For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொத்து விவர தாக்கலில் சிக்கல் தீர்ந்தது- தா.பாண்டியன் வேட்பு மனு ஏற்பு.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: வட சென்னை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் தா.பாண்டியனின் வேட்பு மனு கடும் இழுபறிக்குப் பின்னர் ஏற்கப்பட்டு விட்டது.

வட சென்னையில் தா.பாண்டியன் போட்டியிடுகிறார். நேற்று நடந்த வேட்பு மனு பரிசீலனையின்போது, திமுக சார்பில் வழக்கறிஞர் ஜோதி ஒரு மனுவை தேர்தல் அதிகாரி மைதிலி ராஜேந்திரனிடம் அளித்தார்.

அதில், நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் தா.பாண்டியனின் வேட்புமனுவில் உண்மையினை சொல்லாமல் வேண்டுமென்றே மறைத்து, வாக்காளர்களை ஏமாற்றும் நோக்கத்துடன், தவறான தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதில், மறைக்கப்பட்ட சொத்து விவரங்களை ஆதாரப்பூர்வமாக இந்த மனுவின் மூலம் தெரியப்படுத்தவும், அவரது வேட்பு மனுவினை நிராகரிக்கவும் இம்மனு தரப்படுகிறது.

கடந்த 20.4.2009-ல் வேட்புமனுவினை தா.பாண்டியன் தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவுடன் அளிக்கப்படும், சத்திய பிரமாணத்தில் சொத்து விவரங்களை குறிக்கப்படும்போது, அசையா சொத்து என்ற இனத்தின் கீழ் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, உத்தமப்பநாயக்கனூர் கிராமத்தில் பட்டா எண்.744-ல் ஐந்து ஏக்கர் நிலம் மட்டும் உள்ளது என்றும் அதன் தற்போதைய சந்தை மதிப்பு இரண்டு லட்ச ரூபாய் மட்டும் என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.

ஆனால், 11.2.2008-ல் ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 529 மதிப்பிலான, கீழ்க்கண்ட சொத்து விவரங்கள் அடங்கிய பட்டா பாஸ் புக் நம்பர் 135634 என்ற எண்ணில் பதிவாகியுள்ள ஆவண எண்.333/2008-ல் பக்கம் 1 முதல் பக்கம் 13 வரை கொண்ட பத்திரத்தின் மூலம், அசையா சொத்தினை அவர் 1 லட்சத்து 79 ஆயிரத்து 529 ரூபாயை ரொக்கமாக தந்து, கிரயம் பெற்றுள்ளார். அவர், 4.67 ஏக்கர் பரப்பளவு கொண்ட 11 புஞ்சை நிலங்களை (சர்வே எண்கள் அனைத்தையும் குறிப்பிட்டு) வாங்கியுள்ளார். இவற்றை கிரயம் செய்த தேதி 11.2.2008. ஓராண்டுக்கு முன்பு, தான் வாங்கிய மேற்படி சொத்தினை வேட்புமனுவில் அவர் குறிப்பிடவில்லை.

கடந்த 2.5.2002 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் (ஏஐஆர் 2002 சுப்ரீம் கோர்ட்-பக்கம் 2112) ஒரு வேட்பாளர் தன்னைப்பற்றி முழு விவரங்களையும் வாக்காளர்களுக்கு தெரிவித்தே ஆக வேண்டும் என்றும் அதில் மறைத்தல், இல்லாதவற்றை இருப்பதாகக் காட்டுவது, இருப்பதை இல்லாததாகக் காட்டுவது போன்றவை இருக்கக்கூடாது என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு தவறான தகவல்கள் தந்தால் அந்த வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஆட்சேபணைகள் தெரிவிக்கப்படுகின்றன.

மேற்படி தீர்ப்பில் பத்தி 56-ல் ஒரு வேட்பாளர் தன்னை பற்றிய கிரிமினல் வழக்கு சம்பந்தப்பட்ட விவரங்களை உண்மையாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. உண்மை விவரங்களை தெரிவித்து சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டு ஒரு அபிடவிட் மூலமாக அவற்றை தெரியப்படுத்த வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில்தான் தேர்தல் ஆணையம் (அனெக்ஸர்-1) மற்றும் பார்ம் 26 ஆகியவற்றை முழு விவரங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்று வேட்பாளர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு முன்பு, தான் வாங்கிய சொத்து விவரத்தை வேட்புமனுவில் குறிப்பிடாமல் இருந்தது- வேண்டுமென்றே-தெரிந்தே மறைக்கப்பட்ட ஒரு செயலாகும். எனவே, இவ்வகை விவரங்களை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தையே பாழ்படுத்தும் நோக்கத்தில் வேட்பாளர் தா.பாண்டியன் நடந்து கொண்டுள்ளார். எனவே, அவரது வேட்புமனுவினை நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தா.பாண்டியன் உடனடியாக விரைந்து வந்தார். அவரது வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் தேர்தல் பார்வையாளர்கள் சுனில்குமார், பாலி, சுக்லா ஆகியோர் முன்னிலையில், தேர்தல் பார்வையாளரும், கலெக்டருமான மைதிலி ராஜேந்திரனிடம் தனது நிலைப்பாட்டினை எடுத்துக்கூறினார்.

தா.பாண்டியனின் விளக்கத்தை ஆய்வு செய்த பின்னர் அவரது மனு உள்பட 29 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்படுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

தா.பாண்டியன் மனு ஏற்கப்பட்டது குறித்து தேர்தல் அதிகாரி மைதிலி ராஜேந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது..

இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் தா.பாண்டியனின் மனுவை எதிர்த்து, தி.மு.க. வேட்பாளர் ஆட்சேப மனு அளித்தார்.

தேர்தல் ஆணைப்படி, ஆட்சேபணை மனுக்கள், பிரமாண பத்திரத்தில்தான் தரப்பட வேண்டுமென்றிருப்பினும், மேற்படி ஆட்சேபணை மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அந்த மனுவில், வேட்புமனுதாரர் தனது பிரமாணப்பத்திரத்தில், 2.95 ஏக்கர் சென்ட் கிரயம் பெற்றதை தெரிவிக்கவில்லை என்றும், அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 529 எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு தா.பாண்டியன் அளித்த பதிலில், தி.மு.க. வேட்பாளர் கூறியதுபோல், தனக்கு சொத்து ஏதும் இல்லை என்றும், 333/2008 பத்திர நகலை இணைத்து புதுச்சொத்து போல் குறிப்பிட்டது உண்மையில்லை என்றார்.

பின்னர், வேட்பாளரின் மனுவும், அதற்கு பதிலாக தரப்பட்ட மனுவில் இணைக்கப்பட்டிருந்த உசிலம்பட்டி வட்டம் உத்தப்பநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த சான்றும், ஆவணங்களுடன் பரிசீலிக்கப்பட்டன.

இதில், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணை மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரின் கையேடு' பாகம் 6, பத்தி 10.1-ன்படியும், வேட்பாளரின் மனுவுடன் சொத்து மற்றும் கடன்கள் பற்றிய பிரமாணப்பத்திரங்கள் சமர்ப்பிக்கும்போது, தவறான விவரங்கள் அளித்திருந்தாலோ அல்லது மறைக்கப்பட்டிருந்தாலோ, அதன் அடிப்படையில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்படலாகாது என்பது தெரிவிக்கப்பட்டு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், டி.கே.எஸ். இளங்கோவனது ஆட்சேபணை மனுவில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தா.பாண்டியனின் வேட்புமனு நிராகரிக்க அளித்த கோரிக்கை மனு தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தா.பாண்டியன் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற பரபரப்பு முடிவுக்கு வந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X