For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி போனில் பேசினால் என்ன?-ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

செஞ்சி: இலங்கையில் போர் நிறுத்தம் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் சோனியாவுக்கும் தந்தி அனுப்பும் முதல்வர் கருணாநிதி, இது தொடர்பாக டெலிபோனில் பேசினால் என்ன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது மகன் அன்புமணியின் மாமனாரும் ஆரணி காங்கிரஸ் வேட்பாளருமான கிருஷ்ணசாமியை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியனை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அவர் பேசுகையில்,

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 16 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும். நாங்கள் சொந்தம், பந்தம், பாசத்துற்கு எல்லாம் இடம் கொடுக்க மாட்டோம். அதைப்பற்றி யோசிக்கவும் மாட்டோம். பாவம், இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி, ராஜ்யசபா எம்பி சீட் கேட்டு பல முறை முயற்சி செய்தார். கிடைக்கவில்லை, ஏனென்றால் அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.

கருணாநிதி தானாகவே கேள்வி கேட்டு பதிலும் எழுதிக் கொள்வார். அதில் என்னைப் பற்றிய கேள்விதான் அதிகம் இருக்கும்.

வட இந்திய தொலைக் காட்சிகள் தமிழீழத்துக்கு எதிரான செய்திகளைப் பரப்பி வருகின்றன. இலங்கையில் போர் நிறுத்தம் செய்யாவிட்டால் இலங்கையுடனான தூதரக உறவுகளை துண்டித்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்தி அனுப்பும் கருணாநிதி, சோனியாவுக்கு தந்தி அனுப்பும் கருணாநிதி, போனில் பேசினால் என்ன?.

உலகில் உள்ள தமிழர்களின் மனசாட்சி முத்துக்குமரன். அவரை யார் என்று கேட்கிறார் ஒரு மூத்த காங்கிரஸ் அமைச்சர். தேர்தலில் அவருக்கு மக்கள் பதில் சொல்வார்கள்.

கருணாநிதியை மக்கள் கண்டிக்கும் நேரம் வந்துவிட்டது. திமுகவின் அத்தியாயம் முடிந்துவிட்டது என்றார் ராமதாஸ்.

முன்னதாக திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் காடுவெட்டி குருவை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்து பேசுகையில்,

இன்றைய நிலையில் எல்லா மாநிலங்களிலும் அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுகின்றன. ஆனால் அந்த மாநிலங்களில் முழுமையான வெற்றி கிடைக்காது. தமிழ்நாட்டில் மட்டும்தான் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறப் போகிறது.

அதன் மூலம் அடுத்த பிரதமர் யார் என்பதை தேர்வு செய்யும் பொறுப்பை ஜெயலலிதாவிடம் கொடுக்க போகிறோம். இன்னும் 3 மாதத்தில் சட்டசபைக்கும் தேர்தல் வரும்.

அதிமுக, கம்யூனிஸ்ட், மதிமுக, பாமக தொண்டர்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது. இந்த வேலை எங்களிடம் வேண்டாம். இதுபோல ஆள் பிடிப்பது ஈனத்தனமான வேலை என்றார்.

தமிழினத்தை காக்க முடியாமல் போகும்..

இதற்கிடையே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விடுதலைப் புலிகள் சரணடையாவிட்டால், செய்யப் போவது என்ன என்பதை இலங்கை அதிபர் ராஜபக்சே பகிரங்கமாக அறிவிக்காத போதிலும், அவர் எடுக்கப்போகும் நடவடிக்கையால், வன்னிப் பகுதியில் ரத்த ஆறு ஓடலாம் என கவலையடைந்திருக்கிறோம் என்றும் அங்கு ரத்த ஆறு ஒன்று ஓடுவதை தடுத்து நிறுத்துவதற்கு இன்னும் ஒரு சில மணி நேரம் மட்டுமே உள்ளது என்றும் மனித உரிமைகள் காப்பகம் எச்சரித்திருக்கிறது.

இலங்கையில் மிகப்பெரும் தமிழின அழிப்புக்கு சிங்கள இனவெறி அரசு திட்டம் தீட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இந்த எச்சரிக்கை புலப்படுத்துகிறது.

பாதுகாப்பு வளையம் என்று அரசாங்கத்தாலேயே அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்டவை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்தபோதிலும் ராஜபக்சே அரசு அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை.

