For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக தலைமையிலானது இயற்கையாக அமைந்த கூட்டணி: திருமா.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவைப் போல செயற்கையான கூட்டணி அல்ல திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி. இது இயற்கை கூட்டணி, கருணாநிதி இயற்கைத் தலைவர். ஜெயலலிதா கூட்டணிக் கட்சித் தலைவர்களை மதிக்கத் தெரியாதவர் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது ..

கலைஞர் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஒரு இயற்கைக் கூட்டணி ஆகும். சமூகத்தில் போலி மருத்துவர்கள் உண்டு. போலி சாமியார்களும் உண்டு. அதேபோல சில போலி தலைவர்கள் உண்டு.

சாதி, மத உணர்வால் சிலர் தலைவர்களாக வரலாம். ஆனால், முதல்வர் கருணாநிதி அப்படி அல்ல. அவர் இயற்கை தலைவர். சுயம்பாக உருவான இயற்கை தலைவர் ஆவார்.

வானில் சூரியன் உண்டு. நட்சத்திரம் உண்டு. நிலவும் உண்டு. அதேபோலத்தான் இந்தக் கூட்டணியில் திமுக என்ற உதயசூரியன் இருக்கிறது. நட்சத்திரக் கொடி கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் இருக்கிறது. பிறையைக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இருக்கிறது.

இவை எல்லாம் இணைந்த கூட்டணியான இதில் இயற் 'கை' இருக்கிறது. எனவேதான் இது இயற்கைக் கூட்டணி.

நான் தவறான கூட்டணிக்குப் போய்விட்டதாக பாமக நிறுவனர் கூறியுள்ளார். நான் இடம் பெறாத கூட்டணிதான் தமிழருக்கு எதிரான, தமிழ் இனத்திற்கு எதிரான கூட்டணியாகும். மனித உணர்வை மதிக்கத் தெரியாத தலைமையைக் கொண்ட அந்தக் கூட்டணி ஒரு செயற்கை கூட்டணி அது.

அங்கே கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு மரியாதை கிடையாது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வந்தால், நாம் உட்கார்ந்து எழுந்து நின்றால் கூட மரியாதை கொடுத்தது போலாகி விடுமே என்று நினைத்து எழுந்தே நிற்பார் அந்தக் கூட்டணியின் தலைவி. அப்படிப்பட்ட பண்புடையவர் அவர்.

ஆனால் திமுகவில் அப்படி இல்லை. இயற்கையான உணர்வுடன், உறவை மதிக்கத் தெரிந்த தலவர் கருணாநிதி. நன்றாக இருக்கிறீர்களா, எங்கே போயிருந்தீர்கள், எப்போது வந்தீர்கள், தேநீர் அருந்துங்கள் என்று உபசரிக்கும் பாங்குடையவர்.

தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல் திருமாவளவன் என்ற சிறியவனாக இருந்தாலும் கூட எழுந்து நின்று வரவேற்க வேண்டும் என்ற பண்பை அறிந்தவர்.

தி.மு.க. அரசு மீது ஒரு குற்றச்சாட்டுகூட சொல்ல முடியாது. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக முதல்-அமைச்சர் கருணாநிதி, உயிர்மூச்சைப் பணயமாக வைத்து போராடி வருகிறார். இந்தத் தலைவர் காட்டிய வழியிலே நாங்களும் போராடி வருகிறோம்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தி.மு.க. இரண்டு முறை ஆட்சியை இழந்துள்ளது, பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளது. வேறு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய முடியும்? செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளனர்.

போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகிறது. ஆனால், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. இதுவரை சொல்லவே இல்லை. ஒருநாள் கூத்து-உண்ணாவிரதம் கூத்து மட்டும் நடந்தது.

தமிழனின் நீண்டநெடிய கனவு திட்டமான சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை ரத்து செய்வோம் என்று, அந்தத் திட்டம் நிறைவேற வேண்டும் என்று வலியுறுத்திய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வைகோ, டாக்டர் ராமதாஸை பக்கத்தில் வைத்துக் கொண்டே ஜெயலலிதா சொல்லியுள்ளார். முரண்பாடுகள் நிறைந்த, அப்பட்டமான சந்தர்ப்பவாத கூட்டணியே அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஆகும் என்றார் திருமாவளவன்.

அமைச்சர் அன்பழகன் பேசுகையில், தி.மு.க. கூட்டணியில் சிலர் போய்விட்டார்கள். அதனாலேயே சிலர் கூட்டணிக்கு வந்துள்ளார்கள். தி.மு.க. கூட்டணிக்கு நாள்தோறும் பேராதரவு பெருகி வருகிறது. தினம் தினம் அறிவாலயத்திற்கு வந்து எத்தனையோ அமைப்புகள் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. 2004 பாராளுமன்ற தேர்தலில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார் என்பதை முதல்-அமைச்சர் கருணாநிதி கைகாட்டினார்.

