For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொகுதி சீரமைப்பினால் வைகோவுக்கு சிக்கல்!

By Staff
Google Oneindia Tamil News

Vaiko
-கார்த்திக்

விருதுநகர்: வைகோ இரண்டு முறை வெற்றி பெற்ற சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், கோவில்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றிருந்தன.

இதில் இராஜபாளையம், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளில் கணிசமான அளவிற்கு வைகோ சார்ந்த நாயக்கர் சமுதாயத்தினரின் ஓட்டுகளும், ஸ்ரீருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் கணிசமான அளவிற்கு நாடார் சமுதாய ஓட்டுக்களும் உள்ளன.

தொகுதி மறு சீரமைப்பின்படி சிவகாசி நாடாளுமன்றத் தொகுதி விருதுநகர் தொகுதியாக உருமாறிவிட்டது. புதிய விருதுநகர் தொகுதியில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், சிவகாசி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், அருப்புக்கோட்டை தொகுதிகளில் முக்குலத்தோர் சமுதாய வாக்குகளே பெரும்பான்மையாக உள்ளன.

மேலும் நாயக்கர் சமுதாய வாக்கு வங்கி அதிகமுள்ள சட்டமன்ற தொகுதிகள் வேறு நாடாளுமன்றத் தொகுதியுடன் சேர்க்கப்பட்டுவிட்டன.

இதனால் வைகோ இந்த முறை கடுமையான போராட்டத்தை சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், வைகோ எம்பியாக இருந்தபோது தொகுதிக்கு செய்த நன்மைகளும், ஈழப் பிரச்சனையில் அவரது நிலையும், நேர்மையான அரசியல்வாதி என்ற பெயரும் அவருக்கு பக்கபலமாக உள்ளது.

நான் அனைவருக்கும் பொதுவானவன்-வைகோ

இந் நிலையில் வைகோ நேற்று தனது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் தந்தை வையாபுரியின் உருவப் படத்தை வணங்கிவிட்டு, தாயார் மாரியம்மாளின் காலி்ல் விழுந்து ஆசி பெற்றுவிட்டு பிரசாரத்தைத் துவக்கினார்.

வழியெங்கும் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆரத்தி எடுக்க திருவேங்கடத்தை அடுத்துள்ள சிவலிங்காபுரம் கிராமத்தில் தனது முதல் பிரச்சாரத்தை துவக்கினார்.

அங்கு அவர் பேசுகையில், சிவலிங்காபுரம் மக்கள் தேர்தல் விழிப்புணர்வு கொண்டவர்கள். அதனால்தான் இங்கிருந்து பிரசாரத்தை தொடங்குகிறேன்.

என்னை தேர்ந்தெடுத்தால் இலங்கை தமிழர் படுகொலையை தடுத்து, இலங்கை பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர நாடாளுமன்றத்தில் ஓங்கிக் குரல் கொடுப்பேன். இதற்காகவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக என்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். நான் கைது செய்யப்படலாம். என்னை கைது செய்தால் மக்கள் எனக்காக ஓட்டுக் கேட்க வேண்டும்.

இலங்கை தமிழருக்காக என் மீது தொடங்கப்பட்ட வழக்கு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், வைகோ ஆரம்பத்தில் இருந்தே ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்து வருகிறார். இப்போது அவர் பேசியதில் தவறில்லை என்று எனக்காக குரல் கொடுத்துள்ளார். இதுதான் நட்பு, தோழமை.

திருமங்கலம் இடைத்தேர்தலின் போது அதிமுக, தொண்டர்கள் மீது தாக்குதல் நடந்தபோது, முதல் ஆளாக களத்தில் நின்றேன். திமுக, காங்கிரஸ் கட்சிகள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்திய அரசியலை தீர்மானிப்பவர் ஜெயலலிதா..

அதிமுக, கூட்டணி, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்திய அரசியலை தீர்மானிக்கக் கூடியவராக ஜெயலலிதா திகழ்வார்.

இலங்கையில் போர் நிறுத்தம் குறித்து சிதம்பரம் பேசி வருவதெல்லாம் காரைக்குடியில் ஓட்டு வாங்குவதற்குத் தான். ஒரு பக்கம் ஓட்டிற்கு 1,000, 2,000 ரூபாய் தரப் போவதாக சொல்கின்றனர். மறுபுறம் ஈழத்தில் பிணம் விழுந்து கொண்டிருக்கிறது.

நீங்கள் மனிதாபிமானத்திற்கு ஓட்டு போடுவீர்கள். பணத்திற்கு ஓட்டுப்போட மாட்டீர்கள் என நம்புகிறேன். இலங்கைத் தமிழர்களுக்காக லோக்சபாவில் குரல் கொடுக்க என்னை தேர்ந்தெடுங்கள்.

நான் அனைவருக்கும் பொதுவானவன். மின்னணு இயந்திரத்தில் ஓட்டு எண்ணிக்கை, ஓட்டுச்சாவடி வாரியாக கணக்கிட முடிவதால் தங்களுக்கு ஓட்டுப் போடாதவர்களை ஆளுங்கட்சியினர் மிரட்ட வாய்ப்புள்ளது. எனவே அனைத்து பகுதியையும் கலந்து எண்ணுவதற்கு தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X