For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடும்பத்துடன் சிறையை சுற்றிப் பார்த்த மு.க.ஸ்டாலின்

By Sridhar L
Google Oneindia Tamil News

Stalin with Family
சென்னை: இடிக்கப்படவுள்ள சென்னை மத்திய சிறையை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் சுற்றிப் பார்த்தார். அப்போது தான் அடைக்கப்பட்ட அறை, முதல்வர் கருணாநிதி அடைக்கப்பட்டிருந்த இடங்களை குடும்பத்தினரிடம் சுட்டிக் காட்டி மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

172 வயதாகி விட்ட சென்னை மத்திய சிறைச்சாலை இடிக்கப்படவுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் சுற்றிப் பார்ப்பதற்காக சிறை வளாகத்தை அதிகாரிகள் திறந்து விட்டுள்ளனர்.

தினசரி நூற்றுக்கணக்கானோர் சிறை வளாகத்தை சுற்றிப் பார்த்து செல்கின்றனர். இதுதான் ஜெயலலிதா இருந்த அறை, இதுதான் கருணாநிதி இருந்த அறை, இங்குதான் ஆட்டோ சங்கரை தூக்கில் போட்டனர் என்று செய்தித் தாள்களில் படித்த இடங்களை நேரில் பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஒரு விஐபியின் வருகையை மத்திய சிறை கண்டது. அவர் மு.க.ஸ்டாலின்.

தனது மனைவி துர்கா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீஷன், மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா, சகோதரர் மு.க.தமிழரசின் மகன் அருள் தமிழரசு, மு.க.செல்வத்தின் மகள் எழிலரசி, பேரப் பிள்ளைகளுடன் மாலையில் சிறைக்கு வந்தார் ஸ்டாலின். அவர்களுடன் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது தாயார் மல்லிகா மாறன் ஆகியோரும் வந்திருந்தனர்.

அனைவரையும் சிறைக்குள் அழைத்துச் சென்று ஒவ்வொரு பகுதியாக சுற்றிக் காட்டினார் ஸ்டாலின். தான் அடைக்கப்பட்டிருந்த அறையையும் அவர் காட்டினார்.

9ம் நம்பர் பிளாக்கில் உள்ள அறையைக் காட்டிய அவர் மிசாவில் என்னைக் கைது செய்த போது இங்குதான் அடைத்தனர். காற்றே வராது. நெருக்கடியாக இருக்கும். இந்த அறையில் நிறையப் பேரை அடைத்து வைத்திருந்தார்கள் என்று மிசா காலத்திற்கு குடும்பத்தினரைக் கூட்டிப் போனார்.

பிறகு இன்னொரு இடத்திற்கு வந்தபோது இங்குதான் கைதிகளை வரிசையாக நிற்க வைத்து அடிப்பார்கள் என்றார்.

மிசா காலத்தில் ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக சிறைக்குள் உள்ள அனைத்துப் பகுதிகளையும் ஸ்டாலின் தனது குடும்பத்தினருக்கு காட்டி அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் வெளியே வந்த அவர்கள் மொத்தமாக நின்று குரூப் போட்டோவும் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் தனது பேரன் இன்பாவிடம் (உதயநிதியின் மகன்) ஸ்டில் கேமராவைக் கொடுத்து படம் எடு பார்ப்போம் என்று ஸ்டாலின் கூற, இன்பாவும் கேமராவை வாங்கி படு ஸ்டைலாக பலவித கோணங்களில் தாத்தாவையும் அனைவரையும் சுட்டுத் தள்ளினான்.

பின்னர் சிறையின் முகப்பு வாசலை மகனிடம் காட்டிய ஸ்டாலின், இங்குதான் உன் தாத்தா உட்கார்ந்திருந்தார் என்று கூறினார். 2001ம் ஆண்டு ஜெயலலிதா அரசால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார் கருணாநிதி. அப்போது சிறைக்குக் கொண்டு வரப்பட்ட அவர், சிறைக்குள் போகாமல் வாசலிலேயே அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது நினைவிருக்கலாம். அதைத்தான் தனது மகனிடம் சுட்டிக் காட்டினார் ஸ்டாலின்.

சிறைக்கு வந்த ஸ்டாலினைப் பார்த்த மாணவ, மாணவியரும், பொதுமக்களும் அவரிடம் போட்டி போட்டு ஆட்டோகிராப் வாங்கினர்.

பின்னர் தனது ஆட்டோகிராப் பயணத்தை முடித்துக் கொண்ட ஸ்டாலின் அனைவரிடமும் விடை பெற்று திரும்பிச் சென்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X