For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

100 கி.மீ வேகத்தில் பாய்ந்த ரயில்- விபத்து குறித்த பரபரப்பு தகவல்கள்

By Staff
Google Oneindia Tamil News

Train Accident in Tamil Nadu
சென்னை: சென்னையில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரயில் விபத்து குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 மர்ம நபர்கள் ரயிலை இயக்கியதாக கூறப்படுகிறது. 100 கி.மீ வேகத்தில் அந்த ரயிலை மர்ம நபர்கள் இயக்கியுள்ளனர். மின்சார ரயிலை இயக்கத் தெரிந்த நபர்களாக அவர்கள் இருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலை கடத்திய இரு நபர்கள் படு வேகமாக ஓட்டிச் சென்றனர்.

நேற்று காலை 5.15 மணிக்கு அந்த ரயில் திருவள்ளூருக்குச் செல்ல இருந்தது. ரயிலின் டிரைவர்கள் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், 4.50 மணிக்கு திடீரென ரயில் நகரத் தொடங்கியது. அப்போது ரயிலில் 20 பயணிகள் இருந்தனர்.

ரயில் நகரத் தொடங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர்கள் உடனடியாக பேசின்பிரிட்ஜ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

படு வேகமாக சென்ற அந்த ரயில் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த டேங்கர் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்து விட்டனர். இந்த விபத்து குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்தில் காயம் அடைந்தவர்களில் வில்லிவாக்கம் நேரு நகரை சேர்ந்த ஜெயவேலுவும் ஒருவர் ஆவார். மீன் வியாபாரியான இவர் நேற்று அதிகாலை சென்டிரலில் இருந்து வில்லிவாக்கம் செல்வதற்காக மின்சார ரெயிலில் புறப்பட்டார்.

விபத்து குறித்து ஜெயவேல் கூறுகையில்,

விபத்திற்குள்ளான ரயில் என்ஜினில் இருந்து 3-வது பெட்டியில் நான் இருந்தேன். வழக்கத்தை விட குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே, ரெயில் புறப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே வேகம் எடுத்த வண்டி, எந்த சிக்னலிலும் நிற்காமல் சென்றது. ரெயிலின் வேகம் எப்படியும் 100 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும்.

பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையத்திலும் கூட அந்த ரெயில் நிற்கவில்லை. வழக்கமாக, திருவள்ளூர் மார்க்கத்தில் செல்லும் பாதையில் அந்த ரெயில் போகவில்லை. மாறாக, அங்கிருந்து ரெயில்கள் வரும் பாதையில் சென்றது.

நான் என்னவோ, ஏதோவென்று வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்தேன். அப்போதுதான் எதிரே வந்த ரயிலுடன் பலத்த சப்தத்துடன் மோதி தீப்பிடித்தது.

உடனே நான் கீழே குதித்து தப்பினேன். அப்போது உயர் அழுத்த கேபிள்களும் அறுந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் தப்பினேன் என்றார் பீதி விலகாமல்.

அதே ரயிலில் பயணம் செய்த வேறு இரண்டு பயணிகள் கூறுகையில், ரயிலில் ஏறிய சில நிமிடங்களிலேயே புறப்பட்டது. இன்னும் அதிக நேரம் இருக்கிறதே, அதற்குள் எடுத்து விட்டார்களே என்று நினைப்பதற்குள் ரயில் வழக்கத்தை விட அதிவேகமாக சென்றது.

சரக்கு ரயிலுடன் மோதிய போது நாங்கள் இருந்த பெட்டி குலுங்கியது. படுத்திருந்தவர்களில் பலர் இருக்கையில் இருந்து கீழே விழுந்தனர். எங்களுக்கும் லேசாக அடிபட்டது என்றார்.

கணவர் மரணம் - மனைவி கதறல்..

இந்த விபத்தில் இறந்தவர்களில் ஒருவர் அந்தோணி ராஜ். இவருக்கு மனைவி, இரு குழந்தைள் உள்ளனர்.

