For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை-நாளை திமுக 'பந்த்'!

By Staff
Google Oneindia Tamil News

Tamil Nadu
சென்னை: இலங்கையி்ல் போர் நிறுத்தம் கோரி நாளை திமுக அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்தத்தையொட்டி தமிழகம் முழுவதும் லாரிகள், ஆட்டோக்கள் ஓடாது என்று தெரிகிறது.

வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து வணிகர் சங்கங்கள் இன்று தங்களது முடிவை அறிவிக்கவுள்ளன. அவர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று தெரிவதால் மாநிலம் முழுவதும் கடைகளும் அடைக்கப்படும்.

மேலும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியமும் இந்த வேலை நிறுத்தத்தை ஆதரிப்பதாக அதன் தலைவர் சூரியமூர்த்தி அறிவித்துள்ளார். இதனால் அரசு அலுவலகங்களும் ஸ்தம்பிக்கவுள்ளன.

திரைப்படத் துறையினர் ஏற்கனவே படப்பிடிப்புகள் நடைபெறாது என அறிவித்து விட்டனர்.

அதே போல நாளை லாரிகள் ஓடாது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அதே போல டிப்பர் லாரிகள், கண்டெய்னர் லாரிகள், டூரிஸ்ட் வேன்கள் ஆகியவையும் ஓடாது என்று சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட லாரி அதிபர்கள் சங்க தலைவர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

பொது வேலை நிறுத்தத்திற்கு ஆளும் திமுகவே அழைப்பு விடுத்திருப்பதால் பஸ்கள் ஓடுமா என்பதிலும் சந்தேகம் நிலவுகிறது. கடந்த முறை சேது சமுத்திரத் திட்டத்திற்காக திமுக அழைப்பு விடுத்த பொது வேலைநிறுத்தம் பின்னர் உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றப்பட்டது. இருப்பினும் தமிழகம் முழுவதும் பிற்பகல் வரை பஸ்கள் எதுவும் ஓடவி்லை. ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களும் கூட ஓடவில்லை.

இதை எதிர்த்து அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் மீது அதிமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. ஆனால் அதில் முதல்வர் உள்ளிட்டோர் மீது குற்றம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனவே நாளைய போராட்டத்தில், பஸ், ரயில்கள் ஓடுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இருப்பினும் கடையடைப்பு முழுமையாக இருக்கும் வகையில் போராட்டம் அமையும் எனத் தெரிகிறது.

தமிழ்நாடு முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளது. இதன்படி காலை மற்றும் பகல் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படவுள்ளன.

அரசு அலுவலர் சங்கங்கள் தவிர ஆசிரியர் சங்கங்களும் போராட்டத்தை ஆதரிக்க உள்ளதால் விடைத்தாள் திருத்தும் பணிகள் பாதிக்கப்படலாம்.

பல்கலை. தேர்வுகள் தள்ளிவைப்பு:

இதற்கிடையே, நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் நாளை நடைபெறுவதாக இருந்த 'வைவா' தேர்வுகள் 25ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தேர்வாணையர்
கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகளைச் சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு நாளை முதல் 24ம் தேதி வரை திட்ட வைவா தேர்வு நடைபெறுவதாக இருந்தது.

இதில் 23ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் மட்டும் தற்போது இது 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்றவை திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

விமான சேவை பாதி்க்காது:

இந் நிலையில் இந்த வேலை நிறுத்தத்தால் விமான தேவைகள் பாதிக்கப்படாது என்று சென்னை விமான நிலைய இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

வக்கீல்கள் புறக்கணிப்பு:

இதற்கிடையே இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம் என உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அரசுத் தரப்பு வக்கீல்கள் வராவிட்டால் அவர்கள் இல்லாமலேயே வழக்குகளில் தனது சங்கத்தின் வழக்கறிஞர்கள் வாதாடுவர் என்றார்.

காங்கிரஸ் ஆதரவு...

இந்த பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தங்கபாலு, சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கைப் போரால் பலியாகி வரும் அப்பாவி தமிழர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு உடனடியாக அங்கு போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திட ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைவர் முதல்- அமைச்சர் கருணாநிதி நாளை தமிழகத்தில் அறிவித்துள்ள முழு வேலை நிறுத்த வேண்டுகோளை தமிழ்நாடு காங்கிரஸ் ஏற்று அதில் பங்கேற்கிறது.

வேலை நிறுத்தம் முழு வெற்றியைப் பெற தமிழகத்தின் அனைத்து காங்கிரஸ் சகோதர, சகோதரிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பை அளித்திட வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறோம் என்று கூறியுள்ளனர்.

இதற்கிடையே இந்த பந்தையொட்டி பல தனியார் நிறுவனங்களும் விடுமுறை அறிவித்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X