For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஸ்ரேல் ஆயுத பேரத்தில் ரூ.600 கோடி ஊழல்-காரத்

By Staff
Google Oneindia Tamil News

Israel Military
சென்னை: இஸ்ரேலிடம் இந்தியா ரூ. 10,000 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கியதில் ரூ. 600 கோடி லஞ்சம் கைமாறியுள்ளது. இந்த மாபெரும் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.

சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை நடந்த அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர்,

மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆயுத பேர ஊழல் தான் செய்தது. இதனால் இந்த அரசை தூக்கி எறிய வேண்டும். அதற்கு தமிழக மக்கள் உதவ வேண்டும்.

3வது அணி மாயை' என்று காங்கிரஸ், பாஜக கட்சிகள் விமர்சிக்கின்றன. ஆனால், எங்களைக் கண்டு பயப்படுவது ஏன்?. மாநில கட்சிகள் நாட்டை ஆள முடியாது. தேசிய கண்ணோட்டம் கிடையாது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறுகிறார். 12 மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்திவிட்டு, இப்போது அந்தக் கட்சிகளையே விமர்சிக்கிறார்.

ஒவ்வொரு மாநில கட்சியாக காங்கிரசை கை கழுவிவிட்டன. சோனியா காந்திக்கு அனுமானாக இருப்பேன் என்று சொன்ன லாலு பிரசாத் யாதவே போய்விட்டார்.

போபரஸ் பீரங்கி ஊழலில் தரப்பட்டது ரூ. 66 கோடி தான். ஆனால், இப்போது இந்த அரசு இஸ்ரேலுடன் செய்துள்ள ரூ.10,000 கோடி ஆயுத ஒப்பந்ததில் ரூ. 600 கோடி லஞ்சம் கைமாறியுள்ளது.

தேர்தல் தேதியை அறிவிக்க 2 நாட்களே இருந்த நிலையில் இஸ்ரேல் ஆயுத நிறுவத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதில் ரூ. 600 கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலுக்கு காங்கிரஸ் பொறுப்பு. ரூ.1 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு திமுக தான் பொறுப்பு.

லஞ்சம் கொடுத்து ஆர்டப் பெறுவதில் பேர் பெற்ற அந்த இஸ்ரேலிய நிறுவனத்திடம் ஆயுதம் வாங்காதீர்கள் என்று மத்திய அரசிடம் கெஞ்சினோம். அவர்கள் கேட்கவில்லை.

இவை குறித்து விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம்.

நம் வெளியுறவு கொள்கையே தடம்புரண்டு விட்டது. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எடுத்த முயற்சியில், செலவிட்ட நேரத்தில் 10ல் ஒரு பங்கை செலவிட்டிருந்தால் கூட இலங்கை தமிழர் பிரச்சனையைத் தீர்த்திருக்கலாம். அந்த அப்பாவி மக்களை காப்பாற்றியிருக்கலாம். ஆனால், அதை மத்திய அரசு செய்யவில்லை.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் பண பலம் ஒன்றைத்தான் நம்பியுள்ளன. இதை மக்கள் சக்தியை கொண்டு நாங்கள் முறியடிப்போம்.

தமிழகத்தின் வெற்றிதான் டெல்லியில் ஒரு மாற்று அரசை, மதசார்பற்ற அரசை உருவாக்கும் என்றார்.

எங்களோடு இருந்தவர் ஜெயலலிதா-பரதன்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் பேசுகையில்,

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தவறான பொருளாதார கொள்கையை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தியபோது, அதற்கு தமிழகத்தில் இருந்து ஆதரவு தந்த ஒரே தலைவர் ஜெயலலிதா அணு ஆயுத ஒப்பந்தத்தை எதிர்த்து நாங்கள் போராடியபோது எங்களுடன் இணைந்து பேராடினார்.

இலங்கை பிரச்சனையில் காங்கிரஸ் அமைதியாக இருக்கிறது. அந்த கூட்டணியில் உள்ள திமுகவும் அமைதி காக்கிறது. ஆனால், ஜெயலலிதா உண்ணாவிரத போராட்டம் நடத்தி, இலங்கை பிரச்சனையை உலகின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

தமிழகத்திலும் மத்தியிலும் ஆளும் அரசுகள் அகற்றப்பட வேண்டும் என்றார்.

உஷார்.. உஷார்...வரதராஜன்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் பேசுகையில்,

தமிழக மக்கள் கடுமையான மின்சார வெட்டினால் பாதிக்கப்பட்டார்கள். தொழில்கள் முடங்கின. விவசாயம் சீரழிந்தது. சமூக வாழ்வு நாசமானது. அதைத் தொடர்ந்து, உலக பொருளாதார தாக்கத்தினால் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஏற்றுமதி பொருட்கள் எல்லாம் தேங்கிக் கிடக்கின்றன. பல லட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். விலைவாசி உயர்ந்தது உயர்ந்ததுதான். குறையவேயில்லை.

தற்போது தமிழக தேர்தல் களத்தில் அராஜகம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக மக்களை எச்சரிக்கிறோம். உஷார். உஷார்.

40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்த அக்கிரமத்திற்கும் அநியாயத்திற்கும் முடிவு கட்டுவோம் என்றார்.

தமிழ்நாட்டுக்குள் ஒரு தனி நாடா?-தா.பா:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில்,

தமிழ்நாட்டுக்குள் ஒரு தனி நாடா (மதுரை).. இந்த சோழ மன்னனுக்கு (முதல்வர் கருணாநிதி) ஒரு வாரிசா.. (அழகிரி).. அராஜகமே அரசியலா?. இந்த அராஜகத்தை அழி்த்து ஒழிக்கும் தேர்தலாக இது அமைய வேண்டும். மக்கள் அதை நிச்சயம் செய்வார்கள்.

நாளைய இந்தியாவின் தலைமையை தீர்மானிக்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமையும். நாம் அமைத்திருக்கின்ற இந்த அணி தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே வழிகாட்டுகின்ற முதல் பிரகடன கூட்டமாக இந்த கூட்டம் அமைந்துள்ளது. இந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் கற்பிக்க வேண்டிய பாடத்தை கற்பிப்பார்கள்.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க முடியாதவர்களை இந்த தேர்தலில் தூக்கி எறிய வேண்டும். இந்த முடிவோடுதான் இப்போது நாம் இந்த தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறோம்.

மேடைதோறும் முதல்வர் கருணாநிதி ஒரு ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி வழங்குகிறோம் என்று பேசி வருகிறார். இதுதான் எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் கொடுக்கக்கூடிய அரிசி நியாய விலைக் கடைகளுக்குப் போவதற்குப் பதிலாக லாரிகளில் ஏற்றி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது.
தமிழகத்தில் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும். இலங்கை தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்றார்.

கச்சத் தீவை மீட்க வேண்டும்-ராஜா:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா பேசுகையில்,

கட்சத் தீவை இலங்கையிடம் தாரை வார்த்தார்கள். அது நம் நாட்டின் பாதுகாப்புக்கு பெரிய அளவில் அவசியமில்லாத பகுதி என்று சொல்லி இந்தியா காந்தி அதை இலங்கையிடம் தந்தார். ஆனால், ஆண்டாண்டு காலமாக அங்கே மீன் பிடித்த தமிழர்களை இலங்கை சுட்டுக் கொன்றது. அதை மத்திய அரசு தடுக்கவில்லை.

கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கச்சத்தீவு உடன்பாடுகளை எல்லாம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X