For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குவாத்ரோச்சியைவிட தமிழர்கள் கேவலமா?-ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
வேலூர்: ஒட்டாவியோ குவாத்ரோச்சியைவிட இலங்கைத் தமிழர்கள் கேவலமாகப் போய்விட்டார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

இந்த கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில், பிற்பகல் நேரத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறதே, உங்களையெல்லாம் வெயிலில் நிற்க வைத்து சிரமப்படுத்த வேண்டி உள்ளதே என்று நான் எண்ணி வேதனை அடைந்தேன். வருத்தப்பட்டு கொண்டிருந்தேன். ஆனால் இங்கே பார்த்தால், சூரியனே மறைந்து நம்முடன் ஒத்துழைத்து கொண்டிருக்கிறது. இங்கே வெயிலின் வாட்டம் உங்களுக்கு தெரியாதபடி சூரியன் ஓடி ஒளிந்து மறைந்துகொண்டது. அதைப்போலவே சூரிய கட்சியின் தலைவர், உதயசூரியன் கட்சியின் தலைவர் மக்களை சந்திக்க பயந்து ஓடி ஒளிந்து கொண்டார்.

மத்தியில் நடைபெறும் காங்கிரஸ் கூட்டணி அரசு, இந்திய நாட்டின் மரபுக்கும், கண்ணியத்திற்கும் எதிரான வெளியுறவு கொள்கையை பின்பற்றியதால், உலக அரங்கில் நம்மைப் போன்ற ஒரு வலிமையான தேசத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய மரியாதை கிடைக்காமல் போய்விட்டது.

அதிலும், அமெரிக்கா சார்ந்த வாழ்க்கை முறையை நம் அனைவர் மீதும் திணிக்க காங்கிரஸ் கூட்டணி அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. இது, எதிர்கால இந்தியாவின் இறையாண்மைக்கு, தனித்தன்மைக்கு, பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்று நான் கவலைப்படுகிறேன்.

அமெரிக்காவிற்கு சென்ற பிரதமர் மன்மோகன்சிங், அந்த நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ்சை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா?. இந்தியாவில் உள்ள எல்லோரும் உங்களை நேசிக்கிறார்கள் என்றார்.

எந்த ஜார்ஜ் புஷ்?, ஈராக் மீதும், ஆப்கானிஸ்தான் மீதும் படையெடுத்துச் சென்றாரே, அந்த ஜார்ஜ் புஷ்சை பார்த்து மன்மோகன் சிங் இந்தியா உங்களை நேசிக்கிறது என்று சொன்னார். அந்த அளவிற்கு நம்முடைய கம்பீரத்தை அடகு வைத்தார்கள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசை நடத்துபவர்கள்.

அமெரிக்காவுடன் அபரிமிதமான நெருக்கத்தை மன்மோகன்சிங் அரசு காட்டியதன் காரணமாக, ஈரானுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு சீர்குலைந்தது. வெளியுறவு கொள்கை என்றாலே, அது அமெரிக்காவுடனான அணுசக்தி கொள்கை தான் என்று, மன்மோகன்சிங் அரசு செயல்பட்டதன் காரணமாக,

நம் சகோதர, சகோதரிகளான, சொந்த உறவான, தமிழர்கள் இலங்கையிலும், மற்ற நாடுகளிலும் துன்பப்படும் போது, அவர்களின் நலன் குறித்த ஒரு வெளியுறவு கொள்கையை நம்மால் உருவாக்க முடியாமல் போயிற்று.

இப்படிப்பட்டவர்கள், தொடர்ந்து ஆட்சியில் இருந்தால், அமெரிக்காவின் அடிமையான, இன்னும் ஒரு, "பனானா குடியரசு'' என்று இகழப்படும் நிலைக்கு நம் நாடு தள்ளப்பட்டுவிடும் என்பதை மறவாதீர்கள்.

சர்வதேச அளவில், இந்தியாவின் மதிப்பை குறைத்து, நம் நாட்டின் பெருமையை சீர்குலைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், அதற்கு துணை போகும் திமுகவுக்கும் வாக்களிக்காதீர்கள்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பாலாற்றின் நிலைமை என்ன? வேலூர் உண்மையிலேயே சஹாராவாக மாறி கொண்டிருக்கிறது. இதற்கு ஆந்திர அரசு மட்டுமல்ல, திமுக அரசும் ஒரு முக்கிய காரணம். அந்த அளவிற்கு திமுகவினரால் பாலாற்றில் இருந்து மணல், கொள்ளை அடிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பு அணை கட்டுவதை நிறுத்திட, பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்திட, பொன்னை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணைகள் கட்டும் ஆந்திர அரசின் திட்டத்தை தடுத்திட, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கையில் தொடர்ந்து குண்டு சத்தம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.

பிரதமர் மன்மோகன் சிங்கோ இலங்கை தமிழர்கள் செத்து மடிவது குறித்து வாய் திறக்க மாட்டேன் என்கிறார். ஆனால், சோனியா காந்தியின் உறவினர் ஒட்டாவியோ குவாத்ரோச்சி குறித்து, ஓர் அற்புதமான கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் கமிஷன் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, தேடுவோர் பட்டியலில் இருந்த குவாத்ரோச்சியின் பெயர் நீக்கப்பட்டது. இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பாரத பிரதமர் மன்மோகன்சிங், மற்றவரை துன்புறுத்துவது நல்லதல்ல' என்று பதிலளித்து இருக்கிறார்.

அப்படி என்றால், இலங்கை அரசு, இலங்கை தமிழர்களை தினமும் கொன்று குவிக்கிறதே!. இதைத் துன்புறுத்தல் இல்லை என்கிறாரா பிரதமர்?

இலங்கை தமிழர்கள் என்ன இத்தாலிக்காரர்களா? சோனியா காந்தியின் உறவினர்களா? தமிழர்கள் தானே என்ற எகத்தாளம் தான்!.

தற்போதுள்ள சூழ்நிலையில், இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஒரே வழி, தனி ஈழம் அமைப்பது தான். இலங்கையில் தனி ஈழம் அமைக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் வெற்றியை தாருங்கள் என்றார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X