For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தற்காலிக நிம்மதியை தமிழர்களுக்குத் தந்திருக்கிறோம் - ஈழத்தையும் பெற்றுத் தர முயற்சிப்போம்

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: நாம் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கின்றோம். அடுத்து அவர்கள் பெறவேண்டிய ஈழத்தையும் பெற்று தருவதற்கு நம்மாலான முயற்சிகளை செய்ய இந்த பணியை நான் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மாலையில் பரவிய வதந்தி..

முதல்வர் கருணாநிதி உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்றுதான் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், நேற்று மாலை முதல்வர் குறித்து திடீரென வதந்தி பரவியது. எஸ்.எம்.எஸ். மூலம் பரவிய இந்த வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் இது சமூக விரோதிகள் திட்டமிட்டு பரப்பிய வதந்தி என்பது புரிந்தது. இதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு டிவி மூலம் முதல்வர் கருணாநிதி, அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபடி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே, வணக்கம், வாழ்த்துக்கள். நான் மருத்துவமனையில் நலமாக இருக்கிறேன்.

கடந்த பிப்ரவரி திங்கள் 11-ம் நாள் அபாயகரமான முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்கு ஆளாகி பிழைத்துக் கொண்டேன். இப்போது 2-வது கண்டம், இந்த கண்டத்திலும் உன்னை காணுகின்ற வாய்ப்பை மீண்டும் பெற்று மருத்துவமனையிலே மகிழ்ச்சியோடு இருக்கின்றேன்.

மகிழ்ச்சிக்கு காரணம் நான் உன்னோடு இல்லாவிட்டாலும், நான் இருப்பதை போல எண்ணிக்கொண்டு நீ பணியாற்றுவாய் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

இருப்பது ஒரு உயிர், அது போகப்போவது ஒரு முறை. ஆனால் அது நல்ல காரியத்திற்காக போகட்டுமே என்ற அண்ணாவின் பொன்மொழியை இருதயத்திலே தாங்கி இத்தனையாண்டு காலமாக இளமை முதல் பணியாற்றி வருகின்றவன் நான்.

தேர்தல் நெருங்கி விட்டது, தேர்தல் பணிகளில் நம்முடைய திராவிட முன்னேற்றக்கழக தோழர்களும், காங்கிரஸ் நண்பர்களும், அதே போல விடுதலை சிறுத்தைகளும் அயர்வின்றி ஆங்காங்கே, பம்பரம்போல் சுழன்று பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.

அதை கேட்க, கேட்க மருத்துவமனையிலே இருக்கின்ற எனக்கு மருந்தாக அவை ஆகின்றன. அந்த மருந்தை தொடர்ந்து எனக்கு அளித்துக்கொண்டிருப்பாய் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வீடு வீடாக செல்! வாக்குகளைக் கேள்! தெரு தெருவாக அலைந்திடு! வீதி வீதியாக சென்றிடு ஊரெல்லாம் சுற்றிடு! தமிழ்நாட்டை காப்பாற்றிடு! இந்தியத் தாயகத்தை பாதுகாத்திடு! -அதற்காகவே தி.மு.க கழகம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதே.

ஈழத்தையும் பெற்றுத் தருவோம்...

நாம் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கின்றோம். அடுத்து அவர்கள் பெறவேண்டிய ஈழத்தையும் பெற்று தருவதற்கு நம்மாலான முயற்சிகளை செய்ய இந்த பணியை நான் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன்

என்னை நம்பு! என்னை மறவாதே! நான் உன்னோடு என்றைக்கும் இருக்கின்றவன்! எங்களுக்காக நீ!

உங்களுக்காக நான்! என்பதை மறந்து விடாமல் இருவரும் சேர்ந்து பணியாற்றுவோம்! நான் நேரில் உன்னோடு இல்லாமலே பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய இருதயத்தால் உன்னோடு ஒன்றிப் போய் இருக்கின்றவன் எனக்கு நிம்மதியை வழங்கு!

வெற்றியை தேடித் தா...

வெற்றியை தேடித்தா! வெற்றி! வெற்றி! வெற்றி! அதைத்தவிர வேறு ஒன்றையும் எண்ணாதே! அதற்காக உழைத்திடு, அயர்வில்லாமல் உழைத்திடு என்று வேண்டி கேட்டுக்கொண்டு யார் எந்த பிரசாரம் செய்தாலும் என்ன பொய்யுரைத்தாலும், எத்தகைய பித்தலாட்ட பேச்சுகளிலே இறங்கினாலும் அவைகளையெல்லாம் நம்பாதே!

என்னுடைய அன்பிற்கும், பண்பிற்கும் உரிய பேராசிரியர்கள் பலரும், மூத்த வழக்கறிஞர்களும், மூத்த அறிஞர் பெருமக்களும், தமிழ்பண்பாடு மறவாத நம்முடைய தாயகத்தை சேர்ந்த என்னுடைய தனி மதிப்பிற்குரியவர்களும், விடுத்திருக்கின்ற அறிக்கையை நானும் கண்டேன்.

தமிழ்நாட்டிலே எப்படிப்பட்ட பண்பாட்டை, அரசியல் பண்பாட்டை வளர்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் அதற்கு அணு அளவும் சேதாரமில்லாமல், அவர்களுடைய அறிவுரைகளை கேட்டு அதற்கு ஏற்ப நட, நட என்று கேட்டு விடைபெறுகிறேன், வணக்கம் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X