For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்கு வங்கிகளாக மாறும் மகளிர் சுய உதவிக் குழுக்கள்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாக்கு வங்கியாக மாறியுள்ளது. இதனால் எந்த அரசியல் கட்சிக்காவது மகளிர் சுய உதவிக் குழுக்கள் உதவுவதாக தெரிந்தால் அந்தக் குழுக்களுக்குத் தடை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் 35 லட்சம் குடும்பங்கள் உள்ளன. வறுமை ஒழிப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், பெண்களின் தற்சார்பு நிலை, அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தவும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன.

இக் குழுக்களை முதலில் தொடங்கியது யார் என்பதில் கட்சிகளிடையே சண்டை இருக்கிறது. காங்கிரஸ்தான் தொடங்கியது என அக்கட்சியும், திமுகதான் அதற்குக் காரணம் அந்தக் கட்சியும் கூறி வருகின்றன.

ஆனால் மகளிர் சுய உதவிக் குழுக்களை வாக்கு வங்கியாக மாற்றக் கூடிய சாத்தியம் இருப்பதை உணர்ந்து அதை பெரிய அளவில் வளர்த்து விட்டவர் ஜெயலலிதாதான் என்பதில் சந்தேகம் இல்லை. அவரது கடந்த ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தாராள உதவிகளும், ஊக்கங்களும் தரப்பட்டன.

விளைவு, சுயஉதவிக் குழுக்களின் செயல்பாட்டில் தமிழகம் முன்னணியில் உள்ளது. மேலும், இது ஜெயலலிதாவின் ஆதரவுக் குழுக்களாகவும் பார்கக்ப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள இக் குழுக்களின் எண்ணிக்கை 2.32 லட்சமாகும். சுமார் 35 லட்சம் பெண்கள் உறுப்பினர்களாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், நபார்டு வங்கி, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகள் மட்டுமன்றி, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலும் இக் குழுக்கள் இயங்கி வருகின்றன.

இக் குழுக்களின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகளின் பங்காக ஆண்டுதோறும் கோடிக் கணக்கான ரூபாய் சுழல்நிதியாக வழங்கப்படுகிறது.

இக் குழுக்களில் உள்ள உறுப்பினர்கள் ஆரம்பத்தில் அரசு விழாக்களுக்கு கூட்டம் சேர்க்கும் வகையில், வெறும் பார்வையாளர்களாக ஆளும் கட்சியின் சார்பில் அழைத்து வரப்பட்டனர். இதற்காக சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு சீருடைகள் மட்டுமன்றி பயணப்படிகளும் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் பெரும்பாலான மகளிர் குழுக்கள் முன்பு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டன. சமூக நலத்துறையின் கீழ், இந்த ஆணையம் இயங்கிவந்தது.

இப்போது ஊரக வளர்ச்சித் துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் மகளிர் மேம்பாட்டு ஆணையமும், மகளிர் சுயஉதவிக் குழுக்களும் கொண்டுவரப்பட்டன.

மகளிர் சுய உதவிக் குழுக்களை தற்போது வாக்கு வங்கியாக மாற்றி அரசியல் வாதிகள் விளையாடி வருகின்றனர். திருமங்கலம் தேர்தலில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பெருமளவில் பணம் உள்ளிட்டவை அள்ளித் தரப்பட்டதாக சர்ச்சை நிலவியது.

அதேபோல வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மகளிர் சுய உதவிக் குழுக்களை தங்களுக்குச் சாதகமாக வளைக்க அத்தனை கட்சிகளும் முயன்று வருகின்றன.

திமுகவின் பட்ஜெட் உரையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை குறி வைத்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. ஒரு லட்சம் புதிய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும். இதில் 50 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் 2009-10ம் ஆண்டிலும், மீதமுள்ள 50 ஆயிரம் குழுக்கள் 2010-11ம் ஆண்டிலும் தொடங்கப்படும் என திமுக அரசு கூறியுள்ளது.