39 வயதாகும் இவர் வில்லிவாக்கம், ராஜமங்கலம் 5வது தெருவில் வசித்து வந்தார். மனைவி பெயர் மோனிகா. மைக்கேல், ரிச்சர்ட் என இரு மகன்கள் உள்ளனர். கால் சென்டரில் பணியாற்றி வந்தார் அந்தோணி ராஜ்.

என்ஜின் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் இவர் பயணித்து, உயிரிழந்தார். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர்தான் அந்தோணி ராஜின் உடல் மீட்கப்பட்டது.

விபத்து குறித்து அறிந்ததும் அந்தோணி ராஜின் சகோதரி கார்மல் அங்கு விரைந்து வந்தார். தனது தம்பியும் இதில் சிக்கியிருக்கலாமோ என்ற பயத்தில் அவர் வந்தார். அவர் அஞ்சியபடியே அந்தோணி ராஜின் உடல் கிடைத்ததும் கதறித் துடித்தார்.

அந்தோணியின் மறைவுச் செய்தியைக் கேட்டு அவரது மனைவி மோனிகா, தாயார் மேரி, தங்கை மரியான் ஆகியோர் கூறுகையில்,

அந்தோணியின் தந்தை சிறு வயதிலேயே இறந்துவிட்டார். அவர் மனைவியையும் குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதே போல அந்தோணி ராஜூம் அப்படியே எங்களை விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

எப்போதும் சிரித்த முகத்துடன் பேசுவார். தனது குழந்தைகளை பாசமாக வைத்திருப்பார். யாருக்கும் தீங்கு செய்ய நினைக்க கூட மாட்டார். அடிக்கடி அவருடைய குழந்தைகளை அவரே குளிப்பாட்டி ஆடைகளை அணிவித்து பவுடர் போட்டு விடுவார்.

தினமும் இரவில் வேலைக்கு சென்றுவிட்டு அதிகாலை சென்ட்ரல் ரெயில்நிலையத்தில் இருந்து 5 மணிக்கு புறப்படும் ரெயிலில் வருவார். அதேபோல வந்துள்ளார்.

காலை 7 மணிக்கு அவருடைய தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. உடனே செல்போனில் சார்ஜ் இல்லை என்று நினைத்துக் கொண்டோம். அடிக்கடி போனில் பேசுவார். அப்படிப்பட்டவர் ஏன் இப்படி சுவிட்ச் ஆப் செய்துள்ளார் என்று மனதில் லேசாக கவலை படர்ந்தது.

9 மணிவரை வராததால் அவர் வேலைபார்த்த அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் வீட்டுக்கு புறப்பட்டு போய் விட்டார் என்று கூறிவிட்டனர். அதனால் பதறினோம்.

அப்போதுதான் ரயில் விபத்து குறித்து அறிந்தோம். இருந்தாலும் இறப்பார் என நினைக்கவில்லை என்றார்.

யார் அந்த 2 மர்ம நபர்கள்..

ரயிலை ஓட்டிச் சென்றது இருவர் எனத் தெரிய வந்துள்ளது. இருவரும் மின்சார ரயிலை நன்கு இயக்கத் தெரிந்தவர்களாகவும் உள்ளனர்.

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் என்ஜின் டிரைவரும், உதவி டிரைவரும் இருப்பார்கள். என்ஜின் டிரைவருக்கு திடீரென மாரடைப்பு போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உதவி டிரைவர் என்ஜினை இயக்கி ரயிலை நிறுத்துவார்.

ஆனால், பயணிகள் மின்சார ரயிலில் ஒரேயொரு டிரைவர்தான் இருப்பார். எனவே, மின்சார ரெயில் டிரைவர்களுக்கு ஏதாவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால் தானாகவே ரெயில் நிற்கும் வகையில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

அது என்னவென்றால் மின்சார ரயிலில் உள்ள சுவிட்ச்சை கீ்ழ் நோக்கி அழுத்தபடியே இருந்தால்தான் தொடர்ந்து ரயில் ஓடும். கையை எடுத்து விட்டால், மெதுவாகி நின்று விடும்.

நேற்று அதிகாலை இரு மர்ம நபர்கள் ரயிலை எடுத்துச் சென்றதைத் தொடர்ந்து நான்கு நிமிடங்களில் மின்சாரத் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக பேசின்பிரிட்ஜ் நிலையத்தைத் தாண்டி ரயில் போனபோது வேகம் குறைந்து விட்டது. இருப்பினும் கூட விபத்து ஏற்பட்டு விட்டது.

ஒரு வேளை மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டிருக்காவிட்டால் ரயில் இன்னும் வேகமாக போய், சரக்கு ரயில் மீது மோதி, அதற்குப் பின்னால் வந்த பயணிகள் ரயில் மீதும் மோதி பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

ரயில்கள் நிறுத்தத்தால் பயணிகள் தவிப்பு

மின்சார ரயில் விபத்தால் சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்ப வேண்டிய பல ரயில்கள் திருவள்ளூரிலிருந்தும், அரக்கோணத்திலிருந்தும் கிளம்பின.

சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து பயணிகளை இந்த ஊர்களுக்கு கூட்டிச் செல்ல ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் போதிய வாகன வசதி இல்லாமல், ஆடு, மாடுகளைப் போல நெருக்கி அடித்து அழைத்துச் சென்றதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

பல்வேறு இடங்களிலிருந்து பஸ்கள் செல்லும் என ரயில்வே அறிவித்திருந்தது. ஆனால் சொன்னபடி பஸ்கள் ஏற்பாடு செய்யப்படவில்லை. அதற்கு மாறாக ஒரு பேருந்தில் 100 பயணிகள் வரை அடைத்துக் கொண்டு சென்றனர். பயணிகள் தவிர அவர்கள் வைத்திருந்த லக்கேஜ்களும் இருந்ததால் மூச்சுக் கூட விட முடியாத அளவுக்கு பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இவர்களில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்தவர்கள் தான் மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டனர். சொகுசாக போகலாம் என நினைத்துத்தான் ஏசி பெட்டிக்கு புக் செய்தோம். ஆனால் இப்போது ரயிலைப் பிடிக்க இப்படி ஆடு, மாடுகளைப் போல பஸ்சில் போக விட்டு விட்டார்களே என அவர்கள் புலம்பிக் கொண்டனர்.

ரயில்வே நிர்வாகம், எங்களுக்கு வசதி செய்து கொடுக்க முடியாவிட்டால், மீதமுள்ள தூரத்திற்கான கட்டணத்தை கையில் கொடுத்திருக்கலாம். நாங்கள் டாக்ஸி அல்லது ஆட்டோ பிடித்து வீடு போய் சேர்ந்திருப்போம்.

பஸ் வசதி செய்துள்ளோம் என்று பெருமையாகச் சொன்னார்கள். ஆனால், எங்களை ஆடு, மாடுகளை அடைப்பது போல பஸ்களில் அடைத்துக் கொண்டு வருவதற்கு, ஏதோ இமாலய சாதனை செய்துவிட்டதாக அறிவிப்பு வெளியிடுவது தேவைதானா? என்று பயணிகள் குமுறினர்.

மேலும், பல்வேறு ரயில் நிலையங்களில் பாதியிலேயே நிறுத்தப்பட்ட ரயில்களில் வந்த பயணிகளுக்கு குடிக்க தண்ணீர் கூட ஏற்பாடு செய்து தரவில்லை ரயில்வே நிர்வாகம்.

3 பேர் அடையாளம் தெரிந்தது

நேற்றைய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஜோசப் அந்தோணி ராஜ், நந்தனம் மோகன்ராஜ், ஏற்காடு ஆரோக்கியநாதன் ஆகியோரின் அடையாளம் தெரிந்துள்ளது.

இன்னொருவருக்கு 35 வயது இருக்கும். பிளாட்பாரத்தி்ல் இவரது உடல் நசுங்கிக் கிடந்தது. இவர் யார் என்பது தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X