பாமகவின் தொடர் அமைதி - 23ம் தேதி முடிவு செய்யலாம்
சென்னை: மக்களவைத் தேர்தலில் எந்தக் கூட்டணி என்பதை பாமக இன்னும் முடிவு செய்யவில்லை. வருகிற 23ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாம். அப்போது இறுதி முடிவெடுக்கலாம் எனத் தெரிகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த பாமக இப்போது அங்கு இல்லை. சில மாதங்களுக்கு முன்பு திமுகவே, பாமகவை கூட்டணியை விட்டு விலக்கி விட்டது.
ஆனால் அதன் பின்னர் ஏகப்பட்ட சமரச முயற்சிகள் நடந்தன. இதனால் தேர்தலின்போது திமுகவுடன் பாமக சேர்ந்து கொள்ளும் என கருதப்பட்டது.
ஆனால் இதுவரை பாமக தரப்பிலிருந்து எந்த வார்த்தையும் இல்லை. அவர்கள் ஒரே நேரத்தில் திமுக மற்றும் அதிமுகவுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது.
சீட் ஒதுக்கீடு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பாமக கோரிக்கை வைத்து காத்திருக்கிறது. ஆனால் இரு கட்சிகளும், பாமக கோரிய சீட்களைத் தருவதில் தயக்கம் காட்டி வருகின்றன. இதனால் இழுபறி நிலை நீடிக்கிறது.
இந்த நிலையில் மக்களுடன்தான் கூட்டணி என விஜயகாந்த் இன்று அறிவித்து விட்டார். எனவே பாமக தனது முடிவை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வரும் 23ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் பாமகவின் பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.