For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பல நாடுகளில் பரவும் பன்றிக் காய்ச்சல்-149 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

மாட்ரிட்: மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஸ்வைன் ப்ளூ காய்ச்சலுக்கு (பன்றிக் காய்ச்சல்) இதுவரை 149 பேர் பலியாகியுள்ளனர்.

தற்போது அமெரிக்காவில் இருந்து இந்த நோய் ஐரோப்பாவிற்கும் பரவியுள்ளதையடுத்து அமெரிக்கா பயணத்தை தவிர்க்குமாறு ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

வட அமெரிக்கா முழுவதும் ப்ளூ காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கு மெக்சிகோ நாட்டில் முதலில் ப்ளூ காய்ச்சல் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காய்ச்சல் காரணமாக மெக்சிகோவில் 1,614 பேர் அவதிப்பட்டு வருவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

பன்றிகளிடம் இருந்து மனிதனுக்கு பரவிய இந்த காய்ச்சலுக்கு மெக்சிகோவில் இதுவரை இந்த காய்ச்சலுக்கு சுமார் 149 பேர் பலியாகி இருக்கின்றனர். அமெரிக்காவில் 20 பேரும், கனடாவில் 6 பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உலக சுகாதார மையத்தின் செய்தி தொட்பாளர் பீட்டர் கார்டிங்லே கூறுகையில், மெக்சிகோவில் புதிய வைரஸ் காய்ச்சல் ஒன்று அதிவேகமாக பரவி வருகிறது. இது மெக்சிகோ எல்லையை ஒட்டி அமைத்துள்ள தெற்கு அமெரிக்க மக்களிடம் பெரும் பிதீயை கிளப்பியுள்ளது என்றார் அவர்.

இது குறித்து அதிபர் ஒபாமா கூறுகையில், ப்ளூ காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். இது கவலை தரக்கூடிய விஷயம். ஆனால் அபாயமானது அல்ல. இருந்தாலும் அமெரிக்காவில் சுகாதார அவசரநிலை அறிவித்துள்ளோம் என்றார்.

இந்நிலையில் வட அமெரிக்காவுக்கு வெளியே ஐரோப்பாவின் ஸ்பெயின் நாட்டில் ப்ளூ காய்ச்சல் ஒருவரை தாக்கியுள்ளது தெரிகிறது. அவர் அமெரிக்கா சென்றுவிட்டு சமீபத்தில் ஸ்பெயினுக்கு திரும்பியிருப்பது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து பிரான்சிலும் ஒருவருக்கு ப்ளூ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பயணத்தை தவிருங்கள்...

இதையடுத்து ஐரோப்பிய யூனியன் சுகாதார அமைச்சர், ஐரோப்பியர்கள் தேவையில்லாமல் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டாம். முடிந்தவரை அமெரிக்க பயணத்தை தவிருங்கள் என தெரிவித்துள்ளார்.

அதேபோல் மெக்சிகோ நாட்டிலிருந்து நியூசிலாந்து திரும்பியுள்ள 13 பேருக்கு ப்ளூ காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐரோப்பா, நியூசிலாந்து உள்ளிட்ட இடங்களில் அமெரிக்காவில் இருந்து வரும் பயணிகளை கடுமையான மருத்துவ சோதனைக்கு பின்னர் தான் உள்ளே நுழைய அனுமதிக்கின்றனர்.

இந்திய விமான நிலையங்களில் கடும் சோதனை...

இந்நிலையில் ப்ளூ நோய் தாக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் மூலம் இங்கும் அந்த நோய் பரவகூடும் என்பதால் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையடுத்து மெக்சிகோ, அமெரிக்க, கனடா, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி போன்ற ப்ளூ காய்ச்சலுக்கான அறிகுறி இருக்கிறதா என கட்டாய சோதனை செய்து வருகிறது.

