For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகளின் ஆட்டம் முடிந்து விட்டது-கூறுகிறார் ப.சி

By Staff
Google Oneindia Tamil News

Chidambaram
டெல்லி: ராணுவ பலத்தால் இலங்கை இனப்பிரச்சினையில் வெற்றி காணலாம். ஆனால் தீர்வு காண முடியாது. தற்போதைய சூழ்நிலையில், விடுதலைப் புலிகளின் விளையாட்டு முடிந்து விட்டது என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

இதுகுறித்து ப.சிதம்பரம் அளித்துள்ல ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது..

நமது நாட்டின் கஷ்டமான காலங்கள் முடிந்து விட்டன. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நமது படைகள் மிகுந்த தயார் நிலையில் உள்ளன. அங்கு பாதுகாப்பு அதிகபட்ச அளவில் வைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ஆங்காங்கு சில வன்முறைகள் நிகழலாம். ஆனால் குஜராத், பஞ்சாப், ராஜஸ்தானில் அதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாது என நம்பிக்கையாக கூறுகிறேன்.

இலங்கைப் பிரச்சினையால் அங்கிருந்து பெருமளவில் அகதிகள் வருவார்கள் என நான் நினைக்கவில்லை. சிலர் வரலாம். அதை அரசு சமாளிக்கும். நமது கவலைகள் எல்லாம் சண்டை நிற்க வேண்டும் என்பதுதான்.

மனிதக் கேடயமாக அப்பாவிகளை பயன்படுத்துவதை விடுதலைப் புலிகள் நிறுத்த வேண்டும். விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக அப்பாவி மக்களை இலங்கை அரசு பாடுபடுத்தக் கூடாது. இந்த கவலைகள் உரிய முறையில் இலங்கைக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த கவலைகள் குறித்து இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் உலக சமுதாயம் தொடர்ந்து கூறி வந்தன. ஆனால் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட மறுத்து வந்தனர். இலங்கையும், தாக்குதலை நிறுத்த முடியாது என பிடிவாதம் பிடித்து வந்தது.

இரண்டு பேரிலும் அதிக தவறை செய்தது இலங்கை அரசுதான். ராணுவத்தைக் கொண்டு வெற்றி காணலாம் என அவர்கள் முடிவு செய்து விட்டனர். ராணுவ ரீதியாக தீர்வு காணலாம். ஆனால் நிரந்தர வெற்றி பெற முடியாது. ராணுவ நடவடிக்கையின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் ஆட்டம் முடிந்து விட்டது.

பிரபாகரன் உயிருடன் பிடிபடுவாரா இல்லையா என்பது குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. மனித உயிர்கள் இழப்பை நாம் அனுமதிக்க முடியாது. அதற்கு மேல் இப்போதைக்கு நாம் எண்ண வேண்டிய அவசியம் இல்லை.

பிரபாகரனுக்கு நாங்கள் கெடுதல் நினைக்க விரும்பவில்லை. ஆனால் அவர் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என விரும்புகிறோம்.

இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவிகளைச் செய்கிறது என்று சிலர் கூறுகின்றனர். அது தவறு. அப்படி எதையும் இந்தியா செய்யவில்லை.

இலங்கை பெற்றுள்ள பெருமளவிலான ஆயுதங்கள் சீனாவிலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் வந்தவை ஆகும்.

ரேடார்களைக் கொடுத்தோம்...

சில காலங்களுக்கு முன்பு நாம் சில வகை பாதுகாப்பு ரேடார் கருவிகளைக் கொடுத்தோம். அது வான்வெளியில் பறக்கும் அனாமதேய விமானங்களைக் கண்டறிய உதவக் கூடியவை. ஆனால் அதன் பிறகு இலங்கைக்கு ஆயுதங்கள் எதையும் இந்தியா வழங்கவில்லை.

இதுதொடர்பாக சில கட்சிகள் தேவையில்லாமல் சர்ச்சையைக் கிளப்பி வருகின்றன. அதில் உண்மை இல்லை.

மத்தியில் ஆட்சியில் உள்ள மத்திய அரசுகளில் தமிழகத்தைச் சேர்ந்த திமுக, அதிமுக, பாமக, மதிமுக ஆகியவை தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. எனவே அவர்களுக்குத் தெரியாமல், எந்த மத்திய அரசும் இலங்கைக்கு உதவ முடியாது.

பிரபாகரன் சரணடைய முன்வர வேண்டும். அவ்வாறு அவர் செய்தால் என்ன செய்யலாம் என்பது குறித்து இலங்கை அரசுடன் இந்தியா பேசி முடிவெடுக்கும். விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தக் கூட வாய்ப்புகள் உள்ளன.

பிரபாகரனை நாடு கடத்திக் கொண்டு வருவது என்பது இப்போது முக்கியமான பிரச்சினை அல்ல. உடனடி பிரச்சினை சண்டை நிற்க வேண்டும் என்பதுதான். அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும், தீர்வுகள் காணப்பட வேண்டும் என்பதுதான் அவசரத் தேவை.

உள்துறை அமைச்சராக 150 நாட்களை முடித்துள்ளேன். நமது புலனாய்வு மற்றும் உளவு அமைப்பு போன்றவை சிறந்த கட்டமைப்புடன் உள்ளன. அனைத்து மாநிலங்களும் நல்ல கட்டமைப்புடன், சிறந்த ஆயுத பலத்துடன் வைத்திருக்க முடிந்துள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் தீவிரவாத தடுப்புப் பிரிவுகளை ஏற்படுத்த உதவியுள்ளோம். நான்கு மாதங்களில் இவற்றை முடித்துள்ளது சாதனையான விஷயம்தான்.

நான் உள்துறை அமைச்சர் பதவியில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூற முடியாது. அப்படி இருக்கவும் முடியாது. காரணம், இது வன்முறை மற்றும் படுகொலைகளை கையாளும் துறை. அப்படிப்பட்ட வேலையில் இருக்கும் யாருமே மகிழ்ச்சியுடன் இருக்க முடியாது. என்னால் முடிந்ததை சிறப்பாக செய்கிறேன்.

மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் அமரும் என ஒரு காங்கிரஸ்காரனாக நான் நம்புகிறேன். அதற்கு மேல் என்னால் எதையும் எண்ணிப் பார்க்க முடியாது என்றார் சிதம்பரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X