For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

34வது ஆண்டில் நுழையும் விடுதலை புலிகள் இயக்கம்

By Staff
Google Oneindia Tamil News

LTTE Flag
கொழும்பு: இதுவரை இல்லாத அளவிலான மிகப் பெரிய சிக்கலுக்கு மத்தியில் விடுதலைப் புலிகள் இயக்கம் 34வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.

உலகில் தோன்றிய போராளி இயக்கங்களுக்கு மத்தியில் தனித்துவத்துடன் இருப்பது விடுதலைப் புலிகள் இயக்கம். வேறு எந்த போராளி இயக்கத்திடமும் இல்லாத அளவுக்கு சகல படை பலத்துடன் திகழ்ந்தவர்கள் புலிகள்.

கடற்படை, விமானப்படை, தற்கொலைப் படை, மகளிர் படை என பலவிதமான படைப் பிரிவுகளுடன் ஒரு ராணுவத்தைப் போன்று செயல்பட்டு வந்தவர்கள் விடுதலைப் புலிகள். உலகில் வேறு எந்த அமைப்பிடமும் இப்படிப்பட்ட படை பலம் இருந்ததில்லை.

1972ம் ஆண்டு தமிழ் புதிய புலிகள் என்ற அமைப்பை உருவாக்கினார் பிரபாகரன். பெரும்பான்மைச் சிங்களர்களின் ஆதிக்க போக்கை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் அது.

1975ம் ஆண்டு யாழ்ப்பாணம் நகர மேயர் ஆல்பிரட் துரையப்பாவை நேருக்கு நேராக நின்று சுட்டுக் கொன்றார் பிரபாகரன். இதுதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் அரசியல் கொலை.

பொன்னாலையில் உள்ள இந்துக் கோவிலுக்குள் நுழைய முயன்றபோது மேயர் ஆல்பிரட் துரையப்பாவை பிரபாகரன் சுட்டுக் கொன்றார்.

யாழ் வளைகுடாவில் எழுந்த தமிழ் தேசிய உணர்வுகளை முறியடிக்க முயன்றார், சிங்கள கட்சியான இலங்கை சுதந்திரா கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற காரணத்திற்காக துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதன் பின்னர் விடுதலைப் புலிகள் வேகமாக வளர ஆரம்பித்தனர். 1976ம் ஆண்டு மே 5ம் தேதி தனது அமைப்பின் பெயரை தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.இ.) என மாற்றினார் பிரபாகரன்.

1976ம் ஆண்டு தொடங்கிய புலிகளின் வேக நடை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்தது. மிகப் பெரிய போராளி இயக்கமாக மாறியது. தங்களது கொரில்லா முறைத் தாக்குதலால் இலங்கைப் படைகளையும், அரசையும் திணறடித்து, சிதறடித்தனர் புலிகள்.

இலங்கை அரசியல் தலைவர்கள் கொழும்பை விட்டு வெளியேறவே முடியாத அளவுக்கு நிலைமை போனது.

புலிகளுக்கு கடந்த காலங்களில் இந்திய அரசில் பங்கேற்று வந்த பல்வேறு தலைவர்களும் ஆதரவு அளித்துள்ளனர். நிதியுதவியும், ஆயுத உதவிகளும், பயிற்சி உதவிகளும் புலிகளுக்குத் தாராளமாக கிடைத்தன. ஏராளமான வெளிநாடுகளிலிருந்தும் புலிகளுக்கு நிதியும், ஆயுதமும், பயிற்சிகளும் தடையின்றி கிடைத்தன.

புலிகளின் சர்வதேசப் பிரிவு அலுவலகங்கள் லண்டன், பாரீஸில் இருந்தன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேருபவர்களுக்கு மிகக் கடுமையான ராணுவப் பயிற்சி அளிக்கப்படும். தேர்ந்த ராணுவ வீரருக்குரிய தரமான பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

பயிற்சி முடித்து வெளியே வரும் ஒவ்வொரு வீரர், வீராங்கனைக்கும் கையில் சயனைடு குப்பி தரப்படும். அதை கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டும். எதிரிகளிடம் சிக்கினால் உடனடியாக குப்பியைக் கடித்து உயிர் துறப்பார்கள் புலிகள்.

விடுதலைப் புலிகளிடம் சகலவிதமான ஆயுதங்களும் இருந்தன. பீரங்கிப் படை, நிலத்திலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள், ராக்கெட் லாஞ்சர்கள் என பக்கா ராணுவ பலத்துடன் திகழ்ந்தார்கள் புலிகள்.

ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் தவிர வேறு சில போராளி அமைப்புகளும் இருந்தன. தமிழ் ஈழ விடுதலைக் கழகம் (டெலோ), ஈழம் புரட்சிகர மாணவர் கழகம் (ஈராஸ்), தமிழ் ஈழ மக்கள் புரட்சி முன்னணி (இபிஆர்எல்எப்) ஆகிய அந்த அமைப்புகளுடன் இணைந்து 1984ம் ஆண்டு பிரபாகரன், ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கினார்.

