For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் அன்புச் சகோதரி 'அலை'-ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: நான் 30 ஆண்டுகளாக மருத்துவராக இருந்து மக்களின் நாடி பிடித்து மருத்துவம் பார்த்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன் இப்போது தமிழகத்தில் அன்பு சகோதரியி ஜெயலலிதா அலை வீசுகிறது. ஆகவே நடைபெறவுள்ள தேர்தலில் 40க்கு 40 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே. மூர்த்தியை அறிமுகப்படுத்தி அதிமுக, பாமக தொண்டர்களிடையே ராமதாஸ் பேசுகையில்,

பாமக எந்த அணியில் உள்ளதோ அந்த அணிதான் வெற்றி கூட்டணி. நான் 30 ஆண்டுகளாக மருத்துவத் துறையில் மக்களின் நாடி பிடித்து மருத்துவம் செய்தேன் அந்த அடிப்படையில் சொல்கிறேன்; இப்போது அன்பு சகோதரியின் அலை வீசுகிறது. ஆகவே நடைபெறவுள்ள தேர்தலில் 40க்கு 40 தொகுதியில் வெற்றி பெறுவோம்.

பாமகவுடன் அதிமுக ஏற்படுத்திய கூட்டணி இயற்கை கூட்டணி. நான் பொதுகுழுவை கூட்டி கருத்து கேட்டு அதன்படி கூட்டணி அமைத்துள்ளேன். கூட்டணி கட்சி வேட்பாளருக்கு பாமக தொண்டர்கள் கடுமையாக உழைத்து வெற்றியை உருவாக்கி தர வேண்டும் என்று கட்டளை இட்டுள்ளேன்.

இங்கு போட்டியிடும் ஏ.கே. மூர்த்தி மக்கள் தொண்டர் என்று பெயர் எடுத்தவர். ரயில்வே துறையில் மந்திரியாக இருந்து சிறந்த முறையில் பணியாற்றியவர் என்றார்.

கருணாநிதியின் வெற்று கோஷம்..

இதற்கிடையே ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தட்டிக் கேட்பாரின்றி, தடுத்து நிறுத்துவாரின்றி சிங்கள இனவெறி அரசு தனது போர்ப்படை வலுவைக் கொண்டும், தனது நட்பு நாடுகளின் துணை கொண்டும் நடத்துகின்ற தமிழின அழிப்புப் போரை, தமிழக அரசும் அதன் முதல்வரும், தங்களது வலுவைக் கொண்டு தடுத்து நிறுத்தாவிட்டால், மிகப்பெரிய அவலத்தையும், பேரழிவையும் ஈழத்தில் தமிழினம் சந்திக்கும் என்ற ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த ஆபத்தை தடுத்து நிறுத்த வேண்டும்; இதற்கு தயக்கம் காட்டி வரும் இந்தியப் பேரரசை தட்டிக் கேட்டு அதனை செயல்பட வைக்க வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் கோரிக்கை.

இந்தக் கோரிக்கையை முன் வைத்தால், இலங்கைப் பிரச்சினைக்காக, ஏன் ஆட்சியைத் துறக்கக் கூடாது என்று யாரோ சில பேர் கேட்பதாக முதல்வர் குற்றம் சாற்றியிருக்கிறார்.

''அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் தமிழினத்தைக் காப்பாற்ற முடியாவிட்டால், இந்த ஆட்சி எதற்கு''? என்று முன்பு கேட்டவரே இவர் தான்.

இப்போது, யாரோ சில பேர் கேட்பதாகக் குற்றம் சாற்றி ஈழத் தமிழர் பிரச்சினையை திசை திருப்ப முயற்சித்திருக்கிறார்.

''ஆட்சியைத் துறந்து, தமிழகத்தில் நேரடியாக மத்திய அரசு ஆளுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்குமானால், இங்கே சில பேர் பேசுகின்ற பேச்சுக்கு எத்தனை ஆண்டு காலம் சிறைத் தண்டனை கிடைத்திருக்கும் தெரியுமா? இவர்களை எல்லாம் காப்பாற்றுவதற்காகத்தான் ஆட்சியைத் துறக்கவில்லை'' என்றெல்லாம் முதல்வர் கூறியிருக்கிறார்.

