For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொழும்பில் மேனன்-நாராயணன்: பயன் இருக்குமா?

By Staff
Google Oneindia Tamil News

Menon and Narayanan
டெல்லி: இலங்கைக்கு மறுபடியும் வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் மற்றும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை மத்திய அரசு அனுப்பியுள்ளது. உடனடியாக சண்டையை நிறுத்துமாறு இலங்கை அரசை இவர்கள் இருவரும் வலியுறுத்துவார்களாம்.

முன்னதாக இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மேனன், நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து இலங்கையில் அப்பாவிகள் கொல்லப்பட்டு வருவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இவை அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். உடனடியான சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

இலங்கை நிலவரத்தை மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் இந்திய அரசு கவனித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக போர் பகுதிகளில் அப்பாவித் தமிழர்களின் நிலை பெரும் கவலை அளிக்கிறது.

பாதுகாப்பு வளையப் பகுதியிலிருந்து 1 லட்சம் தமிழர்கள் அரசுப் பகுதிகளுக்கு வந்திருப்பதாக அறிகிறோம். இருப்பினும் இன்னும் பல்லாயிரக்ணக்கான அப்பாவிகளின் நிலை கவலைக்குரியதாகவே உள்ளது.

எனவே எங்களது கவலைகளை இலங்கைக்கு எடுத்துச் சொல்வதற்காக இந்திய அரசு இரண்டு தூதர்களை இலங்கைக்கு அனுப்புகிறது என்று கூறியிருந்தார்.

உடனே கருணாநிதி வரவேற்பு...

கூட்டத்தில் இரு தூதர்களை அனுப்ப எடுக்கப்பட்டமுடிவை ப.சிதம்பரம், கருணாநிதிக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

அதற்கு கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்த கருணாநிதி, இந்த முடிவை பெரிதும் வரவேற்பதாகவும், போர் நிறுத்தம் செய்வதற்கு அவர்கள் எடுக்கும் இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கொழும்பு போய் சேர்ந்தனர்..

இந் நிலையில் நாராயணும் மேனனும் இன்று கொழும்பு போய் சேர்ந்தனர். அதிபர் ராஜபக்சேவை அவரது வீட்டில் இருவரும் சந்தித்துப் பேசுவர்.

இலங்கை விவகாரத்தில் ஏகப்பட்ட குழப்படிகள் செய்தவர்கள் இந்த இரு அதிகாரிளே என்று தமிழகத்தில் பரவலாக குற்றம் சாட்டப்படும் நிலையில் மீண்டும் இவர்களை அனுப்பி என்ன தீர்வு கிடைக்கப் போகிறதோ தெரியவில்லை.

இலங்கை விவகாரத்தில் ஜே.என்.தீட்சித்துக்குப் அடுத்தபடியாக மகா குழப்படி செய்ததில் இந்த இருவருக்கும் முழுப் பொறுப்புண்டு.

தீட்சித் வெளியுறவுச் செயலாளராக இருந்தபோது தான் அமைதி காப்புப் படையை அனுப்பி 1300 இந்திய வீரர்கள் பலியாகவும், இலங்கையில் யாருடைய ஆதரவும் இல்லாத வரதராஜ பெருமாளை முதல்வராக்கியும், இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தம் என்ற மாபெரும் தவறையும் செய்தார். அன்றைய பிரதமர் ராஜி்வ் காந்தியை தவறாக வழி நடத்தினார்.

அதே போல நாராயணனும் மேனனும் இப்போது குழப்பியடித்ததில் அங்கு ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் உயிர்கள் பலியாகிவிட்டன.முன்னாள் வெளியுறவுத்துச் செயலாளர்களான முச்குந்த் துபே, ஜி.பார்த்தசாரதி போன்ற இந்த விவகாரத்தை முழுமையாக உணர்ந்த அதிகாரிகளிடம் யோசனை கேட்டு நடந்திருந்தால் பெரும் தவறுகளை மத்திய அரசு தவி்ர்த்திருக்கலாம், ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிரையும் காத்திருக்கலாம்.

போருக்குப் பின்..யோசிக்க ஆரம்பித்த இந்தியா!

இந் நிலையில் போருக்குப் பிந்தைய நிலையை எப்படி சமாளிப்பது, என்ன மாதிரியான திட்டங்களை அங்கு அமல்படுத்துவது என்பது குறித்து இந்திய அரசு, இலங்கையுடன் சேர்ந்து யோசித்து வருகிறதாம். இதுதொடர்பாக விவாதிக்கவே மேனனும், நாராயணனும் கொழும்பு போயிருப்பதாகவும் தெரிகிறது.

அதிபர் ராஜபக்சேவுடன் இதுகுறித்துதான் பேசப் போவதாகவும் தெரிகிறது. போர் நிறுத்தம் குறித்து இவ்வளவு எவ்வளவு தூரம் அதிபர் ராஜபக்சேவிடம் அழுத்தம் தருவார்கள் என்று தெரியவில்லை.

பிரிட்டன் அமைச்சரும் பிரணாப் பேச்சு...

இதற்கிடையே, இலங்கையில் போருக்குப் பிந்தைய சூழ்நிலை குறித்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட்டை போனில் பிடித்து பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந் நிலையில் சமீபத்தில் இந்திய டாக்டர்கள் குழுவால் பலமோடை பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனை, வவுனியாவுக்கு மாற்றப்படுகிறதாம்.

இதற்கிடையே செஞ்சிலுவைச் சங்க செய்தித் தொடர்பாளர் சரசாய் விஜயரத்னே கூறுகையில், கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட காயமடைந்த மக்கள் சிகிச்சைக்கு வழியின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை உடனடியாக நல்ல மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது.

தற்போது போர்க்களப் பகுதியில் இரண்டே இரண்டு மருத்துவமனைகள்தான், அதுவும் கூட மிகச் சிறியவை உள்ளன என்கிறார் கவலையுடன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X