செயல்படாத பிரதமர் நரசிம்மராவ். அவருக்கும், எனக்கும் தலைமுறை இடைவெளி'', "ராஜீவ்காந்தி கொலையில் மூப்பனாருக்கும் பங்கு உண்டு, "நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசுவது எல்லாம் முழுமையான நான்சென்ஸ்'' இப்படி காங்கிரஸ் தலைவர்களைப் பற்றி ஜெயலலிதா சிந்திய புண்மொழிகள் தான் பொன்மொழிகளா?

ஜெயலலிதா தன் விளக்க அறிக்கையை ஒரு திருக்குறளைக் குறிப்பிட்டு முடித்திருக்கிறார். ஒருவேளை ஜெயலலிதாவிற்காக அறிக்கை எழுதியவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு, அந்த திருக்குறளை அதிலே இணைத்திருக்கிறார்களோ என்னவோ!

நாடொறும் நாடி முறை செய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும் .. இந்த திருக்குறள் 1995-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது, கொடைக்கானல் "பிளசண்ட் ஸ்டே'' ஓட்டலுக்கு அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டதையொட்டிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி- சீனிவாசன் ஏப்ரல் 10-ந் தேதியன்று வழங்கிய தீர்ப்பின் முடிவில்,

சட்டத்தின் நடைமுறையிலிருந்து சட்டத்தை உடைப்பதற்கு (அ.தி.மு.க.) அரசு விதி விலக்கு அளித்துள்ளது.
இது கட்டிலின் அளவுக்கு தக்கபடி மனிதனின் உடல் அளவை வெட்டுவது போன்றதாகும்.

இந்த வழக்கில் வள்ளுவர் சொன்ன அறிவு செறிந்த கருத்தை அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
நாடொறும் நாடி முறை செய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்..

உடன்பிறப்பே, இவ்வாறு அ.தி.மு.க. ஆட்சிக்காகவும், குறிப்பாக ஜெயலலிதாவுக்காகவும் உயர்நீதி மன்ற நீதிபதி அளித்த தீர்ப்பிலே உள்ள இந்த திருக்குறளை மறக்க முடியுமா என்று கேட்டுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X