மேலும் காய்ச்சலுடன் மூச்சு திணறல் இருக்கும் விமான பயணிகளுக்கு ரத்த பரிசோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஐதராபாத், கொச்சி, ஜெய்ப்பூர், கோவா என 9 முக்கிய விமான நிலையங்களில் சோதனை கருவிகளை நிறுவியுள்ளது.

இதில் பயணிகள் நெருக்கடி அதிகம் கொண்ட மும்பை மற்றும் டெல்லி விமான நிலையத்தில் 32 பேர் கொண்ட டாக்டர்கள் குழு சோதனைக்கு தயாராக இருக்கிறது. மேலும் பயணிகளிடம் தங்களுக்கு ப்ளூ அறிகுறி எதுவும் தற்போது இல்லை என்றும், அப்படி அறிகுறி எதுவும் தென்பட்டால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் எழுதி வாங்கப்பட்டு வருகிறது.

மேலும், ப்ளூ பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தேவையில்லாமல் பயணம் செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளது. பன்றிகளின் மூலம் இந்த காய்ச்சல் பரவுகிறது என்பதால் பன்றி இறைச்சியை சாப்பிடுபவர்கள் அதை 70 டிகிரி செல்சியசுக்கு மேல நன்கு சூடுபடுத்திய பின்னர் சாப்பிடுமாறு கேட்டு கொண்டுள்ளது.

ப்ளூ மற்றும் இன்புளூன்சா காய்ச்சல் தொடர்பாக தகவல் கொடுக்க மக்களுக்கு இரண்டு இலவச இணைப்புகளை சுகாதார துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. அந்த இணைப்புகள் 1075 மற்றும் 23921401 என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருந்து உண்டு, தடுப்பூசி இல்லை...

இந்த ப்ளூ காய்ச்சலிருந்து மக்களை காப்பதற்கான தடுப்பு ஊசி (வாக்சீன்) இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான முயற்சியில் பல நாட்டு மருந்து கம்பெனிகளும் இறங்கியுள்ளன. இதற்காக அவை பாதிக்கப்பட்டவர்களின் ரத்தங்களை கேட்டுள்ளனர்.

அதிலிருக்கும் வைரசை ஆராய்ந்து விரைவில் தடு்ப்பூசி தயாரிக்க முடியும் இது பெரிய விஷயமில்லை. எவ்வளவு சீக்கிரம் சாம்பிள் கிடைக்கிறதோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி தயாரிக்க முடியும் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய நிலையில் அவர்கள் மருந்து உற்பத்தியை ஆரம்பிக்க குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆகலாம் என தெரிகிறது.

உறுதி செய்தது ஸ்பெயின்:

இந் நிலையில் ஸ்பெயினில் பன்றி காய்ச்சல் பரவி இருப்பதை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில், தென் கிழக்கு பகுதியில் உள்ள அலமன்சா நகரில் இருக்கும் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் தான் அவர் மெக்சிகோவில் இருந்து காய்ச்சல் காரணமாக நாடு திரும்பியுள்ளார். அவருக்கு வயது 23. அவருக்கு சனிக்கிழமை இரவு முதல் மருத்துவமனையி்ல தனிப்பகுதியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

இது குறித்து ஐரோப்பிய யூனியனின் சுகாதார கமிஷ்னர் ஆன்ட்ருல்லா வசிலு கூறுகையில், இது தொடர்பாக நாளை 30ம் தேதி அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். கடைசியாக ஐரோப்பிய யூனியன் குறைந்த அளவே பன்றிகளை இறக்குமதி செய்துள்ளது. இதனால் யாரும் பயப்பட வேண்டாம்.

இந்த பன்றிகளும் ரஷ்யா மற்றும் கனடாவில் இருந்து தான் கொண்டு வரப்பட்டுள்ளன என்றார்.

உலகம் முழுவதும் பரவி வரும் பன்றி காய்ச்சல் பீதியால் ரஷ்யாவும் தங்கள் நாட்டுக்கு வரும் விமான பயணிகளை சோதனையிட முடிவு செய்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X