For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓட்டு வாங்க மேனன்-நாராயணனை அனுப்பிய அரசு!

By Staff
Google Oneindia Tamil News

Karan Thapar
டெல்லி: தமிழக மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும், தேர்தலில் தமிழகத்திலிருந்து அதிக எம்.பிக்களைப் பெற வேண்டும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸும் திமுகவும் தனிமைப்பட்டு விடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே மேனனையும், நாராயணனையும் கொழும்புக்கு அனுப்ப காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு செய்ததாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து இலங்கையை போரை நிறுத்தச் சொல்லுங்கள் என்ற கோரிக்கை வந்தால் போனில் பேசுவார்கள் அல்லது அறிக்கை விடுவார்கள். அத்துடன் நின்று கொள்ளும் இந்திய அரசு.

ஆனால் திடுதிப்பென நேற்று முடிவெடுத்து, இன்றே மேனனையும், நாராயணனையும் இலங்கைக்கு அனுப்பி படு சுறுசுறுப்பாக செயல்பட்டுள்ளது மத்திய அரசு. ஆனால் இதன் பின்னணியில் அரசியல் இருப்பது அரசியல் தெரியாதவர்களுக்கும் தெளிவாகப் புரியம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

உள்ளூரில் தேர்தல் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்ற கவலையால்தான் ஒன்றுக்கு இரண்டு தூதர்களை மத்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது என்பது அவர்களின் கருத்து.

இதுகுறித்து பிரபல அரசியல் பத்திரிக்கையாளர் கரன் தாப்பர் கூறுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் திமுகவுக்கு தற்போது பெரும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக இரு கட்சிகளும் ஒதுக்கப்பட்டு விடும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. எனவேதான் ஓட்டுக்கள் போய் விடக் கூடாது என்ற காரணத்தால் தூதர்களை அனுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இலங்கையில் வெடிப்பது தமிழகத்தின் மூலமாக தங்களைப் பாதித்து விடக் கூடாது என்ற ஒரே நோக்கம்தான் இதன் பின்னணியில் இருப்பதாக நான் கருதுகிறேன் என்றார்.

முன்னாள் இந்தியத் தூதரும், பாதுகாப்புத்துறை நிபுணருமான பத்ரகுமார் கூறுகையில், தற்போது, இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு அழுத்தமாக செயல்படவில்லை என்ற கருத்து தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. இலங்கை ராணுவத்தின் அடக்குமுறை, இனப்படுகொலை நடவடிக்கைகளை இந்திய அரசு தடுத்து நிறுத்தத் தவறி விட்டதாக தமிழக மக்கள் பெரும்பான்மையாக கருதுகிறார்கள் என்றார்.

இந்தியா இப்போது அவசரம் அவசரமாக தூதர்களை அனுப்பியுள்ள போதிலும் கூட, ஒரு வேளை நாளையே போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் கூட கடந்த சில மாதங்களில் கொல்லப்பட்டு விட்ட ஆயிரக்கணக்கான உயிர்கள் திரும்ப வரப் போவதில்லை. எனவே இந்தியாவின் தற்போதைய நடவடிக்கையால் உண்மையான பலன் ஈழத் தமிழர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை என்றும் இந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இருப்பினும் கடைசி வரைக்கும் ஒன்றுமே செய்யாமல் விட்டு விட்டார்களே என்ற பேச்சு வந்து விடக் கூடாது என்ற பயத்தால்தான் தூதர்களை அனுப்பியுள்ளது மத்திய அரசு என்றும் இவர்கள் கருதுகிறார்கள்.

அதேசமயம், இலங்கையில் விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்பதில் ஏன் இந்தியா இதுவரை காட்டியிராத அளவுக்கு இவ்வளவு வேகம் காட்டுகிறது என்பதை பெயர் சொல்ல விரும்பாத ஒரு மத்திய அரசு அதிகாரி ஒருவர் இப்படி விளக்குகிறார்..

தெற்காசியாவில் யார் பெரியண்ணா என்பதில் பெரிய போட்டியே நடக்கிறது. இந்தியா தனது ஆதிக்கத்தை யாரிடமும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. இந்தியா உதவியிருக்காவிட்டால் அந்த இடத்தில் இப்போது சீனா இருந்திருக்கும். இன்னேரம் ஒட்டுமொத்த தமிழினமும் கூட அழிந்து போயிருக்கும்.

அதனால்தான் இந்தியா தலையிட்டது. யாரையும் உள்ளே அனுமதித்து விடக் கூடாது என்ற ராஜதந்திரமும் இதில் அடங்கியிருக்கிறது என்கிறார்.

ஆனால் பாதித் தமிழினத்தின் நாடி அடங்கிப் போய் விட்டதே என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X