ஐயுஎம்எல்-காதர் விலகல்-ரஹ்மான் புது வேட்பாளர்
சென்னை: வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளராக அறிவிக்ப்பட்ட காதர் மொய்தீன் விலகி விட்டதால் அவருக்குப் பதில் அப்துல் ரஹ்மான் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முஸ்லீம் லீக் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறது. அத்தொகுதியின் தற்போதைய எம்.பியான காதர் மொய்தீனே மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் கடந்த முறையைப் போல இம்முறை உதயசூரியன் சின்னத்தில் நிற்காமல், முஸ்லீம் லீக்கின் ஏணி சின்னத்தில் போட்டியிடப் போவதாக மொய்தீன் அறிவித்தார்.
ஆனால் இதை திமுக ஏற்கவில்லை என்று தெரிகிறது. உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என காதர் மொய்தீனை திமுக தலைவர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் இதை ஏற்காத காதர் மொய்தீன் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்தார். இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் பொதுக்குழு கூட்டப்பட்டது.
இக்கூட்டத்தில் காதர் மொய்தீனுக்குப் பதில் அப்துல் ரஹ்மானை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது அப்துல் ரஹ்மான் வேலூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்துல் ரஹ்மான் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார் எனத் தெரிகிறது.