For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வருண்தான் வேட்பாளர் - தேர்தல் ஆணையம் மீது பாஜக சரமாரி புகார்

By Sridhar L
Google Oneindia Tamil News

டெல்லி: பிலிபித் தொகுதியில் வருண் காந்திதான் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார். தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளது என்று பாஜக கூறியுள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பபீர் புஞ்ச் கூறுகையில், வருண் காந்தியை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. அவர்தான் பாஜக சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவுக்கும், சோனியா காந்திக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள்தான், வருண் காந்தி மீது தேர்தல் ஆணையம் பாரபட்சமாக முடிவெடுக்க காரணமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

வேட்பாளரை மாற்றுங்கள் என்று கூற தேர்தல் ஆணையத்திற்கு யார் அதிகாரம் தந்தது என்று தெரியவில்லை. தேர்தல் ஆணையத்தின் அறிவுரையை நாங்கள் நிராகரித்து விட்டோம்.

சஞ்சய் தத் போன்ற தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபர் தேர்தலில் போட்டியிடுவதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் தர வேண்டும்.

வருண் காந்திதான் எங்களது மதிப்புக்குரிய வேட்பாளர். இதுகுறித்து பாஜக தலைமை முறைப்படி அறிக்கை ஒன்றை வெளியிடும்.

இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து கோர்ட்டுக்குப் போகும் உத்தேசத்தில் வருண் காந்தி இல்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பாஜக தரப்பில் கூறுகையில் கோர்ட்டுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு சட்டப்பூர்வமானது இல்லை. அதை சட்டப்பூர்வமாகவும் அமல்படுத்த முடியாது.

வருண் காந்தி சுயேச்சையாகப் போட்டியிடக் கூடிய வாய்ப்புகள் இல்லை என்று கூற முடியாது என்றனர்.

இதற்கிடையே, பாஜகவுக்கு அறிவுரை மட்டுமே கூறும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. அதை அமல்படுத்த அது முடியாது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. மேலும், தேர்தல் ஆணையம் அதிகபட்சம் பாஜகவின் தேர்தல் சின்னத்தை பிலிபித் தொகுதியில் முடக்கி வைக்க முடியும். அது கூட கடைசிக் கட்ட முயற்சியாகவே இருக்கும் என்கிறார்கள். அப்படிச் செய்வதற்கு தேர்தல் ஆணையம் அவசரப்படாது என்றும் கூறப்படுகிறது.

காரணம் தேர்தல் ஆணையத்திற்கு குறுகிய அதிகாரங்களே உள்ளதால், அறிவுரையுடன் மட்டும் அது நிறுத்திக் கொள்ளும் என கருதப்படுகிறது.

துவேஷப் பேச்சு தொடர்பாக வருண் காந்தி மீது இரண்டு கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதைக் காரணம் காட்டியும், தேர்தல் ஆணையம் அவரை போட்டியிடுவதிலிருந்து தடை செய்ய முடியாது. காரணம், அவர் கோர்ட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட் மூலம் 2 ஆண்டுகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே தற்போதைய சட்டப்படி தேர்தலில் நிற்க தடை விதிக்க தேர்தல் ஆணையத்தால் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X