For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவாலே சமாளி-கரூர் தொகுதியில் கடும் போட்டி!

By Staff
Google Oneindia Tamil News

Tambidurai and Palanisamy
-கே.என்.வடிவேல்

கரூர் மக்களவைத் தொகுதியில் திமுக-அதிமுக இடையே கடும் போட்டி நிலவுவதால் அக்னி நட்சத்திரத்தை விட 'தேர்தல் அனலில்' சிக்கி தொகுதி தகிக்கிறது.

தமிழகத்தில் வட சென்னைக்கு அடுத்தபடியாக அதிக வேட்பாளர்களை (38) கொண்ட தொகுதி கரூர். என்றாலும் போட்டி திமுக-அதிமுக இடையே தான்.

திமுக வேட்பாளரும் மாநிலத்திலேயே பணக்கார வேட்பாளருமான கே.சி.பழனிசாமிக்கு சரியான போட்டியை ஏற்படுத்தியுள்ளார் அதிமுக வேட்பாளர் தம்பித்துரை.

திமுக தனக்கு ஆதரவாக அதிகபட்ச வாக்குகளை பெற முயற்சித்து வரும் நிலையில், அதிமுக ஓட்டுக்களை பிரித்தாலும் வியூகத்திலும் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து பாமகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், பாமகவில் இனாம் கரூர் நகர மகளிர் அணிச் செயலாளராக இருந்த டானியா பெண்கள் முன்னணி வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

காரணம், தளவாபாளையம் முதல் லாலாபேட்டை வரை காவிரிப் படுகையில் அரசு மணல் அள்ளி வருகிறது. இதற்கு விவசாயிகள் மத்தியிலும், பாமகவினர் மத்தியிலும் பலத்த எதிர்ப்பு உள்ளது.

இந்த ஓட்டுக்கள் அரசுக்கு எதிராகவே செல்லும் என்பதை உணர்ந்து அதிமுகவிற்கு அந்த வாக்குகள் பயன்பட்டு விடக்கூடாது என்பதை மனதில் வைத்தே டானியா களம் இறக்கப்பட்டுள்ளார்.

டானியா தனது பாமக பதவியைக் கூட ராஜினாமா செய்யாத நிலையில் அவசர அவசரமாக களம் இறக்கப்பட்டதன் பின்னணியில் பாமகவைச் சேர்ந்த இருவரின் கைங்கரியம் உள்ளது.

அவர்கள் குறித்து டாக்டர் அய்யாவின் கவனத்திற்கே கொண்டு சென்று விட்டோம். தேர்தல் நேரம் என்பதால் அய்யா மெளனம் காக்கச் சொல்லியுள்ளார். தேர்தலுக்கு பிறகு அவர்கள் யார் என்று அய்யாவே அடையாளம் காட்டுவார் என்றார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறுகையில், திமுக கூட்டணியில் இத் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே கணிசாமான வாக்கு உள்ளது. மற்ற கட்சிகளுக்கு சொற்ப அளவில் மட்டுமே வாக்கு உள்ளது. இதனால் திமுகவிற்கு காங்கிரஸ் ஓட்டுக்கள் பெரிய அளவில் கை கொடுக்கும்.

அதே போல, அரசு ஊழியர்களுக்கு 6வது சம்பளக் கமிஷன் உத்தரவுப்படி இடைக்கால நிவாரணமாக 3 மாத சம்பளத் தொகையாக பலருக்கு சராசரியாக ரூ. 1 லட்சம் வரை ஜாக்பாட்டாக கிடைத்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் பார்வை திமுக பக்கமே உள்ளது. அதுவும் பழனிச்சாமிக்கு சாதகம் என்றார்.

தொகுதியில் அதிமுக வீக்காக உள்ளது என்ற தகவல் தலைமைக்கு செல்லவே, திருச்சி மண்டல பொறுப்பாளர் கலியபெருமாள் கரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதிமுக நிர்வாகிகளை அழைத்து கரூரில் ரகசிய கூட்டம் போட்ட கலியபெருமாள் திமுகவினருடன் வரவு-செலவு வைத்துள்ளவர்கள் இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள். தொடர்ந்தால் பதவியில் தொடர முடியாது என்று எச்சரிக்கை மணி அடித்தார்.

அத்தோடு ஒதுங்கியிருந்த முன்னாள் அமைச்சர் சின்னசாமியை களத்தில் இறங்க வைத்துள்ளார். இதனால் அதிமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு, கரூர் வந்த ஜெயலலிதா முன்னாள் எம்.எல்.ஏ. கு.வடிவேலிடம் சில உத்தரவுகளை போட்டுவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் கு.வடிவேல் குரூப் வழக்கத்திற்கு மாறாக உற்சாகத்தில் முண்டாசு கட்டுகின்றனர்.

கரூரில் உள்ள அதிமுக நிர்வாகிகள் சிலருக்கு எதிர்தரப்பினர் இடையே நெருக்கம் இருப்பதை தெரிந்து தான் அதிமுக வேட்பாளர் தம்பித்துரை தரப்பில் சுயேச்சைகளை அள்ளி போட்டு நிற்க வைத்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் வாக்கு மையத்தில் அதிமுக கையே ஓங்கி இருக்கும்படி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சி நிலை என்ன என்பதை அறிய அவர்கள் வட்டாரத்தில் சிலரது வாயை கிளறியபோது, அதிமுகவுக்கு வாக்கு அதிகம் உள்ள விராலிமலை, புதுக்கோட்டை, மணப்பாறை தொகுதிகளில் மட்டும் எங்கள் கட்சி வேட்பாளர் தர்மலிங்கம் குறிவைத்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு என்ன நிர்பாந்தமோ தெரியவில்லை என்று பலரும் காதுபடவே கமெண்ட் அடிக்கின்றனர். இதை கேட்கவே எங்களுக்கு கஷ்டமாக உள்ளது என்கின்றனர்.

அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தது முதலே அக்கட்சிக்கு தான் கூட்டணியில் முதல் மரியாதை தங்களுக்கு இல்லை என்பதை நினைத்து களத்தில் மதிமுகவினர் மெளனம் காத்து வருகின்றனர்.

கரூர் தொகுதியை பொறுத்தவரை தேமுதிக வேட்பாளர் ராமநாதன் ஆரம்பகட்டத்தில் திமுக, அதிமுக வேட்பாளருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பம்பரம் போல் சுழன்றனர். ஆனால், தற்போது அந்த வேகம் இல்லை.

தேமுதிகவின் ஓட்டுக்கள் பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் உள்ளதால் அது அதிமுக ஓட்டுகளையே பிரிக்கும் என்று தெரிகிறது. தேமுதிகவின் செயல்பாட்டால் அதிமுகவினர் கொஞ்சம் அதிர்ந்து தான் போய் உள்ளனர்.
திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமிக்கு ஆதரவு குறித்து கரூர் மாவட்ட ரஜினி மன்ற தலைவர் கே.எஸ். ராஜாவிடம் கேட்டபோது அவர் நம்மிடம்,

இந்தத் தேர்தலில் ரசிகர்கள் யாருக்கு பிரியமோ அவர்களுக்கு இஷ்டம் போல் வாக்களிக்கலாம் என்று தலைவர் கூறிவிட்டார். மேலும் ரஜினியின் படத்தையோ, மன்ற கொடியையோ நாங்களும் சரி, மற்ற மன்றத்தினரும் சரி எந்த சூழ்நிலையிலும் யாருக்கு ஆதரவாகவும் பயன்படுத்த மாட்டோம்.

எங்கள் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 30 ஆண்டுகளாக எங்கள் மன்றம் நடத்தும் விழாக்களிலும், நல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியிலும் கே.சி. பழனிசாமி கலந்து கொண்டு தேவையறிந்து தேவையான உதவிகளை வழங்கி வருகிறார்.

அதனால் எங்கள் ரசிகர் மன்ற நிர்வாகள் ஒன்று கூடி பழனிசாமிக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளோம். நாங்களும் சரி, எங்கள் தலைவரும் சரி, என்றும் நன்றியை மறக்க மாட்டோம் என்றார்.

இதனால் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் உள்ள ரஜினி ரசிகர்கள் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்து வருவது திமுகவுக்கு பிளஸ் பாயிண்டாக உள்ளது.

தொழில் நகரமான கரூர் மாவட்டத்தில் கடும் மின்தடை காரணமாக பல தொழில்கள் நலிந்துவிட்டன. இதனால் தொழிலதிபர்கள், தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் கோபம் எதிர்ப்பு வாக்குகளாக சைலெண்டாக அதிமுகவுக்குப் பதிய வாய்ப்புள்ளது.

ஆனால் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சதிற்கு மேற்பட்ட வாக்குகளை 'மாயாஜால மந்திர வித்தை' காட்டி திமுக வேட்பாளர் கே.சி. பழனிசாமி தனதாகிக் கொண்டுள்ளார்.

அதே போல அதிமுக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட், தொழிலாளர்கள், அரசு எதிர்ப்பு ஓட்டுகள், ஈழ ஆதரவாளர்கள் என பல தரப்பு ஓட்டுக்களை அள்ளிவிடலாம் என்ற நம்பி்க்கையில் தம்பித்துரை உள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X