For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொடரும் கேபிள் யுத்தம் - வாடிக்கையாளர்கள் பெரும் அவஸ்தை

By Sridhar L
Google Oneindia Tamil News

Cable TV Dish
சென்னை: கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கிடையிலான சண்டை நீடித்து வருவதால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தொழில் போட்டியை சமாளிக்கவும்,எதிரிகளை விரட்டவும், எதிர்த்தரப்பினரின் கேபிள்களை அறுத்து விடுவதுதான் இப்போது எம்.எஸ்.ஓக்களின் ஸ்டைல் ஆக மாறியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அரும்பாக்கம், அண்ணா நகர், சூளைமேடு, பாலவாக்கம், நீலாங்கரை ஆகிய பகுதிகளில் உள்ள ஹேத்வே நிறுவனத்தின் கேபிள்களையம், அதன் கீழ் வரும் ஆபரேட்டர்களின் கேபிள்களையும் சில விஷமிகள் அறுத்து எறிந்துள்ளனர்.

இதனால் செவ்வாய்க்கிழமை இரவு முதல் அப்பகுதிகளில் ஒரு சேனலும் தெரியவில்லை. கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு 25 ஆயிரம் பேர் டிவியே பார்க்க முடியாமல் இருட்டடிப்புக்குள்ளானார்கள்.

புதன்கிழமை மாலைதான் அறுக்கப்பட்ட கேபிள்களுக்குப் பதில் புதிய கேபிள்கள் போடப்பட்டு சேவையை தொடங்கியது ஹாத்வே. இருப்பினும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் இன்னும் நிலைமை சரியாகவில்லையாம்.

பல இடங்களில் தங்களது கேபிள்களை காய்கறிகளை வெட்டுவது போல துண்டு துண்டாக வெட்டி எறிந்து சென்றுள்ளனர் விஷமிகள் என்று கூறுகிறார் ஹாத்வே நிறுவனப் பிரதிநிதி ஒருவர்.

கடந்த 2 மாதங்களில் மட்டும் சென்னையில் 300 இடங்களில் தங்களது கேபிள்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக 30 புகார்கள் போலீஸில் கொடுக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை 2 புகார்களை மட்டும் போலீஸார் பதிவு செய்து எப்.ஐ.ஆர். போட்டுள்ளனராம். இரண்டு இடங்களில் கேபிள்களை கட்டும் நபர்களை வீடியோவில் படம் பிடித்துக் கொடுத்தும் கூட அதை ஏற்க போலீஸ் மறுத்து விட்டதாம்.

ஹாத்வே பிரதிநிதி மேலும் கூறுகையில், சென்னையில் எங்களிடம் 800 ஆபரேட்டர்கள் இருந்தனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் செட் டாப் பாக்ஸ் வாடிக்கையாளர்கள இருந்தனர்.

கடந்த ஆண்டு, எங்களது கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 50 கோடி செலவிட்டோம். ஆனால் அத்தனையும் வீணாகி விட்டது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 600 வாடிக்கையாளர்கள் எங்களை விட்டு போய் விட்டனர். விஷமிகள் கேபிள்களை அறுத்தெறிவதால் அதற்குப் பயந்து அவர்கள் மாறி விட்டனர்.

திங்கள்கிழமை மட்டும் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 80 ஆபரேட்டர்கள் விலகி விட்டனர். புதன்கிழமை மேலும் 60 பேர் விலகியுள்ளனர்.

இதனால் வட சென்னையில் 50 கிலோமீட்டர் தூரத்திற்குப் போட்ட கேபிள்களை நாங்கள் எடுக்க வேண்டியதாயிற்று.

தற்போது கே.கே.நகர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் சில கேபிள் டிவி ஆபரேட்டர்களே எங்களிடம் உள்ளனர் என்றார் அவர்.

கேபிள் டிவி நிறுவனங்களுக்கிடையே நடக்கும் இந்த சண்டையில் உடைவது வாடிக்கையாளர்களின் மண்டைதான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X