எந்த குறைபாடுகளும் இல்லாமல் யாரும் குறைசொல்லாத அளவுக்கு மத்தியில் 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றிருக்கிறது. இதேபோல், தமிழகத்தில் 3 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியிலும் ஏராளமான சாதனைகள் நடந்துள்ளன. டெல்லியில் மீண்டும் சமய சார்பற்ற, மசூதிகளை இடிக்காத, மசூதிகளை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டுவோம் என்ற சொல்லாத ஒரு ஆட்சி அமைய வேண்டும். தி.மு.க. கூட்டணியின் வெற்றி உறுதி. ஜனநாயகத்தை காப்பாற்ற தி.மு.க. கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.

தங்கபாலு..

காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேசுகையில்,

தமிழ்நாட்டில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதியே முக்கிய காரணம் ஆகும்.

உங்களை சோனியாகாந்தியின் தொண்டர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். அதனால்தான், முதல்-அமைச்சர் கருணாநிதி தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களை முன்னிலைப்படுத்திய போதெல்லாம் அவற்றை அன்னை சோனியாகாந்தியும், பிரதமர் மன்மோகன்சிங்கும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளனர்.

தங்களது அணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஒருமாதத்தில் தமிழ்நாட்டில் ஆட்சியை மாற்றிக் காட்டுவோம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியும், அன்னை சோனியாகாந்தியும் இருக்கும்வரை தி.மு.க.வை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யும் திட்டத்திற்கான கோப்பில் முதல் கையெழுத்துப் போட்டார். அதுபோல 71 ஆயிரம் கோடி ரூபாய்க்கான விவசாயக் கடனை அன்னை சோனியாகாந்தி தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.

மத்தியில் 5 ஆண்டுகளில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் 120-க்கும் மேற்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

சமூக, பொருளாதார மேம்பாடு ஏற்பட்டுள்ளது. 2004-ம் ஆண்டைப் போலவே இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இன்றும், நாளையும் வரலாறு எழுதும் தலைவராக முதல்-அமைச்சர் கருணாநிதி இருப்பார் என்றார்.

வெற்றிக் கூட்டணி - ஆர்.எம்.வீ.

எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பேசுகையில்,

காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி உலக அளவில் இந்தியாவை முன்னேற்றி காட்டியுள்ளது. இந்தியாவில் புதிய ஆட்சி அமைய துணைநிற்கப் போகிறவர் முதல்-அமைச்சர் கருணாநிதிதான்.

சமுதாய முன்னேற்றத்திற்காக பெரியார் 95 வயது வரை பாடுபட்டார். அதையும் தாண்டி சமுதாயத்தின் உயர்வுக்கு பாடுபடக்கூடிய ஆற்றல் படைத்தவர் முதல்-அமைச்சர் கருணாநிதி. சமுதாயத்திற்காக உழைத்து உழைத்து உயர்ந்தவர் அவர்.

தி.மு.க. தலைமையிலான கூட்டணி கொள்கைகள் நிறைந்த கூட்டணி. மாபெரும் வெற்றிக்கூட்டணி. அதற்குக் காரணம் இந்த கூட்டணியை பலபேர் ஆதரிக்க முன்வந்துள்ளனர். 3 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இன்று இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. ஐ.நா. சபை ஆதரவு தெரிவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு எல்லாம் காரணம் முதல்-அமைச்சர் கருணாநிதிதான். அவரால்தான் இன்று உலகம் முழுவதும் இலங்கை தமிழர்கள் பிரச்சினை பேசப்பட்டு வருகிறது என்றார்.

கி.வீரமணி..

தி.க. தலைவர் கி.வீரமணி பேசுகையில், கடந்த தேர்தலில் இந்தியாவிற்கே கதாநாயகனாக திகழ்ந்தது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை. இதன் மூலம் இந்தியாவிற்கே திட்டம் தீட்டி கொடுத்தவர் கருணாநிதி. அவர் சொன்னதையும் செய்வார். சொல்லாததையும் செய்வார். ஆனால் சிலர் சொன்னதையே மறந்து விடுவார்கள்.

நம்முடைய கனவு திட்டமான சேதுசமுத்திர திட்டத்தையே ரத்து செய்வதாக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த தேர்தலில் என்ன சொன்னார்கள் என்பதை மறந்து விட்டனர். ஆகவே மக்கள் எண்ணி பார்த்து கடந்த தேர்தலை போல் இந்த தேர்தலிலும் 40 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணிக்கே மக்கள் அளிக்க வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X