For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கைதாகிறார் வைகோ-அஞ்சவில்லை என்கிறார்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பிரபாகரனுக்கு ஏதாவது ஏற்பட்டால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும். இந்தியா ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்று பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது போலீஸார் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கைது செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது.

இலங்கை தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசை வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பழ.நெடுமாறன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் பேசினர்.

இதில் வைகோதான் கடுமையாக பேசினார். அவர் பேசுகையில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மீது துரும்பு விழுந்தாலும் தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும். பிரபாகரனை அழிக்க முடியாது. புலிகளை வெல்ல முடியாது. இந்திய அரசு, ராஜபக்சேவை போரை நிறுத்தச்சொல்ல வேண்டும் இல்லையேல் விபரீத விளைவுகள் இருக்கும். இந்தியா என்ற ஒரு தேசம் இருக்க போவதில்லை என்று கூறினார்.

இந் நிலையில் வைகோ மீது சென்னை வடக்கு கடற்கரை போலீஸார், இந்திய தண்டனை சட்டம் 505 (1) (பி) மற்றும் 2004 சட்டவிரோத செயல்கள் தடுப்பு திருத்த சட்டம் 13 (1) (பி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதனால் வைகோ கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்படி எதுவும் நடக்கவில்லை.

நடவடிக்கை இல்லை-தேர்தல் ஆணையம்:

முன்னதாக வைகோவின் இந்தப் பேச்சு சட்டம் ஒழுங்கு தொடர்பானது என்று கூறிய மத்திய துணைத் தேர்தல் ஆணையர் பிரகாஷ், அதே நேரத்தில் வைகோ மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காது என்றார்.

நல்லெண்ணத்தில் எச்சரித்தேன்.. வைகோ:

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய வைகோ, இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ், துணை போன திமுகவுக்கு தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள். 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

இப்போது மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் பிரசாரத்தில் இறங்கி விட்டார்கள். ஆகவே ஈழ த்தமிழர்களுக்கு செய்த துரோகம் இந்த தேர்தல் களத்தில் முக்கிய பிரச்சினையாக எடுத்து வைக்கப்படும் என்றார்.

தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்று நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசியிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு,

சோனியா காந்தியின் தலைமையில் செயல்படும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கையில் நம்முடைய சகோதர, சகோதரிகளை கொல்வதற்கு ஆயுதங்களை இலங்கை அரசுக்கு கொடுத்துள்ளனர். அந்த ஆயுதங்களை பயன்படுத்தி நம்முடைய தமிழ் மக்களை, விடுதலைப் புலிகளை கொல்கிறார்கள். இதனால் மீண்டும் சொல்கிறேன் சோனியா காந்தியின் செயல் கொலைகாரச் செய்ல்.

நம்முடைய குழந்தைகளையும், சிறுவர்களையும் கொல்வதற்கு ஆயுதங்களை கொடுப்பதற்கு அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது.

1960ம் ஆண்டுகளில் முதல்வர் கருணாநிதி எத்தனையோ முறை, ரத்த ஆறு ஓடும் என்று கூறியிருக்கிறார். அது ஒரு பேச்சுதான். எதுவும் நடக்கவில்லை. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. லாலு பிரசாத் யாதவ், புல்டோசரை ஏற்றி வருண் காந்தியை நசுக்கியிருப்பேன் என்று கொலை மிரட்டல் விடுக்கிறார். அவருக்கு காங்கிரசார் புகழ் மாலை சூட்டுகிறார்கள்.

3 லட்சம் தமிழ் மக்கள் இலங்கையில் பேரழிவில் சிக்கியிருக்கிறார்கள். எனவே தமிழகம் கொந்தளிக்கும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை நல்ல எண்ணத்தோடு எச்சரித்தேன். தமிழர்கள் கொலை செய்யப்படுவது தொடர்ந்தால் அதன் பின்விளைவு மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்றும் இதனால் போரை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்று எச்சரிக்கை செய்தேன்.

இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறுவிளைவிக்கும் என்று நல்லெண்ணத்தோடு இதை கூறினேன். மதிமுக வன்முறை மீது நம்பிக்கை கொண்ட கட்சியல்ல.

ஒரே நாடாக இருந்த ரஷ்யா 15 நாடுகளாக சிதறி போனது. அதை போலவே இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைக்கு இந்திய அரசு உதவி செய்யுமானால், வருங்கால இளைஞர்கள் எங்களை போல இருக்க மாட்டார்கள். இந்தியாவின் ஒற்றுமை, அமைப்பு ஆகியவற்றின் மீது எதிர்கால சந்ததியினருக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என்பதை அரசுக்கு மீண்டும் எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன்.

இப்படி செய்வதன் மூலம் இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைத்து விடாதீர்கள் என்றார்.

உங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க போவதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, அதைப்பற்றி நான் கவலையே படவில்லை என்றார்.

கைதுக்கு அஞ்சவில்லை:

இந் நிலையில் வைகோ கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி அவரது வீட்டின் முன் இன்று ஏராளமான தொண்டர்களும் நிருபர்களும் குவிந்தனர்.

அப்போது நிருபர்களிடம் பேசிய வைகோ, நான் கைது செய்யப் படுவது குறித்து தான் அஞ்சவில்லை. இலங்கை பிரச்சனை குறித்து சில அரசியல் தலைவர்கள் பேசும்போது, எரிமலை வெடிக்கும் பல்லாயிரம் உயிர்கள் போகும் என்றெல்லாம் கூறினர்.

இந்த வார்த்தைகள் தேசிய பாதுகாப்பிற்கு உகந்தது என்றால், நான் பேசியது மட்டும் எப்படி தவறாகும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X