For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரையில் வாக்காளர்களுக்கு தலா ரூ. 5000 கொடுக்கிறது திமுக - ஜெ.

By Sridhar L
Google Oneindia Tamil News

Jayalalitha
மதுரை: மதுரையில் முதல்வர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் நிற்கவுள்ளதால், அங்கு இப்போதே வாக்காளர்களுக்கு தலைக்கு ரூ. 5000 கொடுக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் காவல்துறை உதவி ஆணையர்கள் நான்கு பேரை வைத்து தேர்தலில் வெற்றி பெறவும் திட்டமிட்டுள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு நேர் மாறாக, மார்ச் 2ம் தேதி 1,700 வேளாண் உதவி அலுவலர்களை முன் தேதியிட்டு அரசு நியமித்துள்ளதாக தெரிகிறது.

தேர்தலை முன்னிட்டு ஆங்காங்கே இலவச டி.விக்கள் வழங்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.

தேர்தலை முன்னிட்டு, மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்த காவல் துறை அதிகாரிகளை பணிமாற்றம் செய்ய வேண்டும். பணி மாற்றம் செய்ததாக ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டன. ஆனால், பல மாவட்டங்களில் மாற்றப்பட்ட அதிகாரிகள் அதே இடங்களில் இன்னமும் பணிபுரிவதாக தகவல்கள் வருகின்றன.

குறிப்பாக மதுரை மாநகரில் உதவி ஆணையர்களாக உள்ள நான்கு பேர் திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட இடங்களுக்கு மாற்றப்படுவதாக அறிவித்தும் கூட அவர்கள் இன்னும் மாற்றப்படாமல் அதே இடத்தில்தான் உள்ளனர்.

அவர்களில் ஒரு உதவி ஆணையாளர், மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரான பொட்டு சுரேஷ் என்பவரின் உறவினராவார்.

இந்த நான்கு உதவியாளர்களையும் வைத்துக் கொண்டு, அவர்களின் உதவியுடன் தேர்தலில் வெற்றி பெற்று விட திமுக திட்டமிட்டுள்ளது.

மேலும், முதல்வர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் மதுரை தொகுதியில் நிற்கவுள்ளார். இதனால் அங்கு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, வாக்காளர்களுக்கு தற்போதே தலைக்கு ரூ 5000 பணம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆணையம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஆணைய உத்தரவின் பேரில் மாறுதல் செய்யப்பட்ட அனைவரும் மாற்றம் செய்யப்பட்டார்களா என்பதையும் கண்டறிய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

அவர் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில்,

சென்னை சட்டக்கல்லூரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூடப்பட்டது. நான்கு மாதங்கள் உருண்டோடிவிட்டன. எந்தப் பிரச்சினைக்காக சென்னை சட்டக்கல்லூரி மூடப்பட்டதோ, அந்தப் பிரச்சினை தீருவதற்கான எந்தவித நடவடிக்கையையும் கருணாநிதி எடுக்கவில்லை.

இந்தக் கல்வி ஆண்டு முடிவுக்கு வரும் தருவாயில் உள்ள சூழ்நிலையில் கூட, சட்ட அமைச்சரோ அல்லது கல்வி அமைச்சரோ இது குறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை. சில தவறான வழிகாட்டுதல்களால் சில மாணவர்களின் காட்டுமிராண்டித்தனமான செயலால் ஏற்படுத்தப்பட்ட சூழ்நிலையை சரியாக கையாள முடியாததால், அதன் விளைவாக, நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

வெளிச்சந்தையில் ஒரு கிலோ அரிசியின் விலை 40 ரூபாயை தாண்டிவிட்டது. மயக்கமடையும் அளவுக்கு பணவீக்கம் உயர்ந்தபோது இருந்த சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளின் விலைகள் இன்னும் இறங்கவில்லை.

சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக தடுமாறிக்கொண்டிருக்கின்ற நடுத்தர மக்களால் காசு கொடுத்து வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி ஏறிக்கொண்டிருக்கிற போதிலும், இந்த விலைவாசி உயர்வு விவசாயிகளுக்கும் எந்தப் பயனையும் தரவில்லை. இதற்குக்காரணம் மன சாட்சியற்ற இடைத்தரகர்கள் அதிக அளவில் பொருட்களை பதுக்கி வைப்பதுதான். பதுக்கி வைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களை வெளிக்கொணரவோ அல்லது அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்கவோ திமுக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மின்சார உற்பத்தியை பெருக்குவதில் இந்த திமுக அரசு தோல்வியையே தழுவியுள்ளது. மின்சார உற்பத்தியை பெருக்க இந்த அரசு எதுவும் செய்யவில்லை. மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு அரசமைப்பு கடமைகளை கவனிப்பதற்கு நேரமே இல்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X