For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்தை மறைத்துள்ளார் தா.பாண்டியன் - அதிமுக வேட்பாளர் மீதும் திமுக புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: வட சென்னை இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் தா.பாண்டியனும், திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வேணுகோபாலும் தங்களது சொத்து விவரங்களை முழுமையாக தெரிவிக்காமல் வேட்பு மனுவில் மறைத்து விட்டதாக முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான ஆதாரங்களையும் அவர் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர். அவருடன் திமுக வக்கீல் ஜோதி, அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

முதல்வர் கருணாநிதி கூறுகையில், வட சென்னை தொகுதியைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சி கூட்டணியின் சூத்திரதாரி தா.பாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்ததில் நடைபெற்றுள்ள தவறுகளை மறைத்துள்ள மோசடிகளைப்பற்றி ஆதாரப்பூர்வமாக வெளியிடுகிறேன்.

இதை நான் வெளியிடுவதின் மூலம் அவர் சார்ந்திருக்கின்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் கம்யூனிஸ்ட் கட்சியில் இதுபோன்ற தவறுகளை அனுமதிக்க மாட்டார்கள்.

பத்திரப் பதிவு அலுவலகத்தில் இந்த நிலம் வாங்கப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட பத்திரத்தில் நிலத்தை விற்ற அம்மையாரின் புகைப்படம், நிலத்தை வாங்கிய தா.பாண்டியனின் புகைப்படம் ஆகியவை அவர்களின் கையெழுத்துக்களோடு உள்ளது. (பத்திரத்தின் நகலை நிருபர்களுக்கு வழங்கினார்) அந்த நிலத்தை தான் வாங்கவே இல்லை என்று தா.பாண்டியன் மறுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. அது உண்மையல்ல. மறைக்கப்பட்ட உண்மை என்றார்.

பின்னர் வழக்கறிஞர் ஜோதி கூறுகையில், தா.பாண்டியன் கூறியுள்ள விவரத்தில், பொதுவாக சுருக்கமாக ஒரே வரியில் பட்டா எண் 744 - 5 ஏக்கர் நிலம் என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. வீட்டைப் பற்றி எவ்வளவு விஸ்தீரணம் என்று சொல்லவில்லை.

சுருக்கமாக அண்ணா நகரில் ஒரு வீடு - ரூ.40 லட்சம் என்று மட்டும் சொல்லியிருக்கிறார். அண்ணா நகரில் ஒரு வீட்டின் மதிப்பு எவ்வளவு என்று உங்களுக்கே தெரியும்.

அவருடைய வீடு ஒன்றரை கிரவுண்ட். நிலங்களைப் பொறுத்தவரை பட்டா எண். 744 என்று சொன்னாரே தவிர சர்வே எண்கள் குறிப்பிடவில்லை. பட்டா எண். 744க்கான நிலத்தின் விஸ்தீரணம் 2.32 ஏக்கர். அதனுடைய புல எண்கள், உட்பிரிவுகள் வேறுவேறாக இருக்கின்றன.

11-2-2008ல் ஒரு சொத்தை வாங்கியிருக்கிறார். அது சமீபத்தில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார். இந்தப் பத்திரத்தில் தா.பாண்டியன் தன்னுடைய புகைப்படத்தை ஒட்டியிருக்கிறார்.

இந்த விவரங்களை நான் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து ஆட்சேபனை தெரிவித்தேன். அப்போது தா.பாண்டியன் கொடுத்த பதிலில் - வேட்பு மனுவில் நான் என்ன குறிப்பிட்டிருக்கிறேனோ அதைத் தவிர வேறு எந்தச் சொத்தும் புதிதாக இல்லை என்று சொல்கிறார். முழுக்க முழுக்க இது சரியல்ல. அவர் வாங்கிய சொத்தை அடியோடு மறைத்திருக்கிறார். அவர் கையெழுத்தே தன்னுடையது இல்லை, நான் எதுவும் வாங்கவில்லை என்று சொல்கிறார். ஆனால் பல இடங்களிலே அவர் கையெழுத்திட்டிருக்கிறார் என்றார்.

