For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரான்ஸ், பிரிட்டன் அமைச்சர்கள்-கோதபய வாக்குவாதம்

By Staff
Google Oneindia Tamil News

David Miliband and Bernard Kouchner
கொழும்பு: தாக்குதலை நிறுத்தக் கோரி இலங்கைக்கு பயணம் செய்த இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மில்லிபேண்ட், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பெர்னார்ட் கொவ்ச்நர் ஆகியோருக்கும் இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோதபய ராஜபக்சேவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.

நேற்று முன் தினம் அங்கு சென்ற இரு அமைச்சர்களும் உடனடியாக தமிழர் பகுதிகளில் தாக்குதலை நிறுத்துமாறும் அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட ஐ.நா.வுக்கு அனுமதி தருமாறும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்களது கோரிக்கையை இலங்கை ஏற்கவில்லை.

அப்போது அவர்களுக்கும் அதிபரின் தம்பியான கோதபய ராஜபக்சேவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.

2 லட்சம் தமிழர்களை மீட்டுவிட்டதாக கோதபய கூறியபோது இடைமறித்த மில்லிபேண்ட், பாதுகாப்பு வளையத்துக்குள் நீங்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறீர்கள். அதில் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர் என்றார்.

இதை மறுத்த கோதபய, புலிகள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு பேசாதீர்கள். உங்கள் நாட்டு பிபிசி செய்தி நிறுவனம் கூட புலிகளின் செல்லும் செய்திகளை அப்படியே வெளியிடுகிறது என்றார்.

இதனால் கடு்ப்பான மில்லிபேண்ட், நான் புலிகளோ அல்லது பிபிசியோ கேட்டுக் கொண்டு பேசுபவன் அல்ல. இது தொடர்பாக போர் முனையில் இருந்து பிரிட்டனுக்கு திட்டவட்டமாக செய்திகள் கிடைத்துள்ளன என்றார்.

இதற்கு கோதபய, நீ்ங்கள் புலிகளை நம்புவதா அல்லது பொறுப்பான ஒரு அரசை நம்புவதா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன் என்றார்.

அப்போது பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பெர்னார்ட், புலிகளிடம் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் தமிழர்களை மீட்க ஐ.நாவை ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டபோது பதில் சொல்ல முடியாத கோதபய, இது விஷயத்தில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார் கோபமாக.

நானே கூட அந்தப் பகுதிக்குச் செல்லத் தயார் என்று பெர்னார்ட் கூறியபோது, அது உங்களுக்குப் பாதுகாப்பானது அல்ல என்றார் கோதபய. அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை என பெர்னார்ட் கூறியபோது, உங்களையே கூட புலிகள் பணயக் கைதியாக பிடித்துக் வைத்துக் கொள்ளலாம் என்று கோதபய கூறியுள்ளார்.

அதைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை என்று பெர்னார்ட் கூறியபோது, உங்களை புலிகள் என்ன செய்வார்கள் என்பது குறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால், நீங்கள் அங்கு சென்றால் பிரபாகரனைப் பிடிக்கும் எங்களது முயற்சிகளில் பின்னடைவு ஏற்படுபம். இதனால் அங்கு செல்ல அனுமதிக்க முடியாது என கோதபய திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இதையடுத்து அதிபர் ராஜபக்சே அளித்த ஒரு பேட்டியில், எனக்கு ஐரோப்பிய நாடுகளின் போதனைகள் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X