'மலையைக் கொண்டு எலியைப் பிடித்தது போல்'!
சென்னை: தா.பாண்டியன் மீது முதல்வர் வேண்டுமென்றே அவதூறு கிளப்புகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், மலையைக் கொண்டு எலியைப் பிடித்தது போல், எங்களது கட்சியி்ன் மாநிலச் செயலாளரும் வட சென்னை வேட்பாளருமான தா.பாண்டியன் மீது முதல்வர் பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
அவற்றை அடியோடு மறுக்கிறோம். எதையும் மறைக்க வேண்டிய அவசியம் பாண்டியனுக்கு இல்லை. அவர் எதிர்க்கட்சி கூட்டணியின் சூத்திரதாரியாகவும் இருப்பதால், அரசியலுக்கு புறம்பாக முதல்வர் இந்த குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
பாண்டியனின் மனுவை தேர்தல் கமிஷன், விதிமுறைப்படி ஏற்றுக் கொண்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் தங்களுக்கு சாதகமாக செயல்படவில்லை என்பதால், அவர்களை அச்சுறுத்துவது போல் ஆளுங்கட்சி செயல்படக்கூடாது.
பாண்டியன் குறித்த குற்றச்சாட்டில் முதல்வர் குறிப்பிட்ட நிலம், பூர்வீக சொத்தில் பாகம் பிரிக்கப்பட்டதன் மூலம் வந்தது. பொதுவாக, நிலம் தங்களுக்குச் சொந்தமானது என்பதைக் காட்டபட்டாவைத்தான் குறிப்பிடுவர். விற்றால் தான் சர்வே எண்ணைக் குறிப்பிடுவர். முதல்வர் குறிப்பிட்ட இடத்தின் பட்டா எண்ணோடு வி.ஏ.ஓ. கொடுத்த சான்றிதழையும் மனுவோடு இணைத்துள்ளோம்.
சென்னை அண்ணா நகரில் உள்ள பாண்டியனின் வீடு, வீட்டு வசதி வாரியம் மூலம் ரூ.1.13 லட்சத்துக்கு வாங்கியது. கம்யூனிஸ்டுகள் அப்பழுக்கப்பற்றவர்கள். எதையும் மறைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
கம்யூனிஸ்ட் கட்சியை கண்ணியம், கட்டுப்பாடு கொண்ட கட்சி என்று சொன்ன முதல்வருக்கு நன்றி. பாண்டியன் விஷயத்தில் உண்மை என்னவென்று முதல்வரின் மனசாட்சிக்கு தெரியும் என்றார் ராஜா.
பேட்டியின்போது மூத்த தலைவர் நல்லகண்ணுவும் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications