For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தோல்வி உறுதியாகி விட்டதால் வாக்குச் சாவடிகளை கைப்பற்ற திமுக அணி திட்டம் - நெடுமாறன்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி: லோக்சபா தேர்தலில் படுதோல்வி உறுதியாகி விட்டதால் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டுக்களைப் போடவும், முறைகேடுகள் செய்யவும் திமுக, காங்கிரஸ் கூட்டணி திட்டமிட்டுள்ளது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் ஈழ தமிழர்களுக்கு தனி ஈழநாடு பெற்றுத்தர தான் உதவுவதாக கருணாநிதி வாக்குறுதி அளித்து இருக்கிறார்.

சென்ற தேர்தலில் அவரது அணிக்கு 40 தொகுதிகளிலும் மக்கள் வெற்றி தேடி தந்தார்கள். ஆனாலும் இந்த ஐந்தாண்டு காலம் ஈழத்தமிழர் நலன்களை காக்க அவர் எதையும் செய்யவில்லை. மாறாக இந்த ஐந்தாண்டு காலத்தில் தான் சிங்கள ராணுவத்தின் 60 சதவீத அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி மற்றும் தாராள நிதி உதவி செய்து இருக்கிறது. ஆனால் அதனை தடுக்க கருணாநிதி எதுவும் செய்யவில்லை. எனவே கருணாநிதி இப்போது சொல்வதை மக்கள் நம்ப தயாராக இல்லை.

தமிழக மக்களின் கொதிப்பு உணர்வினை உணர்ந்து இந்திய உளவுத்துறை கொடுத்த எச்சரிக்கையின் விளைவாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது தமிழக சுற்றுப்பயணத்தை ரத்து செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருக்க கூடிய ஒருவர் தேர்தல் நேரத்தில் தமிழக சுற்றுப்பயணத்தை ரத்து செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது இது தான் முதல் முறையாகும். இது தமிழக மக்களின் ஒன்றுபட்ட உணர்வுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

காங்கிரஸ்-தி.மு.க. அணி போட்டியிடுகிற பெரும்பாலான தொகுதிகளில் நான் சுற்றுப்பயணம் செய்து விட்டு வந்து இருக்கிறேன். காங்கிரஸ்-தி.மு.க அணி படுதோல்வி அடைய போவது வெளிப்படையாக தெரிகிறது. அந்த அணிக்கு தோல்வி பயம் ஏற்பட்டு விட்ட காரணத்தால் தான் எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை காவல்துறை மூலம் முடக்க பார்க்கிறார்கள்.

மேலும் தேர்தல் நாளன்று காவல் துறை மற்றும் சமூக விரோதிகளின் உதவியுடன் வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் திட்டத்தையும் காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி வகுத்து உள்ளதாக செய்திகள் கிடைத்து உள்ளது. எனவே தமிழக காவல் அதிகாரிகளை தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடாது.

துணை ராணுவத்தையும், பிற மாநில காவல் துறையினரையும் வைத்து நடத்தவேண்டும். அப்போது தான் தேர்தல் நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் நடைபெறும்.

இந்த தேர்தலில் ஈழத்தமிழர் பிரச்சினை முக்கிய பிரச்சினையாக உருவாகி இருக்கிறது. ஈழ தமிழர்களுக்கு ஆதரவான அணி தான் வெற்றி பெறும். ஈழ தமிழர்களுக்கு எதிரான அணி தோல்வியை தழுவும்.

தேர்தல் முடிவுக்கு பிறகு மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் ஈழத்தமிழர் பிரச்சினையிலும், ராமேசுவரம் மீனவர்களை பாதுகாக்கும் பிரச்சினையிலும் ஒழுங்காக இருக்கும். இது தமிழக தேர்தல் முடிவுகள் உணர்த்த போகும் பாடம் ஆகும்.

இலங்கையில் சிங்கள ராணுவம் முற்றுகையிட்ட பகுதிக்குள் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். அவர்களுக்கு கடந்த 10 நாட்களாக உணவு, மருந்து எதையும் சிங்கள அரசு அனுப்பாமல் அவர்களை பட்டினி போட்டு கொல்ல முயற்சிக்கிறது.

கடந்த 2 நாட்களில் மட்டும் 15 பேர் பட்டினியால் இறந்து இருக்கிறார்கள். குண்டு வீச்சில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திரிகோணமலைக்கு கப்பலில் ஏற்றி செல்வதற்கு வந்த செஞ்சிலுவை சங்க கப்பலை கூட சிங்கள கடற்படை தடுத்து நிறுத்திவிட்டது.

இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட உதவி பொருட்கள் எதுவும் அங்கு தமிழர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே ஐ.நா. அமைப்பு தலையிட்டு அதன் பொறுப்பில் நேரடியாக இந்த மக்களை காப்பாற்ற ஆவன செய்யுமாறு இந்திய அரசு வற்புறுத்தவேண்டும் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X