For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம்-புதுவையில் 40ம் அதிமுக அணிக்கே-பரதன்

By Staff
Google Oneindia Tamil News

Bharathan
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் தெரிவித்தார்.
சென்னை வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும். தமிழகத்தைப் பொறுத்தவரை இப்படிப்பட்ட திருப்பங்கள் அடிக்கடி நிகழ்ந்திருகின்றன. இந்த முடிவை அறிந்த காங்கிரஸ் கட்சி குழப்பத்திலும், கலக்கத்திலும் உள்ளது.

எனவே தான் காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை இழந்து முரண்பட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர். ராகுல் காந்தியின் பேட்டியும் காங்கிரஸ் கட்சியின் குழப்பத்தையே வெளிப்படுத்துகிறது.

தேர்தலுக்கு பிறகு காங்கிரசுக்கு இடதுசாரிகள் ஆதரவு தருவார்கள் என்று அவர் கூறியுள்ளார். இதேபோல ஷீலா தீட்சித், ப.சிதம்பரம் போன்ற காங்கிரஸ் தலைவர்களும் குழப்பமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதன் மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெறாது என்பதை அவர்கள் சொல்லிவிட்டனர்.

மத்தியில் 3வது அணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. நாங்கள் அமைத்த உறுதியான கூட்டணி மூலம் ஒரிஸ்ஸா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் எங்களுக்கு கூடுதலாக இடங்கள் கிடைக்கும்.

தோல்வி பயம் காரணமாக திமுக, காங்கிரஸ் கூட்டணியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஜனநாயகத்துக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவால்.

மூத்த தலைவர் கருணாநிதி இதை கண்டிக்காதது வருந்தத்தக்கது. ஆயினும் அதையெல்லாம் புறக்கணித்து தமிழக மக்கள் அதிமுக கூட்டணிக்கு அமோக வெற்றி தருவார்கள்.

இலங்கையில் புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதை தடுத்தே ஆக வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கொள்கை. தொடர்ந்து இலங்கை தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அவர்கள் தனிநாடு என்ற முடிவுக்குத்தான் வர வேண்டிய நிலை ஏற்படும்.

தேர்தல் முடிந்த பிறகு ஆட்சி அமைப்பது பற்றி ஆலோசிக்க இம்மாதம் 19ம் தேதி எங்கள் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு கூட்டமும், அதன் பின்னர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தேசிய கவுன்சில் கூட்டமும் கூடும்.
அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டமும் இம்மாதம் 18ம் தேதி நடைபெறும். 3வது அணியின் சார்பில் யார் பிரதமர் என்பது குறித்து ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக் போன்ற இடதுசாரி கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி நல்ல முடிவெடுக்கப்படும்.

தேர்தலுக்குப் பிறகு நாங்கள் ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி எங்களுக்கு ஆதரவு தரலாம். மதவாத பாஜகவை தடுப்பதற்கு நாங்கள் தான் அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்பதில்லை. அவர்களும் எங்களுக்கு ஆதரவு தரலாம் என்றார் பரதன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X