For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரஸ்மீட்டில் ப.சிதம்பரம் மீது ஷூ வீசிய நிருபர்!-அகாலிதளம் ரூ. 2 லட்சம் பரிசு

By Staff
Google Oneindia Tamil News

Shoe being thrown at P.Chidambaram; Jarnail singh (right)
டெல்லி:மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் ஷூவை வீசினார்.

1984ம் ஆண்டில் இந்திரா காந்தி கொலையானபோது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சமீபத்தில் டைட்லரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் ப.சிதம்பரம் . அப்போது பிரஸ்மீட்டில் பங்கேற்ற தைனிக் ஜார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர் ஜர்னைல் சிங் எழுந்து, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, டைட்லர் விடுவிப்பு குறித்து ஆவேசத்துடன் பேசினார்.

அவருக்கு பதிலளித்த சிதம்பரம், இது அரசியல் மேடையல்ல. இங்கே நாம் அரசியல் விவாதம் நடத்த முடியாது, கேள்வி மட்டும் கேளுங்கள் என்றார்.

ஆனாலும் டைட்லரை விடுவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆவேசமாக ஜர்னைல் சிங் பேசிக் கொண்டே போகவே, போதும்...போதும் நிறுத்துங்கள்.. விவாதம் செய்யாதீர்கள்.. விவாதம் செய்யாதீர்கள்.. இது குறித்து சிபிஐயை எதிர்த்து சட்டரீதியாக அணுகலாம். சிபிஐயின் அறிக்கையை நீதிமன்றம் ஏற்கலாம், ஏற்க மறுக்கலாம் அல்லது மேலும் விசாரிக்க உத்தரவிடலாம். அதுவரை பொறுமையாக இருப்போம் என்றார் சிதம்பரம்.

ஆனாலும் சிங் தொடந்து பேசவே, சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. அதை உள்துறையோ மத்திய அரசோ கட்டுப்படுத்தவில்லை என்றார் சிதம்பரம்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த நிருபர் தனது ஷூவை கழற்சி சிதம்பரம் மீது வீசினார். ஆனாலும் அந்த ஷூ சிதம்பரம் மீது படவில்லை.

இருப்பினும் நிதானமாக அமர்ந்திருந்த சிதம்பரம், யாரும் பதற்றப்பட வேண்டாம், பிரஸ்மீட்டை தொடர்வோம். ஒரு தனி நபரின் உணர்ச்சிவசப்பட்ட செயலால் பிரஸ்மீட் தடைபட வேண்டாம் என்றார் வழக்கமான தனது நிதானத்துடன்.

மேலும் ஜர்னைல் சிங் நமக்கெல்லாம் மிக நன்றாக தெரிந்த நிருபர் தான். அவரை நான் மன்னித்துவிட்டேன். இதை இத்தோடு விடலாம் என்றார்.

ஆனாலும் சிதம்பரத்தின் பாதுகாப்புப் படையினர் அந்த நிருபரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றி இழுத்துச் சென்றனர். அப்போது அவர்களிடம் ஜர்னைல் சிங்கை 'ஜென்டிலாக' நடத்துங்கள்... இப்படி இழுத்துச் செல்லாதீர்கள் என்ற சிதம்பரம்.. ஒரு தனி மனிதரால் இந்த பிரஸ் மீட் தடைபட வேண்டாம். நாம் நமது பிரஸ் மீட்டை தொடரலாம் என்றார்.

உடனடியாக விடுவிப்பு:

ஜர்னைல் சிங்கை சிதம்பரத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அருகே உள்ள காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டார். அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

பாக்தாதில் முன்னாள் அமெரிக்க அதிபர் மீது நிருபர் ஷூ வீசியது பரபரப்பானது. இப்போது அதே பாணியில் ப.சிதம்பரம் மீது ஷூ வீசப்பட்டுள்ளது.

ஜர்னைல் சிங் பல காலமாக டெல்லி காங்கிரஸ் அலுவலக செய்திகளை வழங்கி வருபவர் ஆவார். இவர் பஞ்சாபைச் சேர்ந்தவர் ஆவார்.

பிரஸ்மீட்டிலிருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்ட ஜர்னைல் சிங் கூறுகையில், நான் செய்தது தவறில்லை. எனது செயலுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். எனது அணுகுமுறை தவறாக ‌இருந்திருக்கலாம். இதை எந்தப் பத்திரிக்கையாளரும் செய்யக் கூடாது. ஆனால் நான் எனது சமூகத்தின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன். டைட்லரை விடுவித்தது சீக்கியர்களை மிகவும் புண்படுத்தியுள்ளது. இது ஒரு எரியும் பிரச்சனை. எங்கள் சமூகத்தினருக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றார்.

இவர் பாதுகாப்புத்துறை தொடர்பான செய்திகளை கவர் செய்யும் ரிப்போர்டராகவும் உள்ளார்.

அகாலிதளம் ரூ. 2 லட்சம் பரிசு:

ஷூ வீசிய நிருபருக்கு அகாலிதளம் கட்சியின் இளைஞரணி ரூ. 2 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த ஜர்னைல் சிங் கூறுகையில, நடந்த சம்பவத்துக்காக வருந்துகிறேன். ஆனால், சிபிஐ அறிக்கை குறித்து மத்திய அரசும் சிதம்பரமும் யோசித்துப் பார்க்க வேண்டும் என்றார்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக வேறு வழியில் போராடியிருக்கலாமே என்று நிருபர்கள் கேட்டதற்கு, எந்த வகையில் போராடச் சொல்கிறீர்கள். இந்தப் பிரச்சனையில் 25 வருடமாக இதே தானே நடந்து கொண்டிருக்கிறது என்றார்.

தொடர்பான செய்திகள் :

புஷ் மீது ஷூ வீச்சுபுஷ் மீது ஷூ வீச்சு

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X