இரண்டு நாட்களாக வன்னிப் பகுதியில் நடைபெற்று வரும் கொடூரத் தாக்குதல்களும், கோரத் தாண்டவமும் இதை எடுத்துக் காட்டுகின்றன.

எறிகணைத் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்கள், கொத்துக் குண்டுத் தாக்குதல்கள், ரசாயன ஆயுத தாக்குதல்கள் காரணமாக ஒரு நாளில் மட்டும் ஆயிரத்து 500 தமிழர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பல ஆயிரம் பேர் படுகாயமடைந்து மருத்துவமின்றி செத்துக் கொண்டிருக்கிறார்கள். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்களப் படையினரால் சிறை பிடிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படி தமிழ் இனம் கொன்றொழிக்கப்பட்ட போதிலும், போர் நிறுத்தம் பற்றி இலங்கையிடம் இதுவரை இந்திய அரசு வாய் திறக்கவில்லை. போர் நிறுத்தம் என்று சொல்லப் போவதில்லை என்றும் காங்கிரஸ் மேலிடப் பேச்சாளர் பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார்.

நிலைமை இப்படி இருக்கும்போது, முதல்வர் கருணாநிதி, பிரதமருக்கும், பிரணாப் முகர்ஜிக்கும், சோனியா காந்திக்கும் அவசர தந்தி அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

போரை நிறுத்த முன் வராவிட்டால் இலங்கை அரசாங்கத்துடனான அனைத்து தூதரக உறவுகளையும் துண்டித்திடுமாறு வலியுறுத்தி மூன்று தினங்களுக்கு முன்பு டெல்லிக்கு முதல்வர் கருணாநிதி அவசர தந்தி அனுப்பினார். அதற்கு என்ன பலன்? அதன் மீது இந்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இவையெல்லாம் யாருக்கும் தெரியாது.

இந் நிலையில், மூன்று தினங்களுக்குள்ளாக மீண்டும் ஒரு அவசர தந்தி என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். கடிதம் எழுதுவதாலோ, தந்திக்கு மேல் தந்தி அடிப்பதாலோ இந்திய அரசு அசைந்து கொடுக்காது.

24 ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லியில் நடந்த கலவரத்தில், கொல்லப்பட்ட அப்பாவி சீக்கிய மக்களுக்காக, எரிந்த நெருப்பு இன்றும் பஞ்சாப்பில் எரிந்து கொண்டிருக்கிறது. டெல்லியில் இருப்பவர்கள் பதறுகிறார்கள், பம்முகிறார்கள்.

ஆனால், தமிழர்கள் என்றால், ஏமாளிகள்; இவர்களை எப்படியும் ஏமாற்றலாம் என்கிற எண்ணமும், துணிச்சலும் இருப்பதால் தான் தமிழினத்திற்காக தமிழகத்தில் எழுப்பப்படும் குரல் டெல்லியின் காதுகளுக்கு இன்னமும் உரைக்கவில்லை.

மடிந்து கொண்டிருக்கும் தமிழர்களைக் காக்க இலங்கையுடனான உறவுகளை துண்டிக்காவிட்டால், இங்கே உங்களுடனான தேர்தல் உறவைத் துண்டித்துக் கொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்தால் மட்டுமே டெல்லியில் உள்ளவர்கள் கொஞ்சம் அசைந்து கொடுப்பார்கள் என நான் சுட்டிக் காட்டியபோது, அதற்கு ஒரு உள்நோக்கம் கற்பித்து கொச்சைப்படுத்துகிறார் முதல்வர்.

இலங்கையில் தமிழினம், பேரழிவை சந்திப்பதற்கு முன்னர், இந்திய அரசை அசைக்கும் முடிவை மேற்கொள்ளுங்கள்; இந்திய அரசை செயல்பட வையுங்கள். இப்படி கூறுவோர் மீது பழி சுமத்தி களங்கம் கற்பிப்பதை கைவிடுங்கள்.

அதே நேரத்தில் இதற்காக, ஒட்டுமொத்த தமிழர்களும் குரல் கொடுக்க முன்வரவேண்டும். இந்த நிமிடம் தவறினால், இனி தமிழினத்தைக் காக்க முடியாமலேயே போய்விடும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X