For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பந்த்: பஸ்களை நிறுத்திய அதிகாரிகள், கடைகளை மூடிய போலீஸ்- மக்கள் கொதிப்பு

By Staff
Google Oneindia Tamil News

Bandh
சென்னை: திமுக அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தம் தமிழகத்தை கடுமையாக பாதித்தது. அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளே டிப்போக்களை மூடி விட்டதால் பஸ்களை இயக்க வந்த டிரைவர்களுக்கும் அனுமதி தரப்படவில்லை. போலீஸாரே பல பகுதிகளில் கடைகளை மூடச் சொல்லியதாக கடைக்காரர்கள் புகார் கூறுகின்றனர். திமுக பந்த்தால் மக்கள் பெரும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளனர்.

ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி, இன்று பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

இருப்பினும் அதிமுக, மதிமுக, பாமக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்து விட்டன.

போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக திரையுலகம், வணிகர்கள் சங்கம் உள்ளிட்டவை தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், இன்று காலை போராட்டம் தொடங்கியது. பொது வேலைநிறுத்தத்தின்போது போக்குவரத்து இயல்பு நிலையில் இருக்கும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி அறிவித்திருந்தார்.

இருப்பினும் நேற்று இரவு முதலே அரசுப் பேருந்துகள் ஓடவில்லை. குறிப்பாக வெளியூர்ப் பேருந்துகள் ஓடவில்லை. பயத்தின் காரணமாக தனியார் பேருந்துகளும் ஓடவில்லை.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசுப் போக்குவரத்துக் கழக டிப்போக்கள் மூடப்பட்டு விட்டன. பஸ் நிலையங்களில் உள்ள போக்குவரத்துக் கழக விசாரணை அறைகளும் மூடப்பட்டு விட்டன.

போக்குவரத்துக் கழக அதிகாரிகளே, டிப்போக்களை மூடியதால், பஸ்களை இயக்க வந்த அதிமுக உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த டிரைவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

கண்டிப்பாக அனைவரும் இன்று பணிக்கு வர வேண்டும் என நேற்று அரசுப் போக்குவரத்துக் கழ ஊழியர்களுக்கு சுற்றறிக்கை விடப்பட்டிருந்தது.

அதைக் காட்டி நாங்கள் பணிக்கு வந்துள்ளோம், பஸ்களை இயக்க அனுமதியுங்கள் என்று டிரைவர்கள் கேட்டபோது, உங்களது சொந்த பொறுப்பில் பஸ்களை எடுத்துச் செல்லுங்கள். ஏதாவது நேரிட்டால் நீங்கள்தான் பொறுபபு என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனால் பல பகுதிகளில் டிப்போக்கள் முன்பு டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடைகளை மூடச் சொன்ன போலீஸார்..

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன. திறந்திருந்த கடைகளையும் திமுகவினர், போலீஸாரோடு வந்து மூடச் சொல்லியதாக கடைக்காரர்கள் புகார் கூறியுள்ளனர்.

சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் திமுகவினர் பெரும் கும்பலாக வந்து கடைகளை மூடுமாறு கூறியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக போலீஸாரும் கடைகளை மூடுமாறு மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை நகரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில பெட்டிக் கடைகள் மட்டும் அரை கதைவை மூடிய நிலையில் திறந்து வைக்கப்பட்டிருந்தன. அவர்களும் கூட பின்னர் மூடி விட்டனர்.

தலைநகர் சென்னை முதல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இதே நிலைதான்.

ரயில் போக்குவரத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. பலத்த பாதுகாப்புடன் அவை இயக்கப்பட்டு வருகின்றன.

நாளையுடன் தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் முடிகிறது. எனவே பந்த் காரணமாக இன்று வேட்பு மனு தாக்கலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாமல் தடுக்கும் பொருட்டு, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில்..

சுற்றுலாத் தளமான கன்னியாகுமரியில் பஸ்கள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும், விவேகானந்தர் பாறைக்கான படகுப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டது.

விழுப்புரத்தில்..

விழுப்புரத்தில் இன்று எந்த பஸ்சும் ஓடவில்லை. அரசுப் போக்குவரத்துக் கழக டிப்போ மூடப்பட்டுள்ளது. பஸ்களை இயக்க வந்த டிரைவர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

பஸ் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் காத்துக் கிடந்ததைக் காண முடிந்தது.

மேட்டுப்பாளையத்தில் ..

மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதியுடன் காத்துக் கிடந்தன. ஊட்டிக்கு எந்த பஸ்சும் இயக்கப்படவில்லை. இதனால் ஊட்டி செல்ல வந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.

பெண்கள், குழந்தைகளுடன் வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் கடும் அதிருப்தியுடன் பஸ் நிலையத்தில் காத்திருந்தனர்.

கரூர், திருச்சி, தஞ்சை, மதுரை, பொள்ளாச்சி என தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திமுகவினரின் பந்த்தால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் பாதிப்பில்லை..

திருப்பூரில் பந்த் அறிவிப்பை அனைத்து தொழிற் கூடங்களும் புறக்கணித்து விட்டன. தொழிலாளர்கள் அனைவரும் பணியில் இருந்தனர்.

