For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸி-தமிழர் அமைதிப் பேரணி மீது சிங்களர்கள் தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைதிப் பேரணி நடத்திய தமிழர்கள் மீது சிங்கள காடையர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 5 பேர் படுகாயமடைந்தனர். 7 வாகனங்கள் சேதமடைந்தன.

மெல்போர்ன் நகரில் சனிக்கிழமை பிற்பகல் தமிழ் இளையோர் அமைப்பினால் ஊர்தி பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏற்கனவே காவல்துறையினரிடம் அனுமதி பெறப்பட்டதன் பேரில் தமிழ் மக்களின் ஊர்தி பேரணி திட்டமிடப்பட்ட வீதிகளின் வழியாக அமைதியாக சென்று கொண்டிருந்தது.

தமிழர்களைக் காப்பாற்றக் கோரும் வாசகங்கள் அடங்கிய பதாகைகள், பிரபாகரனின் படங்கள் அடங்கிய பதாகைகள் உள்ளிட்டவை அதில் கட்டப்பட்டிருந்தன.

அப்போது விக்டோரியா நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக சிங்களர்கள் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்து கொண்டவர்கள். திடீரென தமிழர்களைத் தாக்கத் தொடங்கினர்.

பேரணியில் சென்று கொண்டிருந்த தமிழர்களின் ஊர்திகளை இடைமறித்து நகரவிடாமல் நிறுத்திவிட்டு - அவற்றின் மீது கூட்டம் கூட்டமாக ஏறி இரும்புத் தடிகளால் அகோரமாகத் தாக்கத் தொடங்கினர்.

விடுதலைப் புலிகள் இயக்கக் கொடிகளை பறித்து காலில் போட்டு மிதித்தனர். பதாகைகளை பறித்து கிழித்து எறிந்தனர்.

ஊர்தியின் கதவுகளை திறந்து, உள்ளே இருந்தவர்களை தாக்கி அவர்கள் மீது காரி உமிழ்ந்தனர். தமிழீழத் தேசியக் கொடியை பறிக்கும்போது அதனை தரமறுத்த தமிழர்களை சிங்களவர்கள், கைகளை ஊர்தியின் ஜன்னலுடன் சேர்த்து வைத்து தாக்கினர்.

தமிழர்களின் ஒளிப்படக் கருவிகளும் பறித்து உடைக்கப்பட்டன. சுமார் 50-க்கும் அதிகமான தமிழீழத் தேசியக் கொடிகள், தாக்குதலை நடத்திய காடையர்களால் பறித்துச் செல்லப்பட்டன.

இந்த தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட பல தமிழர்கள் காயங்களுக்கு உள்ளாகினர்.

5 தமிழர்கள் கடும் ரத்தக்காயங்களுக்கு உள்ளாகியதுடன், அவர்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தமிழர்களின் சுமார் 7-க்கும் அதிகமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

சிங்களர்கள் முற்றுகையிட்டுத் தாக்கிய போதும் தமிழர்கள் எந்த வன்முறைகளிலும் ஈடுபடாது, பொறுமையாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தை திரித்து ஆஸ்திரேலிய மீடியாக்களில் தமிழர்கள், சிங்களர்களைத் தாக்கியது போல செய்திகளைக் கொடுத்துள்ளனர் சிங்களர்கள். இருப்பினும் தமிழ் இளையோர் அமைப்பு நடந்ததை விளக்கி ஆஸ்திரேலியா மீடியாக்களுக்கு செய்தி அனுப்பியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என போலீஸார் உறுதியளித்துள்ளனர்.

தமிழர்களை மீட்க முயற்சி-ராணுவம்:

இதற்கிடையே முல்லைத்தீவு மாவட்டத்தில் போர் நடந்து வரும் பகுதியில் சிக்கியுள்ள லட்சக்கணக்கான தமிழர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.

விடுதலைப் புலிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த புதுக்குடியிருப்பு நகரை பிடித்து விட்டதாகவும், 400க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளை கொன்று விட்டதாகவும் நேற்று ராணுவம் அறிவித்தது.

இந்த நிலையில் 17 சதுர கிலோமீட்டர் பரப்பளவே கொண்ட, பாதுகாப்பு வளையப் பகுதிகளில் சிக்கியுள்ள லட்சக்கணக்கான தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.

நவீன காலத்தில், மிகப் பெரிய அளவிலான மக்கள் மீட்பு நடவடிக்கையில், ராணுவம் ஈடுபடுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

மக்களை மீட்கப் போவதாக ராணுவம் கூறியுள்ள போதிலும், 2 லட்சம் அப்பாவித் தமிழர்களின் உயிர் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X