வெளியில் இப்படி பேசினாலும் இவரது ஆட்சியில் கைது நடவடிக்கைகளும், பழிவாங்கும் செயல்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. உயர்நீதிமன்ற வளாகத்தில் யாரோ சில பேர் உருவப் பொம்மைகளை எரித்திருக்கிறார்கள். இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆனால், இந்த சம்பவத்திற்கு தொடர்பே இல்லாத பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.பாலு மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். அவர் மீதான நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்.

தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என இதுவரையில் மத்தியில் அமைந்த எல்லாக் கூட்டணி ஆட்சியிலும் திமுக இடம் பெற்று வந்திருக்கிறது.
இது ஒரு சாதனை என திமுக தேர்தல் அறிக்கையிலும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மத்தியில், மாறி மாறி அமைந்து வந்திருக்கும் ஆட்சிகளில் இடம் பெற்றிருந்த காலக் கட்டங்களில், தமிழகத்திலும் திமுக ஆட்சி. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இலங்கைத் தமிழர் சிக்கலைத் தீர்க்க திமுக என்ன செய்தது?

தமிழினத்தின் வாழ்வுக்காக, சுயமரியாதைக்காக, இனமானத்திற்காக, ஓர் ஆட்சியை கேடயமாக ஏன் முன்நிறுத்தக் கூடாது? இதுவும் உலகத் தமிழர்களின் உள்ளத்து உணர்வு; ஏக்கம்.

''உங்களைப் போலவே, நாங்களும் அடிமை. ஓர் அடிமை இன்னொரு அடிமைக்கு என்ன உதவ முடியும் என்று ஈழத் தந்தை செல்வாவிடம், 35 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார், சொன்னதை நினைவுப்படுத்துவதும், இன்றைக்கும் அடிமையாகத்தான் இருக்கிறோம்'' என்றும் கருணாநிதி சொல்லியிருப்பதும் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.

இத்தனை ஆண்டுகளும் அடிமை; இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததற்குப் பிறகும் நாங்கள் அடிமை என்று சொல்வது உண்மையானால், இத்தனை ஆண்டு காலமும் திமுக எழுப்பி வந்த வெற்றி முழக்கங்கள் வெற்றுக் கோஷங்களா?. பேசிய வீர வசனங்களெல்லாம் போலியானவையா?. சாதித்தோம் என பட்டியலிடுபவை எல்லாம் பொய்யா?. இவையெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காகச் சொல்லப்பட்டவைதானா?.

இவற்றுக்கெல்லாம் ஒரே பதில் ''இல்லை'' என்றால், இப்போது மட்டும் ஈழத்தில் நடக்கும் போரை தடுத்து நிறுத்துங்கள் என்று சொல்லி அதனை சாதிக்க மட்டும் ஏன் அச்சம்?. மக்கள் கேட்க மாட்டார்களா?.

''ஈழத்தில் நடக்கும் போரின் முடிவில், பிரபாகரனின் படைக்கு அழிவு ஏற்பட்டாலும், பிரபாகரன் தோல்வியுற்றாலும், அன்று போரில் தோற்ற மன்னன் புருசோத்தமனை மன்னனாகவே நடத்திய அலெக்சாண்டரின் பெருந்தன்மை இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இருக்க வேண்டும்'' என்ற முதல்வரின் உபதேசம் உலக அரங்கில் தமிழர்களை எல்லாம் தலைகுனிய வைத்துவிட்டது.

''எங்கள் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் தாயே'' என்று சோனியாகாந்தியைப் பார்த்துக் கேட்டுக் கொள்வதாக பேசியிருக்கும் முதல்வர், அதற்கான விசை' அவரிடமே இருக்கிறது என்பதை மறந்துவிட்டிருக்கிறார்.

போரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தால் தான் தமிழகத்தில் காங்கிரசு கட்சியுடன் தேர்தல் உறவு வைத்துக் கொள்வோம் என்றும் அதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், காங்கிரசுடனான தேர்தல் உறவை தூக்கி எறிந்துவிடுவோம் என்றும் சொல்வதை விடுத்து ஏன் கெஞ்ச வேண்டும்?.

காங்கிரசை செயல்பட வைக்க வேண்டிய விசை உங்களிடம் தான் இருக்கிறது. அதை ஏன் பயன்படுத்தக் கூடாது? இந்த கேள்விகளெல்லாம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இனி எழுவதை தடுத்திட முடியாது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X