இதன் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் அத்தனை பெண்களையும் சுய உதவிக்குழுக்கள் மூலம் இணைத்த மாநிலம் என்ற பெயரை தமிழகம் பெறும் என பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்படி மகளிர் சுய உதவிக் குழுக்களை இழுக்க திமுகவும், அதிமுகவும் முயன்றாலும் கூட முழுமையாக அவர்களின் ஆதரவை பெறுவது கடினம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

இதுகுறித்து வங்கியாளர் ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு மகளிர் சுய உதவிக் குழுவும் ஜனநாயக முறைப்படி இயங்குகின்றன. மகளிர் சுய உதவிக் குழுக்கள் இந்த அளவுக்கு பிரபலமாகியுள்ளதற்கு ஜெயலலிதாதான் முக்கிய காரணம். என்றாலும் கூட திமுகவும் தனது ஆட்சிக்காலத்தில் ஏராளமான சலுகைகளை அவர்களுக்கு வழங்கியுள்ளது. எனவே அவர்களுக்கு ஆதரவாகவும் பலர் இரு்பபார்கள் என்பதை மறந்து விடக் கூடாது என்றார்.

இவரது கருத்தைப் பிரதிபலிப்பது போல பல்லாவரத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழு தலைவி ஒருவர் கூறுகையில், நாங்கள் எங்களது கூட்டங்களில் அரசியல் பேசுவதில்லை. யாருக்கு ஓட்டுப் போடுவது என்பதையும் குழுவாக தீர்மானிப்பதில்லை. அவரவர் இஷ்டத்திற்கே ஓட்டுப் போடுவோம். எங்களுக்கு எங்கிருந்தும் நெருக்கடி வரவில்லை என்கிறார்.

தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஒரு மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் கூறுகையில், எங்களை நாடி அரசியல் கட்சியினர் வருகின்றனர். பணம் தருவதாக கூறுகின்றனர். இருப்பினும் அத்தனை பேரும் குறிப்பிட்ட கட்சிக்கே வாக்களிப்பார்கள் என கூற முடியாது. அவசியமும் இல்லை என்றார்.

மேலும், கடந்த திமுக மற்றும் அதிமுக ஆட்சிக்காலங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகளை இரு அரசுகளும் நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தியும் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடையே உள்ளது.

குறிப்பாக திமுக அரசு சுழல் நிதியை சுய உதவிக் குழுவினருக்கு முறைப்படி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. எனவே இது அதிமுகவுக்கு சாதகமாக அமையும் என்ற கருத்து நிலவுகிறது.

இருப்பினும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் எந்தக் கட்சிக்கும் மொத்தமாக வாக்களிக்கும் என்று கூறுவது இயலாது என்பதே இப்போதைய நிலையாக உள்ளது.

நரேஷ் குப்தா எச்சரிக்கை ..

இதற்கிடையே எந்த அரசியல் கட்சிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உதவக் கூடாது. அப்படி உதவுவதாக தெரிந்தால் அந்தக் குழுக்களுக்குத் தடை விதிக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் நரேஷ்குப்தா எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசியல் கட்சிகளுக்கு சில சுயஉதவிக்குழுக்கள் உதவி புரிவதாக பத்திரிகைகளில் தகவல் வெளிவந்துள்ளது.

சுயஉதவிக்குழுவினருக்கு சுழல் நிதி வழங்கப்படுவதால், அதற்காக தவறான நடவடிக்கை எதுவும் நடைபெற்று விடக்கூடாது. இது பற்றி விசாரிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற தகவல் கிடைத்தால், மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலர், சம்பந்தப்பட்ட குழுவின் இணைப்பு அங்கீகாரத்தை ரத்து செய்யவும், சுழல் நிதியை நிறுத்தி வைக்கவும் வேண்டும்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சுயஉதவிக் குழுக்களாக இருந்தால் கருப்புப் பட்டியலில் வைத்து, நிதி உதவியை நிறுத்த வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளுக்கும் இது பொருந்தும்.

இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் கல்யாண மண்டபங்களிலும், பெரிய அரங்குகளிலும் நிறைய பேருக்கு உணவும், அன்பளிப்புகளும் அளிக்கப்பட்டு வந்திருப்பது தெரியவந்தது. இதுவும் ஒருவித ஊழல் நடவடிக்கையே ஆகும்.

தேர்தலின்போது கல்யாண மண்டபங்களில் வேட்டி, சேலைகள் மற்றும் உணவு வினியோகம் நடைபெறாமல் இருப்பதை மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும். திருமண மண்டபத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன்கூட்டியே மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெறவேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X