மீண்டும் கருணாநிதி பேசுகையில், அண்ணா அறிவாலயத்திலே நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டு அவர் போட்டுள்ள கையெழுத்தும், இந்தப் பத்திரத்திலே உள்ள கையெழுத்தும் ஒன்றாகத்தான் இருக்கிறது என்றார்.

மேலும், திமுகவின் ஆட்சேபனையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது தவறு என்றும் முதல்வர் குற்றம் சாட்டினார்.

தேர்தல் கமிஷனில் நியமிக்கப்பட்டு இருந்த ஒரு அதிகாரி தவறு செய்கிற அளவிற்கு நடந்து கொண்டிருக்கிறார் என்றால், நரேஷ் குப்தாவுடைய கண்டிப்பும், தலைமைத் தேர்தல் கமிஷனரின் கண்டிப்பும் என்னவாயிற்று என்பது கேள்விக் குறியாக உள்ளது என்றும் கூறிய கருணாநிதி, அடுத்த கட்டமாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை குறித்து பின்னர் தெரிவிப்போம் என்றார்.

மேலும், தேர்தல் ஆணையம் குறித்து கருணாநிதி கூறுகையில், அந்தந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி தேர்தல் ஆணையம் - நான் தலைமைத் தேர்தல் ஆணையங்களைச் சொல்லவில்லை - அதிலே உள்ள தேர்தல் அதிகாரிகள் சிலர் இப்படி நடந்து கொள்கிறார்கள். அதிலே தான் சில நாட்களுக்கு முன்பு நரேஷ் குப்தா கூட, அதிகாரிகளில் சிலர் தவறு செய்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அத்தகைய நல்ல தீர்ப்புகள் வழங்கக்கூடிய நடுநிலையிலே உள்ள நரேஷ் குப்தாவிடம் நான் நிரம்ப எதிர்பார்க்கிறேன். அவருடைய கையை மீறிப் போவதாக இருந்தால், அதற்கு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தி.மு.க. எடுக்கும் என்றார்.

அதிமுக வேட்பாளரும் சொத்தை மறைத்து விட்டார்..

பின்னர் அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசுகையில், திருவள்ளூரில் அ.தி.மு.க. வேட்பாளர் வேணுகோபால் மீது ஒரு ஆட்சேபனை மனு தேர்தல் அதிகாரியிடம் சொல்லப்பட்டு அது நிராகரிக்கப்பட்டு விட்டது.

அவர் கதவு எண். 49, கட்டபொம்மன் தெரு, ஆர்.வி. நகர், சென்னை 118, - என்று ஒரு வீடு வாங்கியிருக்கிறார். அந்த வீடு 2001லிருந்து 2009ம் ஆண்டு வரையில் மாநகராட்சி சொத்து வரி கூட கட்டவில்லை என்ற விவரங்கள் எல்லாம் கொடுத்திருக்கிறார்.

இருந்தாலும் அந்த ஆட்சேபனை மனுவையும் அங்கேயுள்ள தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டார். இது சம்மந்தமாக நாகரத்தினம் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

அந்த வேட்பாளர் ஏற்கனவே ஒரு தேர்தலில் போட்டியிட்டு - அந்தத் தேர்தல் செலவு பற்றிய கணக்குகளை தேர்தல் ஆணையத்திற்கு தாக்கல் செய்ய வில்லை. தேர்தல் கமிஷனின் விதி முறைப்படி ஒருவர் தேர்தலிலே நின்று ஒரு மாதத்திற்குள் தேர்தல் கணக்குகளைக் கொடுக்கவில்லை என்றால், அவர்கள் 6 ஆண்டு காலத்திற்கு தேர்தலிலே நிற்கக் கூடாது என்று சட்டமே இருக்கிறது. இதையெல்லாம் பரிசீலிக்காமல் அவருடைய மனு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதுகுறித்து வழக்கு தொடுத்திருக்கிறார்கள் என்றார் வீராசாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X