For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகிரி உயிருக்கு ஆபத்து என்கிறார் கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அழகிரியை என்ன செய்வார்களோ ஏது செய்வார்களோ தெரியாது. அவர் எந்தத் தியாகத்துக்கும் தயாராக உள்ளார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மதுரையில் திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகக் கூறி அதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனி்ஸ்ட், பார்வர்டு பிளாக், பாமக, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், தேசிய லீக், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் முரசொலியில் கருணாநிதி எழுதியுள்ள கட்டுரை:

வீட்டோரத் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைப் பறவைகள் பதம் பார்த்து விடாமல் இருப்பதற்காக ஒரு கலயத்தில் கண்ணும் மூக்கும் எழுதி-அதை ஒரு கொம்பில் குத்தி - அந்தக் கொம்பை ஒரு பானையில் பொருத்தி, அதற்கு ஒரு கிழிந்த சட்டை போட்டு; அந்தப் 'பூச்சாண்டிப் பொம்மை'யை தோட்டத்து நடுவில் சிலர் நாட்டி வைப்பார்கள்.

அதாவது அதைப் பார்த்து பயந்து போய், பழங்களைக் கொத்த வரும் பறவைகள் அருகில் நெருங்காமல் அஞ்சி நடுங்கிப் பறந்து போய் விடும் என்பது அந்தச் சில பேரின் எண்ணம். ஆனால் அதற்கு மாறாகத் தோட்டத்துப் பக்கம் பறந்து வரும் சில பறவைகள் காவலுக்கு வைக்கப்பட்ட அந்தப் 'பூச்சாண்டிப் பொம்மை'யின் மீதே உட்கார்ந்து எச்சமிட்டுக் கொண்டிருக்கிற காட்சிகளையும் கண்டிருக்கிறோம்.

இந்த நிகழ்ச்சி பற்றி ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்; இப்போது தான் திக்கித் திணறி, தெண்டனிட்டு- "கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை'' என்று சவடா' அடிக்கும் சில வீராதி வீரர்கள்- துளியோண்டு தொகுதிகளைப் பெறுவதற்கு அம்மையாரிடம் அலையாய் அலைந்து, கூனிக் குறுகி, கும்பிட்டுத் தொழுது, பெற்று விட்டு பெருமூச்சு விடக் கூட நேரமில்லை!.

ஆசுவாசப்படுத்தி களைப்பு நீக்கிட அருகில் ஆள் கூட இல்லை. அதற்குள் தொகுதி தரும் தோட்டத்துப் பழங்களை, காய்கறிகளை எந்தப் பறவையாவது கொத்தி விடுமென்று "பூச்சாண்டி'' பொம்மை காட்டிக் கூத்தடிக்கிறார்கள்.

அய்யோ பாவம், முன்கூட்டியே முடிவை அறிந்து கொண்டு விட்டதால்; பழியை யார் மீது போடலாம் என்று ஆள் தேடுகிறார்கள். அவர்கள் யார் தெரிகிறதா?. ஆம்; ஆலவாயப்பனுக்கும், அன்னை மீனாட்சிக்கும் வைகைக் கரையோரம் அமைந்த தங்கக்கோபுரக் கலசம் போல் தகதகவெனப் பளபளக்கும் கோடிச் செல்வர் குமாரமங்கல மாளிகையில் மழலைகளாய்த் தவழ்ந்து, பாட்டனார்- தந்தையார்- மகனார் என்று வம்ச வழி வழித் தோன்றல்களாய் வாய்த்தவர்களுக்குத் தளகர்த்தராய் வாய்த்தவர்கள்.

பொன்மலை குவித்த பொதுவுடைமைவாதிகள், நம் தயவினால் புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியை பெற்றிருந்தபோது; அந்தப் புனிதர்கள், புத்தர்கள்; கணக்கின்றி வாரியிறைத்த கரன்சி காகிதங்களில் காந்தியடிகள் உருவம்; படமாகத் திகழ்ந்து சிரித்த காட்சி இன்னமும் பசுமையாகத் தெரிகிறது.

மதுரையில் சங்கரராக நின்று செளராட்டிரர்களின் வாக்குகளைப் பெற்றிட அள்ளிக் கொட்டிய வெள்ளிப்பணம் பற்றித் தெரியாதா யாருக்கும்?. அந்தத் தொகுதியில் மனம் கூசாமல் இஸ்லாமியர் வாக்குகளைப் பெற்றிட குல்லாய் அணிந்து சென்ற காட்சியை மதுரை மக்கள் தான் மறக்க முடியுமா?.

நமது அழகிரி அங்கே போட்டியிட விரும்பித் தலைமையிடம் விண்ணப்பித்திருக்கிறார் என்றதும்; ஏ யப்பா; என்ன குதி குதிக்கிறார்கள். அழகிரி; பாவம் அந்தப் பிள்ளையைக் கண்டு ஏன் இவ்வளவு அஞ்சுகிறார்கள்?.

அழகிரியைப் பற்றி எனக்கே அல்லவா அச்சமாக இருக்கிறது! போட்டிக்கு நாள் குறிப்பதற்கு முன்பே புஜங்களைத் தட்டிக் கொண்டல்லவா, பொய்ப் புகார்களை அடுக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள்; வங்கத்தில் துப்பாக்கியேந்தி வாக்கு சேகரிக்கும் தொண்டர்கள்!.

அழகிரியை என்ன செய்வார்களோ; ஏது செய்வார்களோ; அழகிரி எதற்கும்- எந்தத் தியாகத்துக்கும் தயார்-என் மகன்களில் ஒருவன்; மதுரையில் சிலரது கண்களை உறுத்துவதை இந்த மாநிலம் அறியும்.

"இருப்பது ஓர் உயிர்; அது போகப் போவதும் ஒரு முறை; அது ஒரு நல்ல காரியத்துக்காகப் போகட்டுமே'' என்று அறிஞர் அண்ணா சொன்ன வாசகம் நம் செவிகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X