For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீதிபதிக்கு மீண்டும் பதவி: ஷெரீப் போராட்டம் ரத்து

By Sridhar L
Google Oneindia Tamil News

Nawaz Sharif
இஸ்லாமாபாத்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரியை மீண்டும் அப்பதவியில் நியமிக்க பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டு விட்டது. இதையடுத்து தனது நடைபயணப் போராட்டத்தை ரத்து செய்துள்ளார் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்.

டிஸ்மிஸ் செய்யப்பட்ட பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரி மற்றும் பிற நீதிபதிகளை மீண்டும் அதே பதவியில் அமர்த்த வேண்டும் என்று கோரி தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி நீண்ட நெடிய நடைபயண போராட்டத்தை அறிவித்தார் நவாஸ் ஷெரீப்.

இந்தப் போராட்டத்திற்கு வக்கீல்களும் ஆதரவு அளித்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் கூடி இஸ்லாமாபாத் நோக்கி நடைபயணம் கிளம்பினர்.

இதனால் நாடுமுழுவதும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், நாட்டின் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ராணுவம் அந்தப் பணியைச் செய்ய நேரிடும் என ராணுவ தளபதி பர்வேஸ் கயானி, அதிபர் சர்தாரிக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து ராணுவப் புரட்சி வெடிக்கும் என்ற நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவு்ம், இங்கிலாந்தும் தலையிட்டு சர்தாரியிடம் சமரசத் திட்டத்தை அளித்தன. ஆனால் அதை அவர் நிராகரித்து விட்டார்.

மேலும், லாகூருடன் நடைபயணத்தை ஒடுக்குமாறும் போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நவாஸ் ஷெரீப், அவரது தம்பி சபாஷ் ஷெரீப், எதிர்க்கட்சித் தலைவர்களி்ல் ஒருவரான இம்ரான் கான் உள்ளிட்டோரைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டது.

சபாஷ் ஷெரீப்பை ராவல் பிண்டி அருகே போலீஸார் கைது செய்தனர். ஆனால் போலீஸாருக்கு டேக்கா கொடுத்து விட்டு அவர் தப்பினார், இஸ்லாமபாத் வந்து சேர்ந்தார்.

நவாஸ் ஷெரீப் வீட்டுக் காவலை மீறி போராட்டத்தை லாகூரில் தொடங்கினார். இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நிலைமை மேலும் மோசமானதைத் தொடர்ந்து சர்தாரி வெகுவாக இறங்கி வந்துள்ளார். இப்திகார் செளத்ரியை மீண்டும் அப்பொறுப்பில் நியமிக்க ஒப்புக் கொண்டு விட்டார். மேலும் நீக்கப்பட்ட பிற நீதிபதிகளையும் நியமிக்கவும் சர்தாரி அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு முஷாரப்பால் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்கள் ஆவர்.

இந்த செய்தி பரவியதும் நவாஸ் ஷெரீப் குஜ்ரன்வாலாவில் தொடங்கிருந்த தனது நடைபயணத்தை ரத்து செய்தார். மேலும், பிரதமர் கிலானி, அதிபர் சர்தாரிக்கு நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் கிலானி இன்று காலை நாட்டுக்கு ஆற்றிய உரையில், நீக்கப்பட்ட நீதிபதிகள் அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதிபர் சர்தாரியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் பல்வேறு நகரங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த தடை உத்தரவுகள் நீக்கப்பட்டுள்ளன.

ஷெரீப் சகோதரர்கள் மீதான புகார்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோர்ட்டை நாங்கள் கேட்டுக் கொள்வோம். நாட்டின் வளர்ச்சியில் நவாஸ் ஷெரீப், அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

கைது செய்யப்பட்ட அனைத்து வக்கீல்கள், கட்சியினர் விடுதலை செய்யப்படுவார்கள். தலைமை நீதிபதி (இப்திகார் செளத்ரி) மார்ச் 21ம் தேதி பதவியேற்பார் என்றார்.

அரசின் இந்த திடீர் மாற்றத்திற்கு ராணுவமே முக்கிய காரணம் என முன்னாள் ஐ.எஸ்.ஐ தலைவர் ஹமீத் குல் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், சர்தாரிக்கு அதிகாரம் சுத்தமாக இல்லை. அவர் மரியாதையாக அனைத்து அதிகாரங்களையும் நாடாளுமன்றத்திற்கு மாற்றி விட வேண்டும் என்றார் குல்.

முனனதாக நேற்று இரவு பிரதமர் கிலானி, அதிபர் சர்தாரி மற்றும் ராணுவ தளபதி கயானியுடன் விடிய விடிய ஆலோசனை நடத்தினார்.

நவாஸ் ஷெரீப் தடையை மீறி நடைபயணத்தை மேற்கொண்டால் பெரும் விளைவுகள் ஏற்படலாம். எனவே அதைத் தடுக்க சர்தாரி இறங்கி வர வேண்டும் என கிலானியும், கயானியும் வற்புறுத்தியதைத் தொடர்ந்தே ஷெரீப்பின் கோரிக்கைகளை ஏற்க சர்தாரி சம்மதித்ததாக தெரிகிறது.

இந்த நடவடிக்கைகள் மூலம் ராணுவப் புரட்சி ஏற்படுமோ என்ற பீதி அகன்றுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X