இதில் டெலோ இந்திய அரசுக்கு சாதகமாக செயல்பட்டது. இந்தியாவின் முயற்சியால் இலங்கை அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது இந்திய அரசுக்கு சாதகமாக டெலோ நடந்து கொண்டது. இது பிரபாகரனுக்குப் பிடிக்கவில்லை.

இதையடுத்து 1986ம் ஆண்டு ஈழ தேசிய விடுதலை முன்னணியிலிருந்து வெளியேறினார் பிரபாகரன். மேலும், பிற போராளி அமைப்புகள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைய வேண்டும் என உத்தரவிட்டார்.

இதை ஏற்காமல் டெலோ இயக்கத்தினர் விடுதலைப் புலிகளுடன் மோதினர். இந்த மோதலில் விடுதலைப் புலிகள் வென்றனர். டெலோ இயக்கம் அழிக்கப்பட்டது. அதில் இருந்த வீரர்கள் பலர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தனர்.

அதேபோல பிற இயக்கங்களும் கூட அழிக்கப்பட்டு விட்டன. இறுதியில் தனிப் பெரும் இயக்கமாக மாறியது விடுதலைப் புலிகள் இயக்கம். யாழ் குடா முழுவதும் புலிகள் வசம் வந்தது.

1987ம் ஆண்டு கரும்புலிகள் எனப்படும் தற்கொலைப் படைப் பிரிவை உருவாக்கினார் பிரபாகரன். விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப் படைத் தாக்குதல் உலக அளவில் பயங்கரமானது. இந்த அமைப்பின் முதல் தாக்குதலில் இலங்கை ராணுவ முகாம் ஒன்று தகர்க்கப்பட்டு 40 வீரர்கள் பலியானார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலைப் படைத் தாக்குதல் நுட்பத்தை தெரிந்து கொண்டுதான், பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கமும் இதேபோன்ற தாக்குதலில் இறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக வளர்ந்து வந்த விடுதலைப் புலிகள், இதுவரை சந்தித்திராத மிகப் பெரிய சோதனைக்கு மத்தியில் 34வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளனர். இதுவரை வைத்திருந்த மிகப் பெரிய பரப்பளவு பூமியை அவர்கள் இழந்து நிற்கின்றனர். வெறும் 4 சதுர கிலோமீட்டருக்குள் புலிகள் இன்று முடக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும், ராணுவத்திற்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த பிரபாகரன் இன்று மிகக் குறுகிய இடத்திற்குள் முடக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் கூட இலங்கை ராணுவமும், அந்நாட்டு அதிகாரிகளும், அமைச்சர்களும் கூறுவதைப் போல இப்போதும் கூட விடுதலைப் புலிகள் தைரியமாக போரிட்டு வருகின்றனர். அவர்களிடம் உறுதித் தன்மை இருக்கிறது, ஆயுதங்களும் கை நிறைய இருக்கிறது என்பதில் உண்மை உள்ளது.

மிகச் சிறிய பரப்பளவுக்குள் முடக்கப்பட்ட நிலையிலும் கூட, அந்த இடத்திற்குள் கூட இலங்கை ராணுவத்தால் வேகமாக முன்னேற முடியாத அளவுக்கு புலிகளின் எதிர்த் தாக்குதல் வேகமாகவே இருப்பதாகவே நினைக்க வேண்டியிருக்கிறது.

புலிகளால் இனியும் பாரம்பரிய சண்டையில் ஈடுபட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களின் ஸ்பெஷல் தாக்குதல் ஆயுதமான கொரில்லா போர் முறையில் இன்னும் அவர்கள் வீழவில்லை. எனவே கொரில்லா போர் தாக்குதல் வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் என கருதப்படுகிறது.

தற்போது ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் பிரபாகரனும், அவரது தளபதிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சிறிய இடத்தைப் பிடிக்க ராணுவம் நிதானமாக முன்னேறி வருகிறது. இங்கு மட்டும் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருப்பதால் தாக்குதல் நடத்தினால் மிகப் பெரிய உயிரிழப்புகள் ஏற்படும் என்பதால் இலங்கை நிதானிக்கிறது.

இருப்பினும் இதைப் பொருட்படுத்தாமல் பெரிய அளவிலான நாசகார ஆயுதங்களை வைத்து ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களையே அழித்து விடும் திட்டத்திலும் இலங்கை அரசு உள்ளது.

ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருப்பதால், குறிப்பாக தமிழகத்தில் கொந்தளிப்பான நிலை இருப்பதால் நிதானம் காக்குமாறு இலங்கையை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது இந்தியா.

ஆனால் மே 13ம் தேதிக்குப் பிறகும் கூட இலங்கையை இந்தியா கட்டுப்படுத்தி வைத்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்..

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X