• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டோரன்டோவில் 1.5 லட்சம் தமிழர்கள் பிரமாண்ட மனித சங்கிலி

By Sridhar L
|

டோரன்டோ: கனடாவின் டோரன்டோ நகரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

கனடா தமிழ் மாணவர் சமூகம், கனடா தமிழர் சமூகம் ஆகியவை இணைந்து இந்த பிரமாண்ட போராட்டத்தை நடத்தின.

நேற்று நடந்த பிரமாண்டப் போராட்டத்துக்கு உரிமைப் போர் என பெயரிடப்பட்டிருந்தது. கனடாவில் இதுவரை இப்படி ஒரு போராட்டம் நடந்ததில்லை என்று கூறும் அளவுக்கு மிகப் பிரமாண்டமானதாக இது அமைந்தது.

சிறிலங்கா படையினர் தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற வேண்டும், தமிழ் மக்களை அவர்கள் வாழ விரும்பும் பூர்வீக மண்ணில் இருந்து வெளியேற்றக்கூடாது, உடனடி போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும், வன்னி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் உடனடியாக அனுப்பப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளுடன் விடுதலைப் புலிகளை அங்கீகரித்து - அவர்கள் மீதான தடையை நீக்கி - உடனடி பேச்சுக்களை விடுதலைப் புலிகளுடன் தொடங்க வேண்டும் என்ற முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

டோரன்டோ நகரின் பல பகுதிகளிலும் தமிழர்களின் வாகனங்களில் விடுதலைப் புலிகளின் கொடி பறக்க விடப்பட்டிருந்தது.

டோரன்டோ நகரின் அனைத்து சாலைகள், தெருக்களிலும் தமிழர்கள் தலைகளாக காணப்பட்டதால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.

இருப்பினும் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாத வகையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழர்கள் நடத்திய பிரமாண்டப் போராட்டத்தை கனடா நாட்டின் அனைத்து மீடியாக்களும் ஒலி, ஒளிபரப்பு செய்தன.

கனடா நாட்டின் வானொலி, டிவிகளில் இதுவே முதன்மைச் செய்தியாகவும் விளங்கியது.

மிகவும் நேர்த்தியாகவும், அமைதியான முறையிலும் தமிழர்கள் போராட்டத்தை நடத்தி வருவதாகவும் மீடியாக்கள் பாராட்டின.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு அந்த மனுவை கனடா பிரதமர், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பவுள்ளதாகவும் தெரிவி்கப்பட்டது.

போராட்டத்தின் முடிவில் தமிழீழத் தேசியக் கொடியும், கனடா நாட்டின் தேசியக் கொடியும் ஏற்றப்பட்டன.

தமிழர்களின் இந்த பிரமாண்டப் போராட்டம் மிக மிக அமைதியாகவும், பிரச்சினைகள் எதுவும் இல்லாமலும் முடிந்ததற்காக கனடா காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல மான்ட்ரீல் நகரிலும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது.

மாணவர்கள், பொதுமக்கள் எனப் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு, தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பினர்.

வித்தியாதரன் பயங்கரவாதியாம்!:

இதற்கிடையே உதயன், சுடரொளி பத்திரிகைகளின் ஆசிரியர் வித்தியாதரன் ஒரு பயங்கரவாதி என்று கூறியுள்ளார் இலங்கை பாதுகாப்பு அமைச்சக ஆலோசகர் கோத்தபயா ராஜபக்சே.

தலைநகர் கொழும்பில் வைத்து வித்தியாதரனை ராணுவத்தினர் கடத்திச் சென்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

வித்தியாதரன் கைதுக்கு ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இருப்பினும் இலங்கை அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் அவர் ஒரு தீவிரவாதி, அவரை காப்பாற்ற முயல்வோரின் கரங்கள் ரத்தக் கறை படிந்தவை என்று கோபாவேசமாக கூறியுள்ளார் கோத்தபயா.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் எஸ்.பி.எஸ். டிவியின் டேட்லைன் நிகழ்ச்சிக்காக கோத்தபயாவிடம் அதன் நிருபர் பேட்டி கண்டபோது, இவ்வாறு கோபமாக கூறினார் கோத்தபயா ராஜபக்சே.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X