For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கெடு முடிந்தது: சரணடைய மாட்டோம்-புலிகள்; ராணுவம் பயங்கர தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

Prabakaran
கொழும்பு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சரணடைய இலங்கை அரசு விதித்த 24 மணி நேர கெடு முடிவடைந்ததது. இந்த கெடுவை விடுதலைப் புலிகள் நிராகரித்து விட்டனர். இதையடுத்து தமிழர் பகுதிகளில் ராணுவம் கடும் தாக்குதலை தொடங்கியுள்ளது. இன்று பிற்பகலில் புதுமாத்தளன் பகுதியை ராணுவம் பிடித்துள்ளது.

இலங்கைப் படைகள் அனைத்து பகுதிகளையும் சூழ்ந்து கடுமையாக தாக்கி வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலையாகும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

முல்லைத் தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புக்கு கிழக்கே சுமார் 25 சதுர கிமீ நிலப்பரப்பே இப்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு சுமார் 1.5 லட்சம் தமிழர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுள்ளனர். ஆனால், அங்கு 70,000 தமிழர்கள் தான் இருப்பதாக ராணுவம் கூறுகிறது.

ராணுவம் நடத்தி வரும் பயங்கர தாக்குதலில் தினமும் நூற்றுக்கணக்கானோர் மக்கள் பலியாகி வருகி்ன்றனர்.

இங்கு பாதுகாப்பு வளையத்துக்குள் நுழைந்த ராணுவம் அங்கிருந்த 35,000 மக்களை அதிரடியாக வெளியேற்றியது. இதை மிகப் பெரிய வெற்றியாக கருதும் அதிபர் ராஜபக்சே சரணடைய பிரபாகரனுக்கு நேற்று 24 மணி நேர கெடு விதித்தார்.

கெடு முடிவதற்குள் பிரபாகரனும் மற்ற புலிகளும் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் பயங்கர தாக்குதல் நடத்தி புலிகளை முற்றிலும் அழிப்போம் என்றார்.

நேற்று பகல் 12 மணிக்கு தொடங்கிய கெடு இன்று பகல் 12 மணியுடன் முடிவடைந்தது. ஆனால் இந்தக் கெடுவை விடுதலைப் புலிகள் ஏற்கவில்லை, நிராகரித்து விட்டனர்.

இதையடுத்து பெரும் தாக்குதலை ராணுவம் தொடங்கியது. கெடு முடிவதற்கு முன்பாகவே ராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

ஆயிரக்கணக்கில் வீரர்கள் குவிப்பு..

புதுக்குடியிருப்புக்கு கிழக்கே கடற்படையை தயார் நிலையில் வைத்துக் கொண்டு மேற்கு, வடக்கு, தெற்கு என முப்புறமும் ஆயிரக்கணக்கான வீரர்கள், டாங்கிகளை ராணுவம் அனுப்பி வந்தது.

இன்று மதியத்திற்கு மேல் ராணுவம் கடும் தாக்குதலைத் தொடங்கியது. முதலில் புதுமாத்தளன் பகுதியை ராணுவம் சரமாரியாக தாக்குதல் நடத்தி அந்தப் பகுதியை தன் வசம் கொண்டு வந்தது.

இதன் மூலம் விடுதலைப் புலிகள் வசம் இருந்து வந்த கடைசி முக்கியப் பகுதியையும் ராணுவம் பிடித்துள்ளது.

இந்தச் சூழலில் பிரபாகரன் என்ன செய்யப் போகிறார் என்பதை உலகமே கவனித்துக் கொண்டுள்ளது.

தற்போது வன்னிப் பகுதியில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க இயக்குநர் பியர் கிரஹென்புல் கூறியுள்ளார். ராணுவம் இறுதிக் கட்டத் தாக்குதலை தொடுக்கப் போகிறது. இதனால் மிகப் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.

மனித உரிமை கண்காணிப்பு, ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட பிற மனித உரிமை அமைப்புகள், பாதுகாப்பு வளையப் பகுதியில் குண்டு வீச்சு நடத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளன. இருப்பினும் இதை இலங்கை அரசு கண்டுகொள்ளவில்லை.

இந் நிலையில் 35,000 தமிழர்களை வெளியே கொண்டு வந்ததற்காக இலங்கை அரசுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று புதுக்குடியிருப்புக்கு கிழக்கே புலிகள் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு புலிகள் அமைத்த பாதுகாப்பு அரணை ராணுவம் தகர்த்துக் கொண்டு உள்ளே புகுந்தது.

அங்கு தஞ்சமடைந்திருந்த மக்கள் கூட்டத்துக்குள் ராணுவம் நடத்திய தாக்குதலால் மக்கள் சிதறி ஓடினர். இதையடுத்து அப் பகுதியை ராணுவம் பிடித்தது.

இந்தத் தாக்குதலில் இப் பகுதியில் ராணுவம் நடத்திய பயங்கர தாக்குதலில் 1500 பேர் வரை பலியாகி விட்டதாகவும் இதில் 476 பேர் சிறுவர்கள் என்றும் தகவல்கள் வருகின்றன. தெருக்கள் எல்லாம் பிணங்கள் சிதறி கிடக்கின்றன.

பிரபாகரனுக்கு மன்னிப்பு இல்லை...

இந் நிலையில் இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயகரா கூறுகையில், போர் பகுதியில் சிக்கியிருக்கும் அப்பாவி மக்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இவர்கள் மீட்கப்பட்ட பின்னர் பிராபகரன், புலிகள் மீது தாக்குதல் நடத்தப்படும். அப்பாவி மக்கள் மீது நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். அவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம்.

பிரபாகரன் சரணடைய வேண்டும். அவர் தப்ப முடியாது. ஒன்று சரணடைய வேண்டும். அல்லது மரணத்தைச் சந்திக்க வேண்டும், அவருக்கு நாங்கள் மன்னிப்பு வழங்க மாட்டோம் என்றார்.

கெடு நிராகரிப்பு:

இதற்கிடையே ராணுவத்தின் கெடுவை ஏற்க புலிகள் மறுத்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன. மேலும் பொது மக்கள் யாரையும் தாங்கள் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் விடுத்துள்ள அறிக்கையில்,

எங்கள் பகுதியில் இருந்து வெளியே செல்லும் தமிழர்களை நாங்கள் தாக்குவதாகவும், அவர்கள் மீது மனித குண்டு தாக்குதல் நடத்துவதாகவும் சிங்கள அரசு பொய் செய்திகளை பரப்பி வருகிறது.

அப்படி யாரையும் நாங்கள் தாக்கவில்லை. திட்டமிட்டு சிங்கள அரசு பொய் பிரசாரம் செய்கிறது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கொத்து குண்டு, நேபாம் குண்டு, பாஸ்பரஸ் தீக்குண்டு ஆகியவற்றை வீசி சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X