For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீட்டுக் கடன் வாங்குவது குதிரைக் கொம்பு!

By Sridhar L
Google Oneindia Tamil News

House Logo
நாடெங்கும் வீட்டு மனைகளின் விலைகள் குறைந்து வருகின்றன. ஆனால் இந்த விலைக் குறைப்பை சாதகமாக்கிக் கொண்டு வீடுகளையோ மனைகளையோ வாங்கிப் போடலாம் என முயல்பவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகின்றன வீட்டுக் கடன் வசதி நிதி நிறுவனங்களும் பல்வேறு வணிக வங்கிகளும்.

வெளிப் பார்வைக்கு வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டது போலத் தெரிந்தாலும், மாறும் வட்டி மற்றும் நிலையான வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்களுக்கு இதுவரை எந்த பலனும் இல்லை. பழைய கடன்தாரர்கள் அதே அதிகபட்ச வட்டியைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சரி... இப்போதுதான் வட்டி விகிதங்கள் குறைந்துள்ளனவே... கேட்டவுடன் புதுக் கடன் கிடைத்த விடுகிறதா?

'யார் சொன்னது... நான் கடன் கேட்டு விண்ணப்பித்து இரண்டு மாதங்களாகிவிட்டன. நாயா அலைறேன். கடன் கிடைக்கும் என்பதற்கான அறிகுறியே இல்லை. இந்தக் கடனை நம்பி நான் வீட்டு மனைக்குக் கட்டிய 1 லட்ச ரூபாய் அட்வான்ஸில் 50 சதவிகிதம் போனதுதான் மிச்சம். தயவு செய்து வங்கிகள், கடன்னு சொல்லி வயித்தெரிச்சலைக் கிளப்பாதீங்க...' என்கிறார் மனோஜ். இவர் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணிபுரிகிறார்.

இந்த பொருளாதார மந்த சூழலில், இவர் பெறுவது உண்மையிலேயே நல்ல சம்பளம்தான். வேறு கடன்கள் எதுவும் இவருக்கு இல்லை. எல்லா ஆவணங்களையும் கடந்த ஜனவரியிலேயே முறையாகச் சமர்ப்பித்து விட்டாராம். இதோ மூன்று மாதங்கள் ஆகப் போகின்றன. இதுவரை வங்கிக்கு 16 முறை சென்று வந்துள்ளாராம்.

"எனக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறதா என்று சற்று விசாரித்துப் பார்த்துவிட்டேன். இன்னும்கூட பலரை இப்படித்தான் அலைக்கழிக்கிறார்கள். பலர் வங்கிகளின் இந்த நிராகரிப்புகளை வெளியில் சொல்வதில்லை. அரசு அறிவிக்கும் இலவசங்களைப் பெறும்போது அதிகாரிகள் எப்படி மக்களை நடத்துகிறார்களோ... கிட்டத்தட்ட அதற்குச் சமமான ட்ரீட்மெண்ட்தான் கடன் கேட்டுப் போகும் வாடிக்கையாளர்களுக்கும் வங்கிகளில் கிடைக்கிறது.

இப்போது எனக்குத் தேவையான தொகையை மனைவியின் நகைகளை விற்றும், தெரிந்தவர்களிடன் கைமாத்து வாங்கியும் கட்டிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ரிசர்வ் வங்கி அறிவிப்பெல்லாம் சும்மா. நமக்கு எந்த வகையிலும் பிரயோஜனமில்லை", என்றார் மனோஜ் வெறுத்துப் போய்.

சென்னைப் புறநகர்களான பூந்தமல்லி, படப்பை பகுதிகளில் பல லே-அவுட்டுகளை அமைத்துள்ள ரியல் எஸ்டேட் அதிபர் ராமச்சந்திரன் இதுகுறித்துக் கூறுகையில், "நிறையப் பேரு இந்தப் புகாரை சொல்கிறார்கள். என்னிடம் ஒரு தொகையை அட்வான்ஸாகக் கொடுத்துவிட்டு, பின்னர் வங்கிகளிடம் கடன் வாங்கி மீதிப் பணத்தைக் கொடுப்பதாகச் சொல்லும் நிறைய வாடிக்கையாளர்கள், பின்னர் அந்த இடத்தை வாங்காமலேயே போயிருக்கிறார்கள்.

