For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.வுக்கு 2001ல் சேது திட்டம் இனித்தது, 2004ல் சுவைத்தது, 2009ல் கசக்கிறதா? - கருணாநிதி தாக்கு

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi at the meet
சென்னை: சேது சமுத்திரத் திட்டம் 2001ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு இனித்தது. 2004ம் ஆண்டு சுவைத்தது. 2009ம் ஆண்டு அது கசக்கிறதா?. சேது கால்வாயில் கனரக கப்பல்கள் போக முடியாது என்று கூறுகிறாரே, இவர் அதிலா பயணம் செய்யப் போகிறார்? என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.

திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று மாலை சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் நடந்தது.

முதல்வர் கருணாநிதி, தங்கபாலு, திருமாவளவன், காதர் மொய்தீன், கி.வீரமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது..

எனக்கு முன்னாள் பேசியோரெல்லாம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்றது போல் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று சூளுரைத்தார்கள். நாற்பதிலும் நாம் பெறுவோம் என்பதில் ஐயம் இல்லை.

இனியவை நாற்பது ..

தமிழ் இலக்கியத்தில் இனியவை நாற்பது; இன்னா நாற்பது என்று உண்டு. நாம் 40 இடங்களில் வெற்றி பெறுவதற்காக வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறோம் என்றால் இவை இனியவை நாற்பது. இவர்களை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் இன்னா நாற்பது. எனவே இனியவை நாற்பது, வெற்றி பெற நீங்கள் எல்லாம் ஒத்துழைக்க வேண்டும்.

இந்த தேர்தல் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்றாலும் கூட எதிரணியினர் என்ன பேசுகிறார்கள் என்றால், நாடாளுமன்ற தேர்தலில் 40-தொகுதிகளிலும் வென்றுவிட்டால், இந்த அணியை வீழ்த்திவிட்டால், அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் வரும். அதிலே நாங்கள் வென்று, தி.மு.க. தலைமையில் உள்ள அணியை தண்டிப்போம். இந்த அணியை அடக்குமுறைக்கு ஆளாக்குவோம். பழிதீர்ப்போம் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். அவர்கள் அப்படி நினைக்க என்ன காரணம்?

தமிழகத்தில் நிலவும் இந்த ஆட்சி ஆனாலும், சோனியா தலைமையோடு, மன்மோகன் சிங்கை பிரதமராகக் கொண்டுள்ள ஆட்சியானாலும், இந்த இரு ஆட்சிகளும் ஒன்றோடு ஒன்று உறவு கொண்டு ஒற்றுமைக்கு பங்கம் இல்லாமல், உறவிலே சேதாரம் இல்லாமல், ஊனம் இல்லாமல் மக்கள் பிரச்சினை நம்முடைய பிரச்சினை; மக்கள் தொண்டே மகேசன் தொண்டு; என்ற அந்த உணர்வோடு, ஆற்றி வருகின்ற பணிகளின் காரணமாக, தமிழக மக்களானாலும், இந்திய தரணியில் வாழ்ந்து வரும் மக்களானாலும், இவர்களுடைய ஏமாற்று வித்தைக்கு கிறங்கி ஏமாந்து பலியாகிவிட மாட்டார்கள்.

தமிழர்கள் தங்களைத் தாங்களே அழிக்க மாட்டார்கள்..

சுருக்கமாக சொன்னால் தங்களை தாங்களே தமிழர்கள் அழித்துக் கொள்ள மாட்டார்கள். தங்களை தாங்களே தமிழர்கள் ஏமாற்றிக் கொள்ள மாட்டார்கள். தங்களை தாங்களே தமிழர்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்.

தமிழ்நாட்டிலும் சரி, இந்திய துணைக்கண்டத்திலும் சரி. இப்போது வருகின்ற செய்திகளை பார்த்தபோதும், எங்கெங்கே எத்தனை இடங்களை காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சிகளும் இன்றைக்கு பிடிக்கின்றன என்பதை உற்று நோக்கும் நேரத்தில், தேர்தல் ஜாதகத்தை கணிப்பவர்கள், அடுத்து வரும் ஆட்சியும் இந்திய துணைக்கண்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிதான் என்று முடிவுகளை சொல்லியிருக்கிறார்கள்.

தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய iனியன் முஸ்லிம் லீக் மற்றும் உள்ள தோழமை கட்சிகள் பெயரை எல்லாம் சேர்த்து எழுதி, நாம் ஓரணி என்று சொன்னால் போதாது. நமக்குள்ளே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கின்ற, ஒருவருக்கொருவர் உண்மையிலேயே உறவாடும் நிலை ஏற்படவேண்டும்.

வைக்கப்படாத கை..

நான் திமுக-வின் தலைவர். நீங்கள் என்னை தமிழினத் தலைவர், தன்மானத் தலைவர் என்று அழைத்தாலும் கூட நான் எனக்கு வைத்துக் கொள்ளும் பெயர் ஞாபகத் தலைவர். இன்று காலையில் நான் ஓய்வெடுத்துக் கொண்டு படுத்திருக்கும்போது என்னெதிரே ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியில், இப்போது நடைபெறுகின்ற கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற காட்சி காண்பிக்கப்பட்டது. அதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது இந்த மேடையில் உதயசூரியன் சின்னம் வைக்கப்பட்டதைப் பார்த்தேன். அப்போதுதான் வைத்துக் கொண்டிருந்தார்கள்.

நான் உடனே வேறு அறையில் இருந்த என்னுடைய செயலாளர் சண்முகநாதனை, தொலைபேசியில் உடனே அழைத்து, மேடை மீது உதயசூரியன் சின்னம் வைத்திருக்கிறார்களப்பா. இது கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டம். கை சின்னத்தை வைக்கச் சொல் என்றேன். அதை சொல்வதற்கும் நான்தான் பணியாற்ற வேண்டிய நிலை. வருத்தத்தோடு சொல்லிக் கொண்டிருக்கிறேன். நம்முடைய உறவு, உறுதியான உறவு. ஒருவரை ஒருவர் மதிக்கின்ற உறவு. ஆகவே உதயசூரியன் சின்னத்தோடு, இந்த கை சின்னத்தையும் வையுங்கள் என்று சொன்னேன்.

மாலையில் 7 மணிக்கு மீண்டும் தொலைக்காட்சியில் பார்த்தபோது உதயசூரியன் இருந்தது. கை சின்னத்தை காணவில்லை. ஒருவேளை சூரியன் அருகில் கை போனால் சுட்டுவிடும் என்று நினைத்தார்களோ என்று கருதியோ என்னவோ? அதை வைக்காமல் விட்டுவிட்டார்களோ என்று கருதினேன். இங்கிருக்கின்ற செயலாளர் வி.எஸ்.பாபு அவர்களை தொலைபேசியில் அழைத்து, ஏனய்யா காலையில் நான் வேலை மெனக்கெட்டு சொன்னேனே, கட்சித் தலைவர்களுக்கு வேலை இல்லை என்றாலும் அந்த வேலையை பார்த்து நான் சொன்னேனே, ஏன் கை சின்னத்தை வைக்கவில்லை என்றபோது, வைத்திருக்கிறோம் என்று அரிச்சந்திரன் நடையில் உண்மைக்கு மாறான செய்தியை சொன்னார். ஆனால் வைக்கவில்லை.

நான் உடனடியாக, கூட்டத்துக்கு வரவில்லை என்று போனை வைத்துவிட்டேன். அதனால்தான் தாமதமாக கூட்டத்துக்கு வந்தேன். அதற்கு பிறகு வீரபாண்டி ஆறுமுகம் போன்றோர் சமாதானம் செய்து, கூட்டத்துக்கு என்னை அழைத்து வந்தார்கள்.

ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்.

இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் இந்த கூட்டணி தி.மு.க. தலைமையில் இருக்கலாம். ஆனால், காங்கிரஸ் பேரியக்கத்துக்கு தரக்கூடிய மதிப்பை, விடுதலை சிறுத்தைகளுக்கு இருக்கக் கூடிய மதிப்பை, முஸ்லீம் லீகுக்கு தரவேண்டிய மதிப்பை மற்றும் உள்ள கட்சிகள் யார் யாரெல்லாம் நமக்கு ஆதரவு தந்து பணியாற்றுகிறார்களோ அவர்களுக்குள்ள மதிப்பை, தரவேண்டிய மதிப்பை தரவேண்டும் என்று குறிப்பிட்டு சொல்ல விரும்புகின்றேன்.

இது கழகத் தொண்டர்களுக்கு மாத்திரம் அல்ல. காங்கிரஸ் தொண்டர்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் உங்களுடைய மேடையில் கை சின்னத்தை வைக்கும்போது, உதயசூரியன் சின்னத்தையும் வையுங்கள் என்பதற்காகத்தான் இதனை சொல்கிறேன். இந்த ஒற்றுமை நம்மிடையே இருந்தால்தான் எவரும் நம்மை வேறுபடுத்த முடியாது. நாம் ஒற்றுமையோடு செயல்பட்டால்தான் 40-ம் நமக்கே.

தேர்தல் அறிக்கையை நான் வெளியிட பேராசிரியர் பெற்றுக் கொண்டபோது, பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தேன். அப்போது, பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். உங்களுடைய ஸ்லோகன். முழக்கம் என்ன என்றார்கள். வெற்றி நமதே! அதுதான் எங்கள் முழக்கம் என்று அவர்களிடம் குறிப்பிட்டேன்.

இன்றைக்கு பேசியவர்கள், நம்முடைய வேட்பாளர்கள் ஒன்றை இங்கு சுருக்கமாக கோடிட்டார்கள். செல்வி அம்மையார் முன்னாள் முதல்-அமைச்சர் மதிப்பிற்குரிய ஜெயலலிதா அவர்கள், கடந்த 2, 3 நாட்களுக்கு முன்பு அவர்களுடைய இயக்கத்தின் சார்பாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

2001-ம் ஆண்டு அ.தி.மு.க, தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், சேது சமுத்திரத் திட்டத்தால் நம் நாடு மட்டுமல்ல தென் கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயனடையும். வாணிபமும் தொழிலும் பெருகும். அன்னிய முதலீடு அதிகரிக்கும். அன்னியச் செலவாணி அதிகம் கிடைக்கும்.

கப்பல் பயணம் பெருமளவுக்குக் குறையும். எரிபொருளும் பயண நேரமும் மிச்சமாகும். ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். குறிப்பாக ராமநாதபுரம் போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட தமிழக தென்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். வேலை வாய்ப்பு பெருகும். தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச அளவில் விரிவடையும்.

சுற்றுலா வளர்ச்சி அடையும். இன்னபிற நன்மைகளைத் தர இருக்கும் இந்தத் திட்டத்தின் தேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நிதி நெருக்கடியை மத்திய அரசு ஒரு சாக்காகக் கூறிக் கொண்டு இருக்காமல் உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களோடு மத்திய அரசு தொடர்பு கொண்டு வேண்டிய நிதியைப் பெற்று இந்தத் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து ஒரு காலக்கெடுவுக்குள் இத்திட்டத்தை நிறைவேற்றும்படி மத்திய அரசை விடாது அ.தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும் என்று கூறப்பட்டு உள்ளது. இது 2001-ல் அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கை. இதை நீங்கள் மனதிலே குறித்துக் கொள்ளுங்கள்.

10.5.04 அன்று அ.தி.மு.க. வெளியிட்ட நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டம், பொருளாதார வளர்ச்சியிலும் நாட்டின் ஒட்டுமொத்த தொழில் மேம்பாட்டிலும் முக்கிய பங்காற்ற இருக்கும் இந்தத் திட்டத்தினை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க மத்திய ஆட்சியில் மந்திரி பொறுப்பில் 5 ஆண்டு காலமாக இருக்கும் தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் தவறிவிட்டதை இந்த நாடு நன்கு அறியும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இதற்குப் பிறகு இப்போது 16.4.09 அன்று அவர்களுடைய தேர்தல் அறிக்கையில், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களின் கனவுத் திட்டமாக இருந்த ஒன்று. ஆரம்பத்தில் இந்தத் திட்டம் குறித்து ஆலோசனை செய்த பிரிட்டீஷார்' பின்பு இதைக் கைவிட்டுவிட்டார்கள்.

