For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேட்பாளர் பட்டியல்-தா.பாவை நீக்கக் கோரி திமுக மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை வேட்பாளர் தா.பாண்டியனின் பெயரை வேட்பாளர் பட்டியலில் நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து திமுக வேட்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு மனு செய்துள்ளார்.

சமீபத்தில் வட சென்னையில் வேட்புமனு தாக்கல் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா.பாண்டியன் தனது சொத்து விவரத்தை மறைத்துவிட்டதாக திமுக குற்றம்சாட்டியது. இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் வட சென்னை திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

இது குறித்து திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்:

வடசென்னை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் தா.பாண்டியன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யும்போது அத்துடன் இணைத்து தாக்கல் செய்ய வேண்டிய உறுதிமொழி பத்திரத்தில், தனது சொத்துக்கள் குறித்த முழுவிவரங்களையும் அளிக்காமல் பல்வேறு விவரங்களை மறைத்துள்ளதாக திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை தேர்தல் ஆணையரிடமும், தமிழ்நாடு தேர்தல் அதிகாரியிடமும், வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியிடமும் புகார் மனு அளித்துள்ளார்.

மேலும், உறுதிமொழி பத்திரத்தில் தா.பாண்டியனின் மனைவி ஓய்வு பெற்ற ஆசிரியை என்பதையோ, அவருக்கு சொந்தமான சொத்துகள் பற்றிய விவரங்கள் பற்றியோ எந்தவிதமான விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இது திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தந்த புகார் மனுவினை தள்ளுபடி செய்யப்பட்டு, தா.பாண்டியனுடைய வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், டி.கே.எஸ்.இளங்கோவன், தா.பாண்டியன் பெயரை வடசென்னை தொகுதி வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்காக புதியதாக மனு ஒன்றினை கடந்த 2ம் தேதி தலைமை தேர்தல் ஆணையருக்கும் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

அந்த புகார் மனுவில்:

ஒரு வேட்பாளரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும்போது, அவர் பொது வாழ்வில் தூய்மையினை கடைபிடிப்பவராகவும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியவராக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த மனு சமர்ப்பிக்கப்படுகிறது.

வேட்பாளர் பட்டியலில் இருந்து தா.பாண்டியன் பெயரை நீக்கம் செய்ய போதுமான சட்டவிதிகள் உள்ளது. சட்டவிதிகளை மீறி அவர் போட்டியிடுவதால் அவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளராக கருத வேண்டும்.

வேட்பாளரின் தகுதி இழப்பிற்கான அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்டு ஒருவரை தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதா அல்லது அனுமதிக்க வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். தேர்தல் சம்பந்தமாக எழும் அனைத்து பிரச்சினைகளையும் தேர்தலுக்குப்பின் ஓர் தேர்தல் வழக்காகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கருதக்கூடாது.

மனுவினை நிராகரிக்க வேண்டாம்...

ஒருவேளை அந்த வேட்பாளர் வெற்றி பெற்றால், வாக்காளர்களோ அல்லது போட்டி வேட்பாளர்களோ மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, தீர்வுகாண வேண்டும் என்ற அடிப்படையில் இம்மனுவினை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிடக்கூடாது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளின் அடிப்படையிலும், இம்மனுவில் குறிப்பிட்டுள்ள காரணங்களின் அடிப்படையிலும் மேற்குறிப்பிட்டுள்ள வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

ஒரு வேட்பாளருடைய வேட்புமனு தவறாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது என்ற காரணத்தினாலேயே அவருக்கு எந்த சலுகையும் அளிக்கப்படக் கூடாது. தேர்தல் ஆணையம் அவ்வாறான நிலைப்பாட்டினை எடுக்குமானால், அது உச்சநீதி மன்ற்த்தின் ஆணையை மீறுபவர்களை அங்கீகரிப்பது போலாகிவிடும்.

ஒரு வேட்பாளரின் நடத்தையை பொறுத்தும் அந்த வேட்பாளரை, வேட்புமனு தாக்கல் செய்த தேதியில் இருந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி வரையில் உள்ள இடைப்பட்ட காலத்திலும் கூட அவரை தகுதி இழப்பு செய்யலாம்.

சில காரணங்களுக்காக அவரை போட்டியில் இருந்து விலக்கிய வேட்பாளர் என்றும் தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என்ற காரணத்தின் அடிப்படையில் தா.பாண்டியன் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக இம்மனு சமர்ப்பிக்கப்படுகிறது.

தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கையேட்டில் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை மறைப்பவர்களுக்கு ஆதரவாக கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகள் உச்சநீதி மன்றத்தின் 2 தீர்ப்புகளுக்கும் ஒத்து வராத வகையில் உள்ளது.

மே 13ம் தேதி அன்று தான் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே, அதற்கு முன்னர் இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக ஒரு ஆழ்ந்த விசாரணையினை நடத்தி, வடசென்னை வேட்பாளர் தா.பாண்டியனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாக ஆற்காடு வீராசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தினரை தாக்கியோரை விடுவிக்க கோரும் தா.பா.:

இதற்கிடையே தா.பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில்,

இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுத்து, ஈழத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு இந்திய அரசு தான் காரணம் என்ற கோபம் தமிழகம் முழுவதும் பெருக்கெடுத்து நிற்கிறது. இதன் வெளிப்பாடாகத்தான் கோவைக்கு அருகில் ராணுவ லாரிகளை மக்கள் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள்.

இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து கொல்லப்படுவதால் எழுந்த கோபம் தான் இது என்பதை, இந்த நேரத்தில் அரசாங்கங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மாறாக தொடர்புடையவர்கள் என்று கூறி கைது செய்தல், கடுமையான அடக்குமுறைகள் ஆகியவற்றை கண்டிக்கிறோம்.

கோவையில் பெரியார் திராவிடர் கழகத்தின் முன்னணித்தலைவரான ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X