பாவம்... அவர்களுக்கு நம்மாலும் உதவ முடிவதில்லை. வங்கிகளின் ப்ராஸஸிங் காலம் மிகப் பெரிய கொடுமை சார். இதற்காகவே பணியமர்த்தப்பட்டுள்ள வங்கி ஊழியர்கள் அனாவசியமாக கால விரயம் செய்கிறார்கள். இதற்கென தனிக் கட்டணம் வேறு. அதுவும் திரும்பப் பெற முடியாத தண்டக் கட்டணம்.

ஆரம்பத்திலேயே ஒரு இடம் அல்லது வீட்டுக்கு கடன் தர முடியும் அல்லது முடியாது என சொல்லிவிட்டால், வாடிக்கையாளர்கள் வேறு நிதி ஆதாரங்களையாவது நாடுவார்கள். முதல்நிலை வணிக வங்கி எனச் சொல்லிக் கொள்ளும் ஒரு வங்கியும், தனியார் துறையில் நம்பர் ஒன் என்று அறிவித்துக் கொண்டுள்ள வங்கியும் அநியாயத்துக்கு இழுத்தடித்து, கடைசி நேரத்தில் கடன் இல்லை என்று சொன்னதாக பலர் என்னிடம் புலம்பிச் சென்றுள்ளனர் என்றார் ராமச்சந்திரன்.

குறிப்பிட்ட இந்த ஒரு ரியல் எஸ்டேட் அதிபரிடம் மட்டுமே 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கடன் மறுக்கப்பட்டு, அவதிக்குள்ளாகியுள்ளதாகத் தெரிய வந்தது.

இப்போதுதான் இந்த நிலையா...

"முன்பும் நிலைமை மோசம்தான். ஆனால் இப்போது படுமோசம். வங்கிகளில் லோன் போட்டு இடம், வீடு வாங்குவது குதிரைக் கொம்பு என்பதுதான் உண்மையான நிலை. நிதித்துறை இந்த விஷயத்தை சீரியஸாகக் கவனிக்க வேண்டும். வெறும் அறிவிப்புகளால் என்ன சார் பிரயோஜனம். காகிதத்தில் சொல்லிவிட்டால் போதுமா... நடைமுறைப்படுத்த வேண்டாமா... வராக் கடனைத்தான் இந்த வங்கிகள் பிரதானமாகப் பார்க்கின்றன. அதற்கு வட்டித் தொழிலே செய்யக் கூடாது. ரிஸ்க் எடுப்பதற்காகத்தானே வட்டி வாங்குகிறார்கள்? வராத கடனை வசூவிக்கத்தானே இத்தனை ஆள் பலம் அவர்களுக்கு தரப்பட்டுள்ளது. ஒரு கடன் தரும்போது 25 சதவிகிதம் வராக்கடன் ஆபத்தையும் மனதில் கொண்டே தர வேண்டும்" என்றார் ராமச்சந்திரன்.

பொருளாதார மந்தம் என்ற வார்த்தையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ள வங்கி அதிகாரிகள், எடுத்த எடுப்பிலேயே வாடிக்கையாளர்களின் கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கும் மனோபாவத்தில் அணுகுவதைப் பார்க்க முடிகிறது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு வீட்டுக் கடன் வழங்குவதில் 40 சதவிகிதத்துக்கும் மேல் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதே இதற்கு பெரும் சான்று.

ரூ.5 லட்சம் கடன் வாங்க, ஒரு இணை கடனாளர் (co borrower), சொத்துப் பிணையம், இரு ஜாமீன்தாரர்கள், சுத்தமான கடன் வரலாற்று ஆவணம் (clean track record)... இப்படி எல்லாம் கொடுத்தாலும், பணியாற்றும் நிறுவனம் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்கும் என்று கேட்டு வாடிக்கையாளரை அவமானப்படுத்துவது பல வங்கிகளிலும் நடக்கிறது. ஒரு சில வங்கிகள், கடன் கேட்பவர் பணியாற்றும் நிறுவனத்தின் முதலாளியின் சொத்துப் பத்திரம்... அதாவது அந்த நிறுவனம் அமைந்துள்ள கட்டடத்தின் உரிமைப் பத்திர நகலைக் கேட்கின்றன. அல்லது நிறுவனம் அந்தக் கட்டடத்தில் குத்தகைக்கு இருந்தால், அந்தப் பத்திரத்தின் நகல் கண்டிப்பாக வேண்டும் என்று பிடிவாதமாகக் கேட்கின்றனவாம்.

இதுகுறித்து சில வங்கிகளில் நாம் நேரடியாகவே விசாரித்தோம். அரசுத்துறை வங்கிகளில் முதல் நிலையில் உள்ள கனரா வங்கியின் வட்டார அலுவலகத்தில் தொடர்பு கொண்டோம். பெயர் குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட அந்த அதிகாரி இப்படிக் கூறுகிறார்:

"எல்லாவித செக்யூரிட்டியும் பக்காவாக இருந்தும் கூட பலருக்கு கடன் கொடுக்க முடியாத நிலையில்தான் நாங்கள் உள்ளோம். வெளியிலிருந்து குறை சொல்வது சுலபம். ரிசர்வ் வங்கி சொல்லிவிட்டதே என்பதற்காக வட்டியே இல்லாமல் கடன் தர முடியுமா... எங்களது ground realities ரிசர்வ் வங்கிக்கு எப்படித் தெரியும்! நிலைமையை அனுசரித்துதான் கடன் தரமுடியும். அரசு வங்கிகளாவது பரவாயில்லை. தாமதமாகக் கடன் கொடுக்கிறோம் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், வாடிக்கையாளர்களைத் துன்புறுத்துகிறோம் என்ற குற்றச்சாட்டுக்கு இடம் தருவதில்லை. ஆனால் பல தனியார் நிதி அமைப்புகள் அல்லது வங்கிகள் கடனைக் கொடுத்துவிட்டு, வசூலாகாவிட்டால் வாடிக்கையாளரை தெருவில் நிறுத்தி விடுவதைப் பார்த்திருப்பீர்கள்...", என்றார். அவர் வங்கியின் பெருமை அவருக்கு!!

ஆக, வீட்டுக் கடன் தொடர்பாக வரும் அறிவிப்புகளையெல்லாம் அப்படியே நம்பிக்கொண்டு விண்ணப்பத்தோடு வந்துவிடாதீர்கள் என்கின்றனவா வங்கிகள்...?

ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றாகவும், வங்கிகளின் நிலைப்பாடு அதற்கு நேரெதிராகவும் உள்ள நிலையில் மக்களி்ன் பாடுதான் படு திண்டாட்டமாகிப் போயுள்ளது. கல்விக் கடன் பெறுவதற்காக ஒரு மாணவன் என்னவெல்லாம் அவமானங்களைச் சந்திக்கிறானோ அதைவிட மூன்று மடங்கு அதிகமாக வீட்டுக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்கள் பெறுகிறார்கள் என்பதே உண்மை என்கிறார்கள் அனுபவப்பட்ட பலரும்.

எனவே இதுகுறித்த தெளிவான நிலைப்பாட்டை ரிசர்வ் வங்கியும் வணிக வங்கிகளும் ஒரு வெள்ளை அறிக்கையாகத் தந்துவிடலாமே. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு இந்தக் கடனைப் பெறத் தகுதியில்லை என்பது தெரிந்துவிட்டால், வங்கிகள் இருக்கும் திசைப் பக்கம் கூட தலைவைத்துக் கூட படுக்கமாட்டார்கள் அல்லவா!!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X