பின்னர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். போன்ற தலை சிறந்த தலைவர்களும் தமிழகத்தின் நீண்டகாலத் தேவையை இந்தத் திட்டம் பூர்த்தி செய்யும் என்று கருதினார்கள். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட கனவை நனவாக்குவதாக தி.மு.க.வும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றன.

பெரிய கப்பலிலா ஜெ. பயணிக்கப் போகிறார்..

ஆனால் அதிக வேகமும் மிக அதிக எடையும் கொண்ட சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட கப்பல்கள் பயணிக்கும் இன்றைய நவீன யுகத்தில் இந்தத் திட்டம் ஒவ்வாத திட்டம் என்ற உண்மை வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டு இருக்கிறது. அதிக எடை கொண்ட சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட கப்பல்கள் எல்லாம் அதில் போகாதாம். இந்த அம்மாவா பயணம் பண்ணப் போகிறார்கள். இல்லை.

மேலும் அதில், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் தமிழ்நாட்டின் கடற்கரை மாவட்டங்களில் வாழ்ந்து வரும் லட்சக் கணக்கான மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பறிகொடுப்பார்கள். ஆகவே இந்தத் திட்டத்தை ரத்து செய்கிறோம் என்று கூறப்பட்டு உள்ளது. 2001-ம் ஆண்டில் இனித்த திட்டம், 2004-ல் சுவையாக இருந்த திட்டம், 2009-ம் ஆண்டில் கசப்பாக மாறிவிட்டது என்றால் என்ன காரணம்?

அதைத்தான் இங்கு பேசியவர்கள் எல்லாம் குறிப்பிட்டார்கள். வேண்டுமென்றே இலங்கைக்கு உதவுவதற்காக, இலங்கையை சுற்றிக் கொண்டு வருகின்ற செலவு குறைந்தால், இலங்கைக்கு கப்பல்கள் மூலமாக வருகிற வருமானம், அங்கே உள்ள துறைமுகங்களுக்கு குறையும் என்பதற்காக அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம்தான் இந்தத் திட்டம் வேண்டாம் என்று சொல்வதாகும்.

சேதுசமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி நாம் பெரிய, பிரமாண்டமான பேரணி நடத்தினோம். கடையடைப்பு நடத்தினோம். வேலை நிறுத்தம் செய்தோம். அந்த நேரத்திலேயே இவர்கள் அதைப் பற்றி எதிர்ப்பு காட்டி உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்து என்னையும் தம்பி டி.ஆர்.பாலுவையும் குற்றவாளிகளாக கூண்டிலே நிறுத்த முயன்றார்கள். ஆனால் அவர்கள் தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

