For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போரில் சிக்கிய தமிழர்களை மீட்க வேண்டும்-ஐ.நா

By Staff
Google Oneindia Tamil News

UN logo
நியூயார்க்: போர் முனையில் சிக்கியுள்ள லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களை முதலில் மீட்க வேண்டும் என இலங்கை அரசை ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நியூயார்க்கில் ஐ.நா. மனித உரிமை விவகாரம் மற்றும் அவசரகால புனரமைப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளரான ஜான் ஹோம்ஸ் கூறுகையில், இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும், போர் முனையில் சிக்கியுள்ள லட்சக்கணக்கானோரை முதலில் பத்திரமான இடத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதை உடனடியாக செய்தாக வேண்டும். பின்னர் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கை அரசு செய்து தர வேண்டும்.

இந்தப் பணியில் தொண்டு நிறுவனத்தினரையும், தன்னார்வ தொண்டர்களையும் சுதந்திரமாக ஈடுபடுத்த இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் அனுமதிக்க வேண்டும்.

போர் முனையிலிருந்து வெளியேற விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

வன்னிப் பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்க அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். ரத்த ஆறு ஓடுவதை நிறுத்த வேண்டும்.

தப்பிச் செல்ல முயலும் தமிழர்களை விடுதலைப் புலிகள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி வருவதாக தெரிகிறது. இதனால் பெருமளவிலான அப்பாவிகள் உயிரிழக்க நேரிடும் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றார்.

மருத்துவமனை குண்டு வீசித் தகர்ப்பு..

இதற்கிடையே, புது மத்தளன் பகுதியில் இருந்த கடைசி மருத்துவமனையை இலங்கைப் படையினர் குண்டு வீசித் தகர்த்து விட்டனர். இதில் 20 அப்பாவிகள் பலியாகியுள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து உயிர் தப்பிய டாக்டர் தங்கமுத்து சத்தியமூர்த்தி கூறுகையில், புது மத்தளனில் உள்ள மருத்துவமனையை குறி வைத்து இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இதில் மருத்துவமனையின் இரு கட்டடங்கள் தகர்ந்து விட்டன. இந்தத் தாக்குதலுக்கு முழுக் காரணம் இலங்கை ராணுவம்தான் என்றார்.

இந்தத் தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளனர். 300 பேர் காயமடைந்திருப்பதாக கூற்படுகிறது.

இறந்தவர்களில் 18 மாதக் குழந்தையும், ஒரு மருத்துவப் பணியாளரும் அடங்குவர்.

நேற்று காலை முதல் இங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த இடம் முழுவதும் பிண மயமாகக் காணப்படுகிறது. காயமடைந்தவர்களும் ஆங்காங்கு ரத்தத்தில் விழுந்து கிடந்தனர்.

அமைதித் தீர்வு.. அமெரிக்கா வலியுறுத்தல்

இந்த நிலையில், இரு தரப்பும் போரைக் கைவிட்டு விட்டு அமைதியான அரசியல் தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

தெற்காசியாவுக்கான வெளியுறவு துணை அமைச்சர் ரிச்சர்ட் பெளச்சரை பல்வேறு தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சந்தித்து இலங்கை விவகாரம் குறித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக்கும் உடன் இருந்தார்.

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழர்களையும், உலகெங்கும் உள்ள தமிழர் பிரதிநிதிகளையும் அமைதித் தீர்வுக்கான முயற்சிகளில் இலங்கை அரசு ஈடுபடுத்த முன்வர வேண்டும்.

இனப் பிரச்சினைக்கு சுமூகமான அரசியல் தீர்வை காண இலங்கை அரசு முன்வர வேண்டும்.

1 லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ளனர். ஆனால் இவர்களின் உயிர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பது கவலை தருகிறது.

அங்கு சிக்கியுள்ள மக்கள் வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும். இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டும். தாக்குதலை நிறுத்த வேண்டும். இதன் மூலம் அப்பாவிகள் வெளியேற வழி பிறக்கும் என்றனர்.

செஞ்சிலுவைச் சங்க ஊழியர் பலி..:

இதற்கிடையே, வன்னிப் பகுதியில் நடந்த ராணுவத் தாக்குதலில் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த சின்னதுரை குகதாசன் என்ற பணியாளர் பலியானதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தண்ணீ பிடிக்கச் சென்றபோது இலங்கை ராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் சிக்கி அவர் உயிரிழந்தார்.

பாதுகாப்பு வளையத்தில் தாக்குதல்-இலங்கை மறுப்பு:

இந்தச் சூழ்நிலையில், நேற்று பாதுகாப்பு வளையப் பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டதற்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று இலங்கை ராணுவம் கூறியுள்ளது.

இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ள ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், பாதுகாப்பு வளையப் பகுதியில் நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X