பஸ்கள் மட்டும் இங்கும் ஓடவில்லை.

வக்கீல்கள் முழு அளவில் பணியில்..

சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை மற்றும் தமிழகம், புதுச்சேரியில்உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் இன்று வக்கீல்கள் பணிக்கு வந்திருந்தனர். திமுகவின் பந்த்தை தாங்கள் புறக்கணிப்பதாக ஏற்கனவே அவர்கள் அறிவித்திருந்தனர்.

ஓசூரில் ஆயிரக்கணக்கானோர் தவிப்பு..

தமிழகத்தின் எல்லை நகரமான ஓசூரில் இன்று பஸ்கள் எதுவும் இயக்க்படவில்லை. இதனால் பெங்களூருக்குச் செல்லவேண்டிய பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர்.

ஆட்டோ கவிழ்ந்து 10 பேர் படுகாயம்..

ஓசூரில் பஸ்கள் இல்லாததால் ஆட்டோக்களில் கூட்டம் அலை மோதியது. இதனால் அதிக அளவிலான பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆட்டோ டிரைவர்கள் காசு பார்த்தனர்.

இதுபோல அதிக அளவிலான பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்ற ஒரு ஆட்டோ கவிழ்ந்து விழுந்ததில் 10 பேர் காயமடைந்தனர்.

மக்கள் கடும் கோபம்..

இன்றைய பந்த்தால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக மாணவ, மாணவிகள்.

பத்தாவது மற்றும் பிளஸ்டூ தேர்வுகள் முடிந்து விட்டன. இருப்பினும் பிற படிப்புக்கான தேர்வுகள் இன்னும் பல பள்ளிகளில் முடியவில்லை. தற்போதுதான் அவை நடந்து வருகின்றன.

இன்று தேர்வு எழுத வேண்டிய மாணவ, மாணவிகள் பஸ்கள் இல்லாததால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.

சாலைகளில் சென்ற டூவிலர்களில் லிப்ட் கேட்ட சென்றதைக் காண முடிந்தது. பலர் தங்களது பிள்ளைகளின் பரீட்சையை மனதில் கொண்டு சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றிப் பறந்தனர். வாகனங்கள் இல்லாதவர்கள் அக்கம் பக்கத்து வீடுகளில் வாகனங்களை இரவல் கேட்டு அழைத்துச் சென்றனர்.

திமுக பந்த்தால் மக்கள் பெரும் கோபத்துடன் பேசுவதையும் காண முடிந்தது.

புதுச்சேரியிலும் வேலை நிறுத்தம்

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் இன்று பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.

நேற்று நடந்த காங்கிரஸ், திமுக கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தைப் போலவே, புதுச்சேரியிலும் பொது வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று காலையில் புதுச்சேரியிலும் வேலைநிறுத்தம் தொடங்கியது. தனியார் பேருந்துகள் முழுமையாக ஓடவில்லை. அரசுப் பேருந்துகளும் சொற்ப எண்ணிக்கையில்தான் ஓடுகின்றன.

திமுக வேட்பாளர்கள் பிரசாரம் செய்யவில்லை..

பந்த் போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் திமுக வேட்பாளர்கள் யாரும் பிரசாரம் செய்யவில்லை. அனைவரும் தங்களது பிரசாரத்தை ரத்து செய்து விட்டனர்.

வெறிச்சோடிய ரெங்கநாதன் தெரு:

எப்போதும் மக்கள் நெரிசலாகக் காணப்படும் சென்னை தியாகராயநகர் ரெங்கநாதன் தெருவில் இன்று கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. இதனால் தெருவே வெறிச்சோடி கிடந்தது. அதேபோல உஸ்மான் ரோடு, பனகல்பார்க், பாண்டி பஜார் ஆகிய பகுதிகளிலும் கடைகள் ஏதும் திறக்கவில்லை.

அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசாவும் இன்று மூடப்பட்டது.

உணவுக்கு அலைந்த மக்கள்:

ஹோட்டல்களும் மூடப்பட்டதால் வேலை விஷயமாக ஊர் விட்டு ஊர் வந்தவர்கள் உணவு கிடைக்காமல் திண்டாடினர். இதனால் தள்ளு வண்டி கடைகளில் கூட்டம் அலைமோதியது.

திறந்திருந்த டாஸ்மாக் கடைகள்

பந்த்தின்போது பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தபோதிலும் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறந்திருந்தன. இவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருந்தது.

சில பகுதிகளில் கடைகளைத் திறந்தவர்களை, சிலர் கும்பலாக வந்து மிரட்டி மூட வைத்ததாகவும் கூறப்படுகிறது.

தலைமைச் செயலாளர் கொடுத்த உறுதிமொழிக்கு மாறாக பந்த் மக்களுக்கு இடையூறான வகையில் நடந்ததால் இன்று அது குறித்து அவரிடம் கருத்துக் கேட்க நிருபர்கள் முயன்றனர். ஆனால், அவர் நிருபர்களை சந்திக்க மறுத்துவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X