For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லிக்கு போலாமே..முடியாதே!: கூடினர்.. கலைந்தனர்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கைப் பிரச்சனை தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னை அறிவாலயத்தில் நடந்தது.

அதில், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக் கூட்டத்தில் தமிழக அனைத்துக் கட்சிக் குழுவை டெல்லிக்கு அனுப்பி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கச் செய்யலாம் என திருமாவளவன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

ஆனால், முதல்வர் கருணாநிதியின் உடல் நிலை சரியில்லாததால் அவரால் டெல்லிக்குச் செல்ல முடியாது என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைடுத்து திமுகவின் இரண்டாம் மட்டத் தலைவர்களை அனுப்பலாம் என்று கோரப்பட, முதல்வர் இல்லாமல் போவது சரியாக இருக்காது என்று அந்த திட்டமும் கைவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து சோனியா முதல்வர் தொடர்பு கொண்டு கட்டாய போரை நிறுத்தத்துக்கு நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் கருணாநிதி வலியுறுத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து திமுக மூத்த தலைவர்களுடன் கருணாநிதி தனியே நெடு நேரம் ஆலோசனைகளில் ஈடுபட்டார்.

முன்னதாக இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய திருமாவளவன்,

தேர்தல் பரபரப்பான இந்த சூழ்நிலையில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்காக முழு அடைப்பை முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதற்காக கருணாநிதிக்கு நன்றி.

இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளால் எவ்வித பயனும் இல்லை. இலங்கை மீது போர் தொடுத்தாவது போரை நிறுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் பற்றியும், ஆட்சிபற்றியும் கவலைப்படாமல் இக்கட்டான இந்த நேரத்தில் தமிழ் இனத்தை காப்பதே நமது வேலை என்றார் கருணாநிதி.

இலங்கையில் போர் நிறுத்தம் கூடாது என்று அதிமுக விரும்புகிறது என்பது முழுஅடைப்பை எதிர்ப்பதில் இருந்தே தெரிகிறது. அவர்கள் இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத் தமிழர்களுக்கும் எதிரானவர்கள்தான் என்றார்.

இஸ்ரேல், பாக்.. தங்கபாலு 'ஐயோ' பேட்டி:

தங்கபாலு கூறுகையில், இலங்கை அரசுக்கு பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகள் உதவி செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இலங்கையில் அமைதி திரும்பவேண்டும் என்றும் அங்குள்ள தமிழர்கள் நிம்மதியுடன் வாழ வேண்டும் என்பதும் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரின் எண்ணம். அதற்காக பல்வேறு நிலைகளில் இலங்கை அரசை வலியுறுத்தி வந்துள்ளனர். அது மட்டுமல்ல உலக தலைவர்களையெல்லாம் அழைத்து இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த வைத்தனர். ஏற்கனவே ராஜீவ் காந்தி உயிர் தியாகம் செய்தார்.

இன்றைய கூட்டத்தில் தேர்தல் மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகள் பற்றி கருணாநிதியுடன் விவாதித்தோம் என்றார்.

வீரமணியி்ன் 'அடடே' பேச்சு...

கி.வீரமணி கூறுகையில், முதல்வர் அறிவித்த வேலைநிறுத்தம் முழு வெற்றியை தந்துள்ளது. இதை வெளியில் இருந்து வந்த செய்திகள் எல்லாம் உறுதிப்படுத்துகிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடி இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அதுமட்டுமல்ல பிரதமர் மன்மோகன் சிங்கும் அமைச்சரவை கூட்டத்தை கூட்டி இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தி இருக்கிறார். இது வேலை நிறுத்தத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என்றார்.

'அடடே' அறிக்கை...

பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் தமிழ் இனம் அழிந்து விடுமோ என்று அஞ்சத்தக்க வகையில் இனப் படுகொலை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஆனால் சரியான நேரத்தில் வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ளது. அதை வரவேற்காவிட்டாலும் ஜெயலலிதா இந்த வேலை நிறுத்தம் கருணாநிதியின் கபட நாடகம் என்று கூறியிருக்கிறார். வரவேற்காவிட்டாலும் சும்மாவாவது இருந்திருக்கலாம்.

அவருக்கு வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகியோரும் இடதுசாரி நண்பர்களும் பக்கவாத்யம் பாடுகிறார்கள். வேலை நிறுத்தத்தை எதிர்த்ததில் இருந்து அவர்கள் இலங்கை தமிழர்கள் என்ற தேர்தல் நாடகத்தில் போட்ட வேடம் கலைந்து விட்டது என்று கூறியுள்ளார்.

மொத்தத்தில் நேற்றைய கூட்டத்தில் முக்கிய முடிவு எதுவும் எடு்க்கப்படவில்லை என்பதே நிலவரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X