ஏன் இவைகளையெல்லாம் சொல்லுகிறேன் என்றால், இந்த அளவுக்கு தமிழ்நாட்டுக்கு தேவையான ஒரு திட்டத்தை வளம் கொழிக்கக் கூடிய ஒரு திட்டத்தை, பாலைவனமாக இருக்கும் தமிழகம் சோலைவனமாக மாறக் கூடிய அளவுக்கு உருவாகக் கூடிய ஒரு திட்டத்தை, ஏறத்தாழ 800 கல்தொலைவு சுற்றிக் கொண்டு இலங்கைத் தீவையும் சுற்றிக் கொண்டு செல்லும் பயணம் சுருங்கி மிகக் குறைவான தூரத்தில் நமது வாணிபம் நடைபெறவும், நம்முடைய வர்த்தகச் செல்வம் பெருகவும், போக்குவரத்தில் செலவு குறையவும் ஒரு அருமையான திட்டத்தை, 100 ஆண்டுகளுக்கு முன்பு பெரியவர்கள், பெரு மேதைகள், விஞ்ஞானிகள், வல்லுனர்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்து தயாரித்த திட்டத்தை, பெருந்தலைவர் காமராஜர், ஜவஹர்லால் நேருவிடத்திலே வலியுறுத்திய திட்டத்தை, அதற்குப் பிறகு பெரியார், அண்ணா வலியுறுத்திய திட்டத்தை, இன்னும் சொல்லப் போனால் 1967-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி தோன்றிய 3-வது வாரம் அறிஞர் அண்ணா, எழுச்சி நாள் என்ற ஒரு நாளை குறிப்பிட்டு அந்த நாளில் வைத்த திட்டங்கள் சேலம் உருக்காலை முழுமையாக நிறைவேற வேண்டும், நெய்வேலி நிலக்கரித் திட்டம் இன்னும் 2-வது சுரங்கத்தைப் பெற்று செழிப்புற வேண்டும், அதுபோல ஒன்றுதான் சேதுசமுத்திரத் திட்டம்
என்று அண்ணா கண்ட கனவுதான் இந்தத் திட்டம்.

கனவை அழிக்கும் காரிகை..

அந்தக் கனவை அழிக்கின்ற ஒரு காரிகை இன்றைய அளவும் அண்ணாவின் பெயரில் கட்சி வைத்துக் கொண்டு, அண்ணாவின் படத்தை கொடியில் போட்டுக் கொண்டு, தமிழர்களை வாழவைக்கின்ற, தமிழர்களுக்கு செழிப்பு, வளம் தருகின்ற, தமிழர்களை தமிழர்களாக, தரணியிலே மனிதர்களாக ஆக்குகின்ற ஒரு அருமையான வாய்ப்பை வழங்குகின்ற ஒரு திட்டத்தை வேறோடு அழிப்பேன், ரத்து செய்வேன் என்று சொல்கின்ற அளவுக்கு உனக்கு அதிகாரம் கொடுத்தது யார்? யார் அவர்கள்?

கை தட்டினால் போதாது. கை தூக்கினால் போதாது. அதிகாரம் கொடுத்தது யார்? கொடுக்கப் போகிறீர்களா அந்த அதிகாரத்தை?

நமக்கு நாமே வாய்க்கரிசி..

சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தி வைக்கின்ற அதிகாரத்தை, நீட்டோலை மூலமாகவே இன்றைக்கு எழுதிக் காட்டி, தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு, பார், பார், நான் எதையும் செய்வேன், தமிழகத்தை வாழ வைக்கின்ற முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அதை நான் விடமாட்டேன். தமிழகத்தை வீழ்த்துகின்ற முயற்சியில்தான் நான் ஈடுபடுவேன். அதற்கு எனக்கு வாக்களியுங்கள்' என்று சொல்கின்ற அந்த வனிதாமணிக்கு நீங்கள் வாக்களித்தால் நமக்குநாமே வாய்க்கரிசி போட்டுக் கொண்டவர்கள் ஆகிவிடுவோம்.

அதை மறந்துவிடக் கூடாது. பெரியார், அண்ணா, காமராஜர் கண்ட கனவு, தமிழகம் உலகத்திலேயே தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற கனவாகும். அந்தக் கனவு நிறைவேற வேண்டுமானால் 40-க்கு 40, இனியவை 40, அதைக் கொண்டு வாருங்கள், அதைக் கொண்டாடி மகிழ்வோம் என்றார் கருணாநிதி.

திரளான தொண்டர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கருணாநிதி அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

கூட்டத்தையொட்டி பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையின் பின்னணியில் நாடாளுமன்றத்தின் படம் இடம் பெற்றிருந்தது. மேடையின் மேலே உதயசூரியன் மின்விளக்கொளியில் ஜொலித்தது. அருகே கை இடம் பெற்றிருந்தது.

தானா தெரு முழுவதும் அலங்கார மின்விளக்குகள், கட்சி கொடி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியின் மனைவியார் தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி, மருமகள் காந்தி அழகிரி, பேத்தி கயல்விழி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X