For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திங்கள்கிழமை அட்சய திரிதியை-போக்குவரத்து மாற்றம்

By Staff
Google Oneindia Tamil News

Gold
சென்னை: அட்சய திரிதியை திங்கள்கிழமை வருவதால், சென்னை தியாகராய நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வருடா வருடம் அட்சய திரிதியை தினத்தன்று தங்கம் வாங்குவது மக்களின் முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது. அட்சய திரிதியை அன்று வீட்டிற்கு தங்கம் வந்தால் சுபிட்சம் ஏற்படும் என்ற ஐதீகமே இதற்குக் காரணம்.

எப்படி, ஆகாது என்று கூறப்படும் ஆடி மாதத்தை விசேஷ தள்ளுபடி மாதமாக்கி துணிக்கடைக்காரர்கள் பிரபலமாக்கினார்களோ, அதேபோல அட்சய திரிதியை தினத்தை நகைக்கடைக்காரர்கள் ஃபேமஸ் ஆக்கி விட்டனர்.

இதன் காரணமாக அட்சய திரிதியை தினத்தன்று நகைக் கடைகளில் கூட்டம் அலை மோதும். ஏதாவது ஒரு குண்டுமணியாவது வாங்க வேண்டும் என்று நினைத்து மக்கள் நகைக் கடைகளுக்கு அதிக அளவில் அன்று வருவார்கள்.

இந்த ஆண்டு அட்சய திரிதியை வருகிற திங்கள்கிழமை வருகிறது. இதையொட்டி தி.நகர் பகுதி நகைக் கடைகளில் கூட்டம் அல்லோகல்லப்படும். எனவே அங்கு போக்குவரத்து மாற்றத்தை போலீஸார் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை..

சென்னை தியாகராய நகர் பகுதியில் அட்சய திருதியை முன்னிட்டு 27-ந் தேதி அன்று பொதுமக்கள் அதிகமாக கூடுவார்கள் எனஎதிர்பார்க்கப்படுவதால் தி.நகர் பனகல் பூங்காவை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்தும் பொது மக்கள் வசதிக்காக 13 இடங்களில் பொதுமக்களின் வாகனங்கள் நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி எஸ்.பி. வாகன நிறுத்தம் ராமநாதன் தெரு, ஜே.கே. வாகன நிறுத்தம், ராமநாதன் தெரு, ரிகேஷ் வாகன நிறுத்தம் போஸ்டல் காலனி, மகாலட்சுமி தெரு வாகன நிறுத்தம், ராமகிருஷ்ணா ஆண்கள் மேல் நிலைப்பள்ளி (மெயின்) பாஷ்யம் ரோடு, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி பிரகாசம் சாலை, சோமசுந்தரம் மாநகராட்சி விளையாட்டு திடல் மற்றும் சுற்றிலும் உள்ள தெருக்கள், பர்க்கிட் சாலை தண்டபாணி தெரு சந்திப்பிலிருந்து பர்க்கிட் சாலை மூப்பாரப்பன் சாலை சந்திப்பு வரை), ஜி.என். சாலை வாகன நிறுத்தம் (இரு புறமும்), பாஷ்யம் சாலை, பிரகாசம் சாலை, சாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வடக்கு உஸ்மான் சாலை, சாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பர்க்கிட் சாலை, தி.நகர். ஆகியவற்றில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் மட்டும் பிரகாசம் சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும்,
நாகேஸ்வரர் ரோடு, உஸ்மான் சாலை மற்றும் துரைசாமி சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு நாகேஸ்வரர் ரோடு மற்றும் வெங்கட் நாராயணா ரோடு சந்திப்பில் ஆட்டோக்கள் பிரகாசம் சாலையை நோக்கி திருப்பி விடப்படும், அவ்விடத்தில் பயணிகளை இறக்கி விட்டும் ஏற்றிக் கொண்டும் செல்லலாம்.

தியாகராய நகரில் ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தியாகராய சாலை தணிகாசலம் சாலை சந்திப்பிலிருந்து பனகல் பூங்காவை நோக்கி செல்ல தடை, பிருந்தாவன் சந்திப்பிலிருந்து பனகல் பூங்காவை நோக்கி செல்ல தடை, முத்துரங்கன் சாலையிலிருந்து மேட்லி சந்திப்பை நோக்கிச் செல்ல தடை, கண்ணம்மாபேட்டை சந்திப்பிலிருந்து மேட்லி சந்திப்பை நோக்கிச் செல்ல தடை, பர்க்கிட் சாலை தண்டபாணி சாலை சந்திப்பிலிருந்து மேட்லி சந்திப்பை நோக்கிச் செல்ல தடை, வடக்கு உஸ்மான் சாலை கோட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து வடக்கு உஸ்மான் கிழக்கு புறசர்வீஸ் சாலை வழியாக பனகல் பூங்காவை நோக்கி செல்ல தடை, ரோகிணி ரவுண்டானாவில் இருந்து பனகல் பூங்கா செல்ல தடை, வடக்கு உஸ்மான் சாலை மகாராஜபுரம் சந்தானம் சாலை சந்திப்பிலிருந்து பனகல் பூங்காவை நோக்கி செல்ல தடை, வி.என்.சாலை/ நாகேஸ்வர ராவ் சாலை சந்திப்பிலிருந்து போத்தீஸ் நோக்கி செல்ல தடை, தண்டபாணி தெருவிலிருந்து பக்க வாட்ட தெருக்கள் வழியாக உஸ்மான் சாலை செல்ல தடை, தெற்கு தண்டபாணி தெருவிலிருந்து பக்கவாட்ட தெரு வழியாக தெற்கு உஸ்மான் சாலை செல்ல தடை, ஆட்டோக்களில் மேட்லி சந்திப்பை நோக்கி வரும் பயணிகளை பர்க்கிட் சாலை தண்டபாணி சாலை சந்திப்பில் இறக்கி விட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அண்ணாநகர் பகுதியிலிருந்து தியாகராய நகர் பனகல் பூங்கா வழியாக அடையார் செல்லும் வாகனங்கள் வள்ளுவர் கோட்டம், கோடம் பாக்கம் நெடுஞ்சாலை, உத்தமர் காந்தி சாலை சந்திப்பு வழியாக சென்று போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்.

அடையார் பகுதியிலிருந்து சேமியர்ஸ் சாலை, தியாகராய நகர் பனகல் பூங்கா வழியாக அண்ணாநகர் செல்லும் வாகனங்கள் செனடாப் சாலை சந்திப்பில் வலது புறம் அண்ணாசாலையில் திரும்பி எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, விஜயராகவா சாலை, டாக்டர் நாயர்சாலை, வாணிமகால் மற்றும் வள்ளுவர்கோட்டம் வழியாக செல்லலாம். அடையார் பகுதியிலிருந்து தியாகராய நகர் பனகல் பார்க் வழியாக மேற்கு மாம்பலம் செல்லும் வாகனங்கள் அண்ணாசாலை, சி.ஐ.டி. நகர் முதல் பிரதான சாலை, நியூ போக்சாலை, 70 அடி சாலை, அரங்கநாதன் சுரங்கப்பாதை வழியாக செல்லலாம்.

அண்ணா சாலையிலிருந்து பனகல் பார்க் வழியாக மேற்கு மாம்பலம் நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணா மேம்பாலம் கிளவர்லீப் வழியாக உத்தமர் காந்தி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக ஆற்காடு